TNPSC Thervupettagam

கருத்துச் சுதந்திரத்தைப் பறிக்காத கட்டுப்பாடுகள் வேண்டும்

May 15 , 2024 65 days 103 0
  • இழிவும் ஆபாசமும் மிக்க உள்ளடக்கங்களை வெளியிடுவதன் மூலம் சில யூடியூப் இணையதளங்கள் சமூகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துவருவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்திருப்பது ஆழ்ந்த பரிசீலனைக்குரியது.
  • யூடியூப் இணையதளம் ஒன்றை நடத்திவரும் சவுக்கு சங்கர், மகளிர் காவலர்களை இழிவாகப் பேசியது உள்ளிட்ட காரணங்களுக்காகப் பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னொரு யூடியூப் இணையதளத்துக்காக சங்கரைப் பேட்டியெடுத்த ஊடகர் ஜி.ஃபெலிக்ஸ் ஜெரால்ட், இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக் கருதி, முன்ஜாமீனுக்கு மனுதாக்கல் செய்திருந்தார்.
  • தற்போது அவரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இதற்கிடையே அவரது முன்ஜாமீன் மனு மீதான விவாதத்தின்போது, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு, யூடியூப் இணையதளங்கள் குறித்த மேற்கூறிய கருத்தை வெளிப்படுத்தியதோடு, அவற்றின் விரும்பத்தகாத செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
  • பொதுமக்களின் செய்தி நுகர்வு குறித்த உலகளாவிய ஆய்வு அறிக்கை (2023) ஒன்று யூடியூப், வாட்ஸ்ஆப் ஊடகங்கள் அளிக்கும் செய்திகளை முதன்மையாக நாடும் இந்தியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருவதாகத் தெரிவித்தது.
  • நிறுவனமயப்பட்ட ஊடகங்கள் பலவும் மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் கட்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகின்றன என்னும் கருத்து பரவலாக வேரூன்றியிருப்பதே யூடியூப் இணையதளங்கள் மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு முக்கியமான காரணம் என்று அனுபவம் மிக்க ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
  • சுயாதீனமான யூடியூப் ஊடகங்களில் பெரும்பாலும் ஒருவர் அல்லது ஒரு சிலர் மட்டுமே ஊடகவியலாளருக்கான பணியை மேற்கொள்கின்றனர். இதனால் நிறுவனமயப்பட்ட அச்சு, தொலைக்காட்சி ஊடகங்களில் உள்ளதுபோல் ஊடகர்களுக்கு இடையிலான விவாதங்களும் செய்திகளின் உண்மைத்தன்மையைச் சரிபார்ப்பதற்கான பலகட்டப் பரிசோதனைகளும் அங்கு நிகழ்வதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
  • பெரிய அளவிலான கட்டுப்பாடுகள் இல்லாததால் உண்மைக்குப் புறம்பான தகவல்களையும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான அவதூறுக் கருத்துகளையும் அள்ளித் தெளிப்பதைப் பல யூடியூப் தளங்கள் முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளன.
  • குறிப்பாக, பெண் பிரபலங்களைப் பாலியல்ரீதியாக அவதூறு செய்யும் பலர் யூடியூப் தளங்களில் அதிகம் பின்தொடர்பவர்களுடன் வலம்வருகிறார்கள். இவர்கள் ஆபாசச் சொற்களை உதிர்ப்பதற்கும் தயங்குவதில்லை. இந்தப் போக்கு செய்தி நுகர்வுக் கலாச்சாரத்தையே ஒட்டுமொத்தமாகச் சீரழித்துவருகிறது.
  • யூடியூப், ஓடிடி இணையதளங்களை, தகவல் ஒலிபரப்பு சேவை (ஒழுங்காற்று) மசோதா 2023இன் கீழ் மத்திய அரசு கொண்டுவர உள்ளது. மேலும், பொய்த் தகவல்களை வெளியிட்டதாகப் பல யூடியூப் தளங்கள் மத்திய அரசின் உத்தரவின் பெயரில் நீக்கப்பட்டுள்ளன.
  • ஆனால், இந்த நடவடிக்கைகள் மத்திய அரசுக்கு எதிராகக் கருத்துகளை வெளியிடும் இணையதளங்கள் மீது மட்டுமே பாய்வதாக விமர்சிக்கப்படுகிறது. அதேபோல், தங்களை விமர்சிக்கும் இணையதளப் பிரதிநிதிகள் மீது மட்டுமே அந்தந்த மாநில அரசுகள் வழக்கு தொடர்வதும் நடைமுறை ஆகிவிட்டது.
  • யூடியூப் தளங்களுக்கு ஒழுங்குமுறைகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். அதே நேரம், இந்தக் கட்டுப்பாடுகள் அரசுக்கு எதிரான நியாயமான விமர்சனங்களை முடக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்படக் கூடாது.
  • அரசின் தவறுகளை விமர்சிக்கும் உரிமையைப் பறிக்காமல், அவதூறுக் கருத்துகளை, ஆபாச உள்ளடக்கங்களைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். யூடியூபில் இயங்கும் சுயாதீன ஊடகர்களும் ஊடகவியல் விழுமியங்களைப் பின்பற்றிப் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.

நன்றி: தி இந்து (15 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories