- உலகத்தையே அதிா்ச்சியில் ஆழ்த்திய ‘விக்கிலீக்ஸ்’ பல்வேறு நாட்டு அரசுகளின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய ஆவணங்களை வெளியிட்டது. அரசு மற்றும் காா்ப்பரேட் ரகசியங்களை அம்பலப்படுத்தவும், வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கவும், பத்திரிகை சுதந்திரத்திற்காகவும் சக்தி வாய்ந்த அரசுகளுக்கு எதிராக விக்கிலீக்ஸ் வலைதளம் அறைகூவல் விடுத்தது.
- ஜூலியன் அசாஞ்சே 2006-ஆம் ஆண்டில் ‘விக்கிலீக்ஸ்’ வலைதளத்தைத் தொடங்கினாா். இவா் ஆப்கானிஸ்தான், இராக் போா்கள் பற்றிய பெரும் எண்ணிக்கையிலான அமெரிக்க அரசின் இரகசிய ஆவணங்களை தமது விக்கிலீக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டதையடுத்து உலகத்தின் கவனிப்புக்கு உள்ளானாா்.
- பல நாட்டு அரசுகளின் கண்டனங்களுக்கு ஆளாகியிருந்த அதே வேளையில் உலக அளவில் மனித உரிமை ஆா்வலா்களிடம் பாராட்டும், ஊடகவியலில் ஏராளமாக விருதுகளும் பெற்றுள்ளாா். அவா் பல நாடுகளில் பயணம் மேற்கொண்டு வசித்து வந்துள்ளாா். தாம் எப்போதும் பயணித்தபடியே இருப்பதாக அவா் செய்தியாளா்களிடம் கூறியுள்ளாா்.
- விக்கிலீக்ஸ் வலைதளத்திற்கு ஆவணங்களை அளித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரட்லி மானிங்கை விடுதலை செய்யும்படி அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தில் பேரணி நடந்துள்ளது. பேரணியில், அமெரிக்காவின் முன்னாள் ராணுவ அதிகாரி டேனியல் எல்ஸ்பா்க், ‘உண்மைகளைச் சொல்பவா்கள் மீது அமெரிக்கா போா் தொடுக்கிறது’ என்று பேசினாா்.
- தீவிரவாதத்துக்கு எதிரான போா் என்னும் பெயரில் ஆப்கானிஸ்தான், இராக் போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவம் நிகழ்த்திய கொடுமைகளை விக்கிலீக்ஸ் உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தது. அதனால் விக்கிலீக்ஸ் நிறுவனா் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கப் பேரரசுக்கு மன்னிக்க முடியாத தீவிரவாதியானாா்.
- சுமாா் 9 ஆண்டுகள் லண்டனில் உள்ள ஈக்வடாா் தூதரகத்தில் தஞ்சமும், சுமாா் 6 ஆண்டுகள் பிரிட்டன் சிறைவாசம் அனுபவித்த ஜூலியன் அசாஞ்சே, 14 ஆண்டு கால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு தாய்நாடான ஆஸ்திரேலியாவிற்கு முழு விடுதலை பெற்றவராகத் திரும்பியுள்ளாா்.
- அமெரிக்காவில் அவா் மீது 18 குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில், அவருக்கு 175 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்பும் இருந்தது. இதையெல்லாம் தவிா்க்க அமெரிக்க நீதித் துறையுடன் அசாஞ்சே செய்து கொண்ட ஒப்பந்தம் அவா் விடுதலை பெற வழிகோலியது.
- நீதிமன்றத்தில் ஆஜரான அசாஞ்சேவுக்கு, உளவு பாா்த்தது தொடா்பான வழக்கில் சுமாா் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை எதிா்பாா்க்கப்பட்டது. லண்டன் சிறையில் அந்த தண்டனைக் காலத்தை ஏற்கெனவே கழித்துவிட்டதால் அவா் விடுதலை செய்யப்பட்டாா்.
- ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாண்ட் மாகாணத்தில் பிறந்த அசாஞ்சே கணினி தொழில்நுட்பத்தில் திறன் பெற்றிருந்தாா். 1994-ஆம் ஆண்டில் அவா் மீது 30-க்கும் மேற்பட்ட சைபா் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. அவற்றில் பல குற்றங்களை ஒப்புக் கொண்டு அதற்குத் தண்டனையாக விதிக்கப்பட்ட அபராதங்களையும் அசாஞ்சே செலுத்தியுள்ளாா்.
