- மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுப்பதில் ஏற்படும் கால தாமதத்தை, அக்கைதிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வதால், கருணை மனுக்களின் மீது விரைந்து முடிவெடுக்கும்படி மாநில அரசுகளுக்கும் உரிய அதிகாரிகளுக்கும் உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
- மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூரில் 2001இல் 13 குழந்தைகளைக் கடத்திய இரண்டு சகோதரிகள், அவர்களில் ஒன்பது பேரைக் கொடூரமாகக் கொலை செய்தனர். இந்த வழக்கில் மரண தண்டனை பெற்ற இவர்களின் கருணை மனுக்கள் மீது முடிவெடுக்க ஏழரை ஆண்டுகளுக்கும் மேல் காலதாமதம் ஏற்பட்டது.
- இதைக் குறிப்பிட்டு, மரண தண்டனையிலிருந்து விடுவிக்க அவர்கள் கோரினர். இதை ஏற்றுக் கொண்ட மும்பை உயர் நீதிமன்றம், மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மகாராஷ்டிர அரசு மேல்முறையீடு செய்ததில்தான், நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, சி.டி.ரவிக்குமார் அமர்வு மேற்கண்ட அறிவுரையை வழங்கியுள்ளது. மேலும் இவ்விரு பெண்களும் ஆயுள் தண்டனையை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- மரண தண்டனைக் குறைப்பைப் பரிசீலிக்கும்போது கருணை மனு மீது முடிவு எடுக்க ஏற்பட்ட காலதாமதத்தை கருத்தில் கொள்ளத்தான் வேண்டும் என்பதை உறுதிசெய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அதேவேளையில் குற்றத்தின் தீவிரத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறது. தண்டனைக் குறைப்பு பெற்ற மரண தண்டனைக் கைதிகள் எஞ்சிய வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றம் தெளிவு படுத்தி இருக்கிறது.
- மரண தண்டனைக் கைதிகள் நீண்ட காலம் சிறையில் இருப்பதைக் காரணமாகக் காட்டி விடுதலையை எதிர்பார்க்க முடியாது என்பதுதான் இதன் பொருள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஓரளவுக்கு ஆறுதல் அளிக்கும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்றவர்கள் காலதாமதத்தின் காரணமாக, ஆயுள் தண்டனையாகத் தண்டனைக் குறைப்பு பெற்று, பின்னர் விடுதலையான நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.
- இந்தியாவில், பல சந்தர்ப்பங்களில் சட்டப் படிநிலைகளைக் கடந்து வரும்போது பாதிக்கப் பட்டவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் இயற்கையாகவே காலதாமதம் ஏற்படுகிறது. கீழ் நீதிமன்றங்களில் மரண தண்டனை பெறுவோர், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபிறகு, விசாரணைக் காலம் முழுவதுமே அவர்கள் சிறையில் இருந்தாக வேண்டும். இதைக் கருத்தில்கொண்டு மேல்முறையீட்டு விசாரணைகளையும் விரைவாக முடிக்க வேண்டும் என்பதை நீதிமன்றங்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- அது போலவே, கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் நிகழும் காலதாமதமும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். குடியரசுத் தலைவர், ஆளுநர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றாலும் மத்திய, மாநில அரசுகளின் பரிந்துரையின் பேரில்தான் அந்த முடிவுகளை அவர்கள் எடுக்க முடியும்.
- எனவே, இனியாவது கருணை மனுக்கள் மீது விரைந்து முடிவு எடுக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், அதற்குக் காலக்கெடு விதிப்பது பற்றியும் பரிசீலிக்க வேண்டும்.
நன்றி: தி இந்து (21 – 04 – 2023)