- தமிழ்நாட்டில் 2023இல் மட்டும் 8,500 பெண்கள் கருப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், மொத்தம் 36,014 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. இந்தியாவில் 35 முதல் 44 வயதுக்கு உள்பட்ட பெண்களிடையே காணப்படும் புற்றுநோய் வகைகளில் கருப்பை வாய்ப் புற்றுநோய் இரண்டாம் இடத்தில் உள்ளது. 2023 நிலவரப்படி இந்தியாவில் 3.4 லட்சம் பெண்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசியப் புற்றுநோய் பதிவுத் திட்டம் தெரிவிக்கிறது.
- உலக அளவில் இந்நோய் குறித்து 2000க்குப் பிறகே விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாகத்தான் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. பெண்களின் கருப்பை வாய்ப் பகுதியில் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (ஹெச்.பி.வி.) தொற்று ஏற்படுவதே கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கு முதன்மைக் காரணம். தடுப்பூசி செலுத்திக்கொள்வதன் மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்படாமல் தவிர்க்கலாம் என்பதால், அதற்கான ஆய்வுகள் தொடங்கப்பட்டன.
- 9-14 வயதுக்கு உள்பட்ட வளரிளம் பெண்களுக்கு ஹெச்.பி.வி. தடுப்பூசியைச் செலுத்துவதன் மூலம் இது 90% தடுக்கப்படுவதாக சிக்கிம் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து வளரிளம் பெண்களுக்கான தடுப்பூசிப் பட்டியலில் ஹெச்.பி.வி. தடுப்பூசியைச் சேர்க்க நோய்த்தடுப்புக்கான தேசியத் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு 2022இல் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தது.
- இதன் தொடர்ச்சியாகத்தான் மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் கருப்பை வாய்ப் புற்றுநோய்க்கான தடுப்பூசி குறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டிருந்தார். வளரிளம் பெண்களுக்கு அவர்கள் பயிலும் பள்ளிகளிலோ அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலோ ஹெச்.பி.வி. தடுப்பூசி செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- மாநிலங்களின் கோரிக்கையையொட்டி, தொற்றா நோய்களுக்கான திட்டங்களில் இந்நோய்க்கு முக்கியத்துவம் அளித்து அதற்கான மருத்துவ, தொழில்நுட்ப உதவியை வழங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது நல்ல முன்னகர்வு.
- வளரிளம் பெண்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் இரண்டு விஷயங்களில் அரசு கவனத்துடன் செயல்பட வேண்டும். வழக்கமான தடுப்பூசிகள் போன்றதல்ல இது. அதனால், இது குறித்த விழிப்புணர்வையும் நம்பகத்தன்மையையும் மக்களிடம் ஏற்படுத்த வேண்டியது அரசின் கடமை.
- தனியார் மருத்துவமனைகளில் ரூ.2,000 முதல் ரூ.10,000 வரை இந்தத் தடுப்பூசிக்கு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விலையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம்.
- இந்தியாவில் இந்த வகைப் புற்றுநோயால் பாதிக்கப்படும் பெண்களில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் நோயின் வீரியத்தால் இறக்கின்றனர் என்பதால், அனைத்து வளரிளம் பெண்களுக்கும் இந்தத் தடுப்பூசி கிடைப்பதை உறுதிசெய்வது அவசியம். நோயை முன்கூட்டியே கண்டறிந்தால் அதிலிருந்து மீள்வதற்கான சாத்தியம் அதிகம் என்பதால் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளையும் அரசு பரவலாக்க வேண்டும்.
- மாவட்ட மருத்துவமனைகள் மட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் இருக்கிற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டு, அது குறித்த விழிப்புணர்வு பரவலாக்கப்பட வேண்டும். இந்நோய் பாதிப்பின் காரணமாக இறக்கும் பெண்களில் நான்கில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்ற நிலை மாற தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்!
நன்றி: இந்து தமிழ் திசை (08 – 02 – 2024)