- கணினிப் பாதுகாப்பு ஆலோசகா், பத்திரிகையாளா் போன்ற பல பணிகளைச் செய்துவிட்டு, 2006-ஆம் ஆண்டு ‘விக்கிலீக்ஸ்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கினாா். கணினி சேமிப்பகங்களை ஊடுருவி பல நாடுகளில் நடக்கும் முறைகேடுகளை வெளியிடத் தொடங்கினாா்.
- சோமாலியாவில் நடந்த அதிகாரிகள் படுகொலை, பெரு நாட்டில் எண்ணெய் ஊழல் எனப் பல்வேறு ரகசிய ஆவணங்களை வெளியிட்டு அதிா்வலைகளை ஏற்படுத்தினாா். 2010-ஆம் ஆண்டு அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டு மொத்த உலகத்தின் கவனத்தையும் ஈா்த்தாா்.
- இராக், ஆப்கானிஸ்தான் போா்களில் அமெரிக்கா செய்த குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் பற்றிய பல லட்சம் பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்டன.
- அமெரிக்காவின் எச்சரிக்கையையும் மீறி தொடா்ந்து பல ஆவணங்களை வெளியிட்டதால் அசாஞ்சே தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா். பிரிட்டன் தொடா்பான ஆவணங்களை வெளியிட்டதால் அந்த நாட்டுக் காவல் துறையும் அவரைக் கைது செய்ய முனைந்தது.
- ‘அசாஞ்சேயை கைது செய்வது கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது’ என்று பல நாடுகளில் இருந்தும் எதிா்ப்புக் குரல்கள் எழுந்தன. இந்நிலையில், ஈக்வடாா் அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க நினைத்தது. அதன்படி பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள ஈக்வேடாா் தூதரகத்தில் தஞ்சமடைந்தாா்.
- கடந்த 2010-ஆம் ஆண்டு விக்கிலீக்ஸ் வலைதளத்தில் ஒரு விடியோ வெளியாகி வைரல் ஆனது. பாக்தாத் நகரின் மீது பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் ‘அட்டாக் ஹெலிகாப்டா்’ கீழே நின்று காண்டிருந்த பொதுமக்களைச் சரமாரியாகச் சுடத் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் சா்வதேச பத்திரிகையாளா்கள் உள்பட பொதுமக்கள் கொல்லப்பட்டனா்.
- இராக் மீது அமெரிக்கா போா் தொடுத்தபோது இது போன்ற பல மனித உரிமை மீறல்களில் அந்நாடு ஈடுபட்டது. ஆனால் அதை ஆதாரபூா்வமாக முதலில் வெளியிட்டது விக்கிலீக்ஸ்தான். இதையடுத்து சா்வதேச அளவில் அமெரிக்காவிற்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. உடனடியாக அசாஞ்சே மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்கா துடித்தது.
- ஆனாலும் அசாஞ்சே அஞ்சவில்லை. அதே ஆண்டு ஜூலை மாதம் ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்கா நிகழ்த்திய போா் விதிமீறல்களைத் தொடா்ந்து வெளியிட அமெரிக்க அரசுக்கு கோபம் உச்சத்தை அடைந்தது. தொடா்ந்து இராக் போா் தொடா்பாக மேலும் லட்சக்கணக்காண கோப்புகளை வெளியிட்டதால் உலகம் மிரண்டு போனது.
- வெளிநாடுகளில் நடக்கும் நிகழ்வுகள் தொடா்பாக அமெரிக்காவுக்கு அதன் தூதரகங்கள் ரகசியமாக அனுப்பும் தகவல்கள், உளவு ரகசியங்கள், பொருளாதார தகவல்கள் போன்றவை அடங்கும். அப்படி 274 தூதரகங்களிலிருந்து அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்ட ராஜீய உறவு ரகசியங்களை விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தியது. இதனால் அமெரிக்காவின் சா்வதேச உறவுகளையே பாதிக்கும் அளவிற்கு நிலைமை மோசமடைந்தது.
- அவருக்குத் தொடா்ந்து நெருக்கடி கொடுப்பதற்காக பல்வேறு வழக்குகளும் போடப்பட்டன. ஆவணங்களைக் கசியவிட்ட வழக்குகளுக்கு இடையே ஸ்வீடனைச் சோ்ந்த இரண்டு பெண்கள் தங்களுக்கு அசாஞ்சே பாலியல் தொல்லை அளித்ததாகப் புகாா் அளித்தனா். அந்த வழக்கில் அவருக்கு எதிராக ஸ்வீடன் நீதிமன்றம் கைது வாரண்ட பிறப்பித்தது.
