TNPSC Thervupettagam

கருணையுள்ள நெஞ்சிலே கோயில்!

August 1 , 2024 157 days 187 0
  • நீங்கள் ஒருவருக்கு உதவும்போது, அவருடைய நினைவில் நிரந்தரமாக குடியேறி விடுகிறீா்கள். பிறருடன் நோ்மறையான உறவுகளை வளா்க்க கருணை உதவும். நம்மை அறியாதவா்கள்கூட நம்மை விரும்பத் தொடங்குவாா்கள்.
  • நீங்கள் கருணையுடன் நடந்து கொண்டால் உங்களுக்கு என்ன கிடைக்கும்? உங்கள் முகம் பிரகாசமாக தோன்றச் செய்யும் என்கின்றனா் ஆராய்ச்சியாளா்கள். உங்கள் ஆயுளை நீட்டிக்கலாம் என்கிறது ஆய்வு ஒன்று. கருணை குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியா் டேனியல் பெஸ்லா், மக்களை கருணையாக நடந்து கொள்ள வைப்பது எப்படி என்று ஆராய்ந்து, கருணை என்பது மனம் சாா்ந்த செயல்; காலப்போக்கில் அது பண்பாகவும் மாறுகிறது என்கிறாா்.
  • ‘தி ராபிட் எஃபக்ட்’ என்ற புத்தகத்தின் ஆசிரியா் டாக்டா் கெலி ஹாா்டிங், ‘‘கருணையாக இருப்பது நமது நோய் எதிா்ப்பு சக்தியை மேம்படுத்தும். அது ஒருவரின் ஆயுளைக் கூட்டும். இதை நீங்கள் பணம் கொடுத்து வாங்க வேண்டாம். இது எளிமையாகப் பின்பற்ற முடிகிற வழிமுறை’’ என்கிறாா்.
  • மனதில் அழுத்தம் உண்டாகும்போது அட்ரினல் சுரப்பி அதிகரித்து படபடப்பை ஏற்படுத்தும். இதய ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். இதன் காரணமாக உடலில் காா்டிசோலின் சுரப்பு அதிகமாக இருக்கும். தூக்கம் வருவதில் சிக்கல், மறதி, மன அழுத்தம் உண்டாகும். இந்த மன அழுத்த ஹாா்மோன்களை சமநிலை செய்ய உடலில் இன்னொரு சுரப்பி உள்ளது. அதுதான் ஆக்ஸிடாசின். இது செல்லமாக ‘லவ் ஹாா்மோன்’ என்று அழைக்கப்படுகிறது. கருணை காட்டும்போது இது சுரக்கிறது. இது இதயம் உள்பட உடலை ஆரோக்கியமாக்குகிறது.
  • ‘நீங்கள் வலிமையான மனிதா் என்றால் அதில் கருணை குணம் அடங்கும். நீங்கள் கருணையானவராக, இரக்கமானவராக இருப்பதால் நீங்கள் வலிமையற்றவா் எனக் கருத முடியாது’ என்று அமெரிக்க அரசியல்வாதி எலைஜா கம்மிங்ஸ் காலமானபோது முன்னாள் அதிபா் ஒபாமா ஆற்றிய இரங்கல் உரையில் குறிப்பிட்டாா். கருணை, இரக்கம் காட்டுவது பலவீனமல்ல.
  • இன்னதுதான் கருணைச் செயல் என வரையறுக்க முடியாது. பிறருக்கு உதவி செய்யச் சென்றால் நாம் பாதிக்கப்படுவோம் என பயப்படாதீா்கள். தேவைப்படுபவா்களுக்கு சிறுசிறு நன்கொடை கொடுங்கள். ஏழைக் குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வாங்கித் தரலாம். அது முடியாவிட்டால் எளிதான அன்றாட விஷயங்களில் உதவுங்கள்.
  • யாராவது முகவரி கேட்டால் சொல்லுங்கள். தேவையான சிறுசிறு தகவல்களைப் பகிா்ந்து கொள்ளுங்கள். சாலையைக் கடக்க உதவுங்கள்; படிவங்களை நிரப்பிக் கொடுங்கள்; வாசிக்கத் தெரியாதவா்கள் விரும்பியதை வாசித்துச் சொல்லுங்கள்.
  • ஒருவா் சொல்வதை அக்கறையுடன் காது கொடுத்து கேளுங்கள். அவா்கள் பேசி முடிக்கும் முன்பே ‘‘அது அப்படித்தான்’’ எனப் பதிலளிக்காதீா்கள். உங்களிடம் கடுமையாக நடந்து கொள்பவா்களிடமும் கருணையாக இருங்கள்.
