- திருவண்ணாமலை, புதுக்கோட்டை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நகராட்சிகளைத் தரம் உயர்த்த தடையாக உள்ள அம்சங்களைத் தளர்த்த வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் கடந்த ஜூன் 28-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
- மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்துவதற்கான வரையறைகளான மக்கள்தொகை, வருமான அளவுகோல் போன்றவை தடையாக இருப்பது கண்டறியப்பட்டதால் அதைப் பொருட்படுத்தாமல் இந்த நகராட்சிகளை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- மாநகராட்சியாகத் தரம் உயர்த்தப்படுவதால், சாலைகள், புதை சாக்கடை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் சிறப்பாக மேற்கொள்ளப்படும் என்றும் இந்தப் பகுதிகளில் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இதேபோன்று, மாநிலம் முழுவதும் 600-க்கும் மேற்பட்ட ஊராட்சிப் பகுதிகளைப் பேரூராட்சிகளாக மாற்றுவது அல்லது ஏற்கெனவே இருக்கும் பேரூராட்சி, நகராட்சி அல்லது மாநகராட்சிகளோடு இணைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இது தொடர்பான பரிந்துரையை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களுக்குத் தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது.
- கோவையைப் பொருத்தவரை, அருகில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியுடன் இணைக்கலாமா, வேண்டாமா என ஊராட்சிகளில் வசிக்கும் மக்களிடம் கருத்து கேட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
- ஆனால், இதுபோன்று ஊராட்சிகளை மாநகராட்சிகளுடன் இணைப்பதற்கு ஆங்காங்கே எதிர்ப்பு எழுந்துள்ளது. தங்கள் ஊராட்சியை திருவண்ணாமலையுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து துர்க்கை நம்மியந்தல் ஊராட்சியைச் சேர்ந்த பொது மக்கள் கடந்த மார்ச் மாதத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- திருப்பூர் அருகே உள்ள இடுவாய் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பிரதிநிதி மட்டுமல்ல, ஆளுங்கட்சியான திமுக, அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பிரதிநிதிகளும், பல்வேறு குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
- இதேபோன்று, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பல ஊராட்சிகளிலும் உள்ள பொது மக்கள், அரசியல் கட்சியினர் ஆகியோர் மாவட்ட ஆட்சியர், உள்ளூர் அதிகாரிகளிடம் இது தொடர்பாக மனு அளித்து வருகின்றனர்.
- மாநகராட்சியாகும்போது சாலை வசதிகள் மேம்படும்; இதுவரை கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்படாத புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படும்; பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் ரூ.1.20 லட்சம் மட்டும் நிதி வழங்கப்படுகிறது, மாநகராட்சிப் பகுதியானால் ஒரு நபருக்கு ரூ.2.10 லட்சம் வரை வீடு கட்ட பணம் கிடைக்கும்; நிலம், வீட்டுமனை, வீடு ஆகியவற்றின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துவிடும்; இதுவரை கிராம ஊராட்சியாக இருந்த பகுதிகளில் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் கிளைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும்; மாநகராட்சியானால் மின் விநியோகம் சீராகவும், மின்தடை குறைவாகவும் இருக்கும் போன்றவை சாதக அம்சங்களாக குறிப்பிடப்படுகின்றன.
- கோவை மாநகராட்சியுடன் அருகிலுள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகள் கடந்த 2011-ஆம் ஆண்டு இணைக்கப்பட்டு 60 வார்டுகள் என்று இருந்தது 100 வார்டுகளாக ஆக்கப்பட்டது. ஆனால், இணைக்கப்பட்ட பகுதிகளில் 13 ஆண்டுகளாகியும் சாலை, குடிநீர், புதை சாக்கடை உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகள் மேம்படுத்தப்படாமல் பழைய நிலையே தொடர்வதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
- சிறந்த, எளிதான நிர்வாகத்துக்காக மாவட்டங்கள், வருவாய் கோட்டங்கள், வட்டங்கள், துணைப் பதிவாளர் அலுவலகங்கள், ரேஷன் கடைகள், காவல் நிலையங்கள், மின்வாரிய அலுவலகங்கள் போன்றவற்றை அரசே பிரிக்கும்போது, மாநகராட்சி எல்லையை மட்டும் ஏன் விரிவாக்க வேண்டும் என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
- மாறாக, ஏழை-எளியோருக்கு வேலைவாய்ப்பு தரக்கூடிய 100 நாள் வேலைத் திட்டம் பறிபோகும்; ஊராட்சிகளில் மத்திய அரசால் செயல்படுத்தப்படும் ரூ.12 ஆயிரம் மதிப்பிலான தனிநபர் இல்லக் கழிவறைகள் திட்டம் கிடைக்காது; இதுவரை ஊராட்சித் தலைவர், உறுப்பினர்களை எளிதில் அணுகிவந்த நிலை மாறும்; மாநகராட்சியானால் வீட்டுக் குடிநீர்க் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி பல மடங்கு அதிகரிக்கும்; பத்திரப் பதிவுக்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டும்; மத்திய அரசின் கிராமச் சாலை மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்த முடியாது போன்றவை பொது மக்களின் அச்சமாக உள்ளது.
- மேலும், தங்களுக்கு வேண்டிய பல்வேறு விதமான சான்றிதழ்களைப் பெறுவது சிரமமாகி விடும்; வீட்டு மனை, வீடு கட்டுவதற்கான வரைபட அங்கீகாரம் பெறுவதற்காக மாநகராட்சி அதிகாரிகளை அணுக பல மாதங்கள் அலைய வேண்டி இருக்கும்; ஊராட்சிகளில் எளிதாகப் பெறப்படும் மின் இணைப்பு, அரசின் நலத் திட்டங்களைப் பெறுவதும்கூட கடினமாகிவிடும் என்பதும் பொதுமக்களின் கவலையாக உள்ளது.
- மக்கள் நலனுக்காகத்தான் ஊராட்சிப் பகுதிகள் இணைக்கப்பட உள்ளன என்று கூறும் அரசு, இது குறித்து ஊராட்சிப் பகுதிகளில் கருத்துக் கேட்புக் கூட்டத்தை பாரபட்சமின்றி நடத்தி அந்தக் கூட்டங்களில் பொதுமக்கள் கூறும் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும். அவர்களது அச்சம் களையப்பட்டு இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
நன்றி: தினமணி (10 – 07 – 2024)