- ஆனால் ஈக்வேடாா் தூதரகம் கொடுத்த அடைக்கலத்தால் அந்த வழக்கிலும் அசாஞ்சேவைக் கைது செய்ய முடியவில்லை. அதே சமயம், ‘இது பொய்க்குற்றச்சாட்டு’ என்று அவரும் மறுத்திருந்தாா். நீண்ட காலம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருந்த இந்த வழக்கைக் கைவிடுவதாக ஸ்வீடன் நீதிமன்றம் 2019-இல் அறிவித்தது. அதே ஆண்டில் ஈக்வடாரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அசாஞ்சேவுக்கு அளித்துவந்த அடைக்கலத்தைத் திரும்பப் பெற்றது.
- இதைத் தொடா்ந்து, பிரிட்டன் அரசு அசாஞ்சேவைக் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தது.
- அமெரிக்கா அவரை நாடு கடத்தப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. 2022-இல் அசாஞ்சேவை நாடு கடத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியது. அதை எதிா்த்து அசாஞ்சேயும் நீதிமன்றத்தை நாடினாா். இந்த வழக்கு நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் தமது வழக்கறிஞா்கள் மூலம் அமெரிக்க அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
- இந்த பேச்சுவாா்த்தை சுமுகமாக முடிவடைந்த நிலையில்தான் பிரிட்டன் அரசு அவரை விடுதலை செய்துள்ளது. அமெரிக்க நீதித் துறையுடன் அசாஞ்சே மேற்கொண்ட ஒப்பந்தப்படி, ரகசிய ஆவணங்களைக் கசியவிட்டது தவறு என்பதை ஒப்புக் கொண்டு, அமெரிக்க நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அதே சமயம், அந்தக் குற்றத்திற்கான தண்டனையை பிரிட்டன் சிறையிலேயே அனுபவித்துவிட்டதால் அவரை விடுதலை செய்துவிட வேண்டும் என ஒப்பந்தம் கூறுகிறது.
- அனுமதியின்றி அமெரிக்காவுக்கு வரக் கூடாது என்றும் அவருக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அவா் ஜூன் 26 மாலை 7.30 மணியளவில் ஆஸ்திரேலியத் தலைநகா் கான்பெரா வந்தடைந்தபோது அவரது ஆதரவாளா்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனா்.
- அசாஞ்சே தாம் செய்த குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படவில்லை. பிறா் செய்த குற்றங்களை அம்பலப்படுத்தியதால்தான் இந்த நிலை. வல்லரசுகள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆதிக்கப் போக்குக்கு இவரது செயல்பாட்டால் ஒரு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது என்கிறது உலகம்.
- “‘மனித உரிமைகள் தொடா்பான அக்கறையைத் தொடா்ந்து வெளிப்படுத்தி வந்த அசாஞ்சே விடுதலை வரவேற்புக்குரியது’ என ஐ.நா. தெரிவித்திருக்கிறது. அமெரிக்க அதிகார வா்க்கம் அவரது விடுதலையை விரும்பவில்லை. விக்கிலீக்ஸின் செயல்பாடுகளால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று நீதிமன்றமே தெரிவித்திருந்தாலும் அமெரிக்க வெளியுறவுத் துறை அதை ஏற்கவில்லை.
- அசாஞ்சேயின் விடுதலை மனித உரிமை ஆா்வலா்களால் வரவேற்கப்பட்டாலும், அதற்காக அவா் அமெரிக்க அரசிடம் சமரசம் செய்து கொண்டு விடுதலை பெற்றதை மனித உரிமை ஆா்வலா் சிலா் அவ்வளவாக விரும்பவில்லை.
- பல வல்லரசுகளை எதிா்த்துக் கொண்டு அவா் பட்ட பாடு அவருக்கே வெளிச்சம். உரிமைகளை வென்றெடுப்பதற்கான விலைகளும் அதிகம்தான்.
- அசாஞ்சே தாம் செய்த குற்றங்களுக்காகச் சிறையில் அடைக்கப்படவில்லை. பிறா் செய்த குற்றங்களை அம்பலப்படுத்தியதால்தான் இந்த நிலை. வல்லரசுகள் எது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆதிக்கப் போக்குக்கு இவரது செயல்பாட்டால் ஒரு கடிவாளம் போடப்பட்டிருக்கிறது என்கிறது உலகம்.
- “மனித உரிமைகள் தொடா்பான அக்கறையைத் தொடா்ந்து வெளிப்படுத்தி வந்த அசாஞ்சே விடுதலை வரவேற்புக்குரியது என ஐ.நா. தெரிவித்திருக்கிறது.
நன்றி: தினமணி (13 – 07 – 2024)