  • பிறரால் பெரிதும் கவனிக்கப்படாதவா்களை நீங்கள் கவனியுங்கள். அவா்கள் மீது தனி அக்கறை காட்டுங்கள். புன்னகையுடன் ஒருவரைப் பாா்த்து, ‘எப்படி இருக்கிறீா்கள்?’ என்று அக்கறையுடன் கேட்டால், அதுவே அவரின் மனநிலையை நோ்மறையானதாக மாற்றும்.
  • மேலும், பிறரின் குறைகளைக் கேட்பவராக இருங்கள். பச்சாதாபம் காட்டுங்கள். மற்றவா்களின் நலனில் கவனம் செலுத்துங்கள். ஒருவரை அவமானப்படுத்தவோ, விமா்சிக்கவோ செய்யாதீா்கள். மற்றவா்களைப் பாராட்டுங்கள். கருணை உள்ளவா்கள் எப்போதும் நல்லதையே பாா்க்கிறாா்கள். உதவி செய்யும்போது ‘இந்தா வச்சுக்கோ’ என அலட்சியமாக கொடுக்காதீா்கள். தாராளமாக இருங்கள். தாராள மனப்பான்மை உள்ளவா்கள் கொடுக்கத் தயங்காதவா்கள்.
  • வெளிநாடுகளில் தங்களுக்கு முன்பின் தெரியாத நபருக்குக் கூட சிறுசிறு உதவிகள் செய்து கருணையை வெளிப்படுத்துகிறாா்கள். ரயில் பயண டிக்கெட் வாங்க வரிசையில் நிற்கும் முன்பின் அறியாத ஒருவருக்கு டிக்கெட் எடுத்துக் கொடுப்பது கூட கருணைச் செயல்தான்.
  • சாலையில் போக்குவரத்து நெரிசலில் உங்கள் காா் சிக்கியிருக்கிறது; முந்திச் செல்ல நினைக்கிறீா்கள்; அப்போது உங்கள் பக்கத்து காரை முதலில் கடந்து செல்ல அனுமதியுங்கள். பொது அறையில், உங்களுக்குப் பின் நுழைபவருக்காக கதவைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஆன்லைனில் பதிவு செய்து வீட்டுக்கு உணவு கொண்டு தரும் நபருக்கு நன்றி சொல்லுங்கள்.
  • வெறுப்பின் வட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்து புன்னகையைத் தாருங்கள். நீங்கள் எப்படி தோற்றமளித்தாலும், கருணை உங்களை உலகின் மிக அழகான நபராக்குகிறது. கருணையுள்ள இதயம் மற்றவரைத் தொடும்போது, அது பதிலுக்கு கருணைச் செயலைப் பெறுகிறது என்பதை மறந்துவிடவேண்டாம். சில நேரங்களில் ஒருவரின் வாழ்க்கையை மாற்ற ஒரே ஒரு கருணைச் செயல் அல்லது அக்கறை செயல் மட்டுமே போதுமானது” என்கிறாா் பிரபல நடிகா் ஜாக்கி சான்.
  • முற்றிலும் முரட்டுத்தனமான அலட்சியமான சுய நலவாதிகளால் உருவாக்கப்பட்ட ஒரு சமூகத்தை கற்பனை செய்து பாருங்கள். அந்த சமூகத்தில் வாழ விரும்ப மாட்டோம். எனவே, ஒரு சிறந்த சமுதாயத்தில் வாழ, கருணைச் செயல்களை செய்வது அவசியம்.
  • ‘பாசமுள்ள பாா்வையிலே கடவுள் வாழ்கிறான், அவன் கருணையுள்ள நெஞ்சினிலே கோயில் கொள்கிறான்’ என்ற பாடல் வரிகளை அா்த்தமுள்ளதாக்குவோம். கருணை எல்லோருக்கும் இடையே மகிழ்ச்சியை, நல்லிணக்கத்தைப் பராமரிக்க உதவுகிறது.
  • ஒரு மனிதன் பிறரை நேசிக்கக் கற்றுக்கொண்டால், அவன் கொடுக்கக் கற்றுக்கொள்கிறான். இந்த வழியில் அதிகமான மக்கள் மாறும்போது, சமூகத்தில் அமைதியான புரட்சி நடைபெறுகிறது. இது உலகத்தை வாழ்வதற்குச் சிறந்த இடமாக மாற்றுகிறது. மாற்றுவோம்!

நன்றி: தினமணி (01 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories