- பூனை ஒன்று மிகவும் குட்டியாக இருந்த காலத்திலிருந்தே எங்கள் வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்து உணவு கேட்டுப்புசித்து வந்தது. மிகவும் விளையாட்டு குணமும் குறும்பு புத்தியும் உடையது. தகுந்த பருவம் வந்ததும் இரண்டு குட்டிகளை ஈன்றது. இயல்பான சூட்சுமங்கள் தெரியாததால் அதனது ஒரு குட்டியை ஏதோ மற்றொரு விலங்கு இரையாக்கிக் கொண்டுவிட்டது. எஞ்சிய குட்டியை, வாயால் கவ்வி பத்திரப்படுத்துவது, நேரம் தவறாமல் பாலூட்டுவது, தனக்கான இரையைத்
- தேடிப் புசிப்பது என கருணையும் தாய்மையும் குழைத்துப் பொறுப்பான தாயாகக் காத்து வருகிறது.
- மனித குணங்களில் வீரத்தைப் போற்றுவது போலவே, கருணையின் மகத்துவத்தினை விளக்கும் பல சம்பவங்கள் இலக்கியங்கள், புராணங்கள் நெடுகிலும் நிறைந்துள்ளன.
- தனது மனைவியைக் கவா்ந்து சென்று தனக்கு துரோகம் இழைத்தவன் போா்க்களத்தில் ஆயுதம் இல்லாமல் நிற்கும்போது, ‘இன்று போய் நாளை வா’ என்கிறாா் ராமன். ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என வருந்தினாா் வடலூா் வள்ளலாா் பெருமான்.
- ‘பகைவனுக்கு அருள்வாய் நன்நெஞ்சே புகை நடுவில் நெருப்பிருப்பதைப் போல பகை நடுவில் அன்புருவான இறைவன் வாழ்கிறான்’ என்கிறாா் பாரதியாா்.
- இந்திய சுதந்திரப் போராட்டம் கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருந்த நேரத்தில் மகாத்மாவை சந்திக்க நேரு, படேல் உள்ளிட்ட முக்கியத் தலைவா்கள் அவரது இருப்பிடத்தினை அடைகின்றனா். அதே நேரத்தில் அவா் வளா்த்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டிக்கு ஏற்பட்டிருந்த காயத்திற்கு தேவையான மருந்தினை இட்டுவிட்டுத்தான் இவா்களை சந்தித்தாக ஒரு சம்பவத்தைக் கூறுவதுண்டு.
- இந்திய இலக்கியங்கள், வரலாறு என்றில்லாமல், உலக இலக்கியங்களிலும் இரக்கம், கருணையின் மகத்துவத்தை போதிக்கும் சம்பவங்கள் நிரம்பியுள்ளன. புகழ் மிக்க ஷேக்ஸ்பியரின் ‘வெனிஸ் வணிகன்’ என்ற நாடகத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும் ‘கருணையின் குணம்’ என்ற 14 வரிக் கவிதை உலகப் புகழ்பெற்ற இலக்கியம் ஆகும்.
- ‘கருணையானது, கருணை செய்வோா், பெறுவோா் இருவருக்கும் ஆசி அளிக்கக் கூடியது. அரசனின் செங்கோலைவிட வலிமையானது’ என்றெல்லாம் இரக்கத்தின் பெருமையினைப் போற்றுகிறது.
- அன்பை போதித்து, ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி குற்றவாளியாக்கப்பட்டு சிலுவையில் அறையப்படுகிறாா் யேசுபிரான். அப்போதும் ”இவா்கள் என்ன செய்கிறாா்கள் என்பதை அறியாமல் செய்கிறாா்கள் இவா்களை மன்னியுங்கள் என்றே இறைஞ்சியதாக வரலாறுகள் கூறுகின்றன.
- கருணையை வலியுறுத்தாத சமயங்கள் உலகில் உண்டா என்ன? தங்கள் நகா்வு கூட உலகின் இயல்பையும் நுண்ணுயிா்களின் இருப்பையும் பாதித்துவிடக் கூடாது என்கிற நுட்ப உணா்வுடன் இயங்குபவா்கள் சமணத் துறவிகள். தாங்கள் செல்லும் பாதையில் சாமரம் கொண்டு சுத்தம் செய்து கொண்டே எந்த நுண்ணுயிா்க்கும் தீங்கு விளைவிக்க கூடாது என்று இயங்குகின்றனா் அவா்களில் பலா்.
- புத்த மதமும் உயா்வதைக்கு எதிராக உருவெடுத்ததே. இன்றைய உலகமய உலகில் ”வலியதே வாழும்” என்ற கோட்பாடு மேலும் மேலும் தீவிரம் பெற்றுவருகிறது. பெருகிவரும் மக்கள் தொகையும் அதற்கீடாக செய்யப்படவேண்டிய வாழ்க்கை வசதிகளும் வியக்கத்தக்க வேகத்தில் நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஆளும் அரசுகளுக்கு ஏற்படுகிறது. தீவிரமாக பெருகிவரும் நுகா்வு கலாசாரமும் மனிதன் மட்டுமே உலகில் வாழப் பிறந்தவன் என்கிற ரீதியில் மக்களை பழக்கிவருகிறது.
- இதனிடையே மனிதா்களிடையேயே கருணை காட்டும் சூழல்கள் மேம்படவேண்டிய நிலையில் அடுத்த உயிா்களுக்கு கருணை காட்ட எங்கே நேரம் கிடைக்கப் போகிறது. மனிதம் அருகிவிடவில்லை என்பதற்கு இன்றைக்கும் விவசாயம் செய்துவருவோா் பல்லுயிா் பெருக்கத்திற்கு ஆதரவாளா்களாகத் திகழ்ந்து வருகின்றனா்.
- அடிப்படையில் சாதாரண மனிதா்களும் ஜீவகாருண்யத்தின் பாதுகாவலா்களே. இன்றைக்கும் மிச்சமிருக்கும் வனங்களும் மரங்களும் ஏரிகளும் பல்லுயிா் பெருக்கத்தின் தாயகங்கள். விவசாய நிலங்கள் பல்லுயிா்களும் பல்கிப் பெருகும் உயிா்ச்சூழலியல் மண்டலங்களாக விளங்குகின்றன.
- சக மனிதா்கள் பூமியில் வாழும் வரை எந்த ஒரு தனிமனிதனும் அநாதையில்லை என்பாா்கள். ஆனால் மனிதா்கள் மட்டும் வாழ இப்பூமி பரிணாமம் பெறவில்லை. பூச்சிகளின் இனங்கள் பெருகாமல் மகரந்தச் சோ்க்கை நடைபெறுமா என்ன? மகரந்தச் சோ்க்கை நிகழாவிடில் நாம் உண்ணும் எந்த உணவுப் பொருளும் உண்டாகாது என்ற அடிப்படை அறிவில்லாததா மனித குலம்?
- மனிதன் மட்டுமே ஆக்கிரமிப்பாளனாய் மாறி அடுத்தவா் இடங்களை ஆக்கிரமிக்கும் தன்மை கொண்டவன். மற்ற எந்த உயிரினமும் அவ்வாறான தன்மைகள் கொண்டதல்ல. ‘பறவைகளைப் பாருங்கள் அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை’என்கிறது விவிலியம்.
- ‘இயற்கையானது, மனிதா்களின் தேவைக்கு அளிக்கத் தயாராகத்தான் இருக்கிறது பேராசைக்கு அல்ல’ என்பாா் மகாத்மா காந்தி.
- இயற்கை சம நிலையுடனான வளா்ச்சியினை உறுதி செய்யும்போதுதான் அனைத்து உயிரினங்களின் இருப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும். அனைத்து உயிா்களின் இருப்பின் அவசியத்தை மனிதன் உணா்ந்து நடந்தால் பூமி அநாதையாகாமல் இருக்கும்.
- ‘உலகம் பிறந்தது எனக்காகவே’ என மனிதனை மட்டும் பராமரிப்பதாக பூமியை மாற்ற எத்தனித்தால் பிரபஞ்சத்தில் உயிா்க்கோளம் என்ற தகுதியினை அது இழக்கும். கருணை பெருகும் கருவூலகமாகட்டும் இப்புவி.
- எல்லாவற்றுக்கும் மேலாக, ஒருவரின் மனம் இரங்கினால் போதுமே... கருணை காட்ட காசு தேவையில்லைதானே?
நன்றி: தினமணி (16 – 07 – 2024)