TNPSC Thervupettagam

கரோனா: அரசும் சமூகமும் செய்ய வேண்டியது என்ன?

March 12 , 2020 1768 days 870 0
  • சென்ற டிசம்பரில் சீனாவின் துயரமாகப் புறப்பட்ட கரோனா காய்ச்சல் தற்போது 104 உலக நாடுகளில் சுற்றிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்தியாவில் ஒருசிலரிடம் இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் குணமடைந்தனர்.
  • இப்போது வெளிநாட்டுப் பயணிகள் மூலம் மறுபடியும் இது இந்தியாவுக்குள் நுழைந்துவிட்டது. தமிழகமும் இதற்குத் தப்பவில்லை. இந்தக் காய்ச்சல் இனி இந்தியா முழுவதும் பரவிவிடுமோ என்னும் அச்சம் அநேகரின் நிம்மதியைத் தொலைத்திருக்கிறது.

எந்த அளவுக்குத் தீவிரமானது கரோனா?

  • கரோனா காய்ச்சலைப் பொறுத்தவரை அச்சம் தேவையில்லை; ஆனால், கவனம் தேவை என்கிறது உலக சுகாதார நிறுவனம். இந்தக் காய்ச்சல் தொடர்பான புள்ளிவிவரத்தைப் பார்த்தாலே காரணம் புரியும். உலக அளவில் இதுவரை ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா காய்ச்சல் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
  • இவர்களில் 80% பேர் வரை எவ்வித சிறப்புச் சிகிச்சையும் இல்லாமல் குணமாகியுள்ளனர். 14% பேர் தீவிர சிகிச்சைக்கும் 6% பேர் மோசமான நிலைக்கும் சென்றுள்ளனர். மொத்தத்தில், சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தவர்கள் 2% பேர். ஓர் ஒப்பீட்டுக்குச் சொன்னால், 2002-ல் இதே சீனாவில் சார்ஸ் நோயால் இறந்தவர்கள் 10% பேர். 2012-ல் சவுதி அரேபியாவில் மெர்ஸ் நோயால் இறந்தவர்கள் 35% பேர்.

யாருக்குப் பாதிப்பு அதிகம்?

  • கவனிக்க வேண்டியது என்னவென்றால், கரோனா காய்ச்சலுக்குப் பலியானவர்களில் 80% சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். இவர்களில் அநேகம் பேருக்கு ஏற்கெனவே இதயப் பிரச்சினையும் சுவாசப் பிரச்சினையும் இருந்திருக்கின்றன. உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சினை, புற்றுநோய் உள்ளவர்களும் இதில் இருக்கிறார்கள். ஆக, வயதானவர்களும் உடலில் ஏற்கெனவே ஆபத்தான பாதிப்புகள் இருந்தவர்களும்தான் இந்தக் காய்ச்சலால் இறந்திருக்கின்றனர். மற்றவர்கள் உயிர்ப் பலியிலிருந்து தப்பித்திருக்கின்றனர்.

கரோனா பாதிப்பு ஆண்களுக்குத்தான் அதிகமா?

  • பாலினத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், 3 ஆண்களுக்கு ஒரு பெண் என்னும் விகிதத்தில் இது பாதித்துள்ளது. ஆண்கள் அதிகம் பாதிக்கப்பட அவர்களிடம் காணப்பட்ட புகை/ மதுப் பழக்கம் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது. இந்தப் பழக்கத்தால் இவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி மிகவும் குறைவாக இருந்திருக்கிறது. பெண்களுக்கு இயற்கையிலேயே அமைந்திருக்கிற ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அவர்களுக்குப் பாதுகாப்பு தந்திருக்கிறது.
  • இந்தக் காய்ச்சல் பதின் பருவத்தினரையும் குழந்தைகளையும் அவ்வளவாகப் பாதிக்கவில்லை. குழந்தைகள் இறந்ததாகப் புள்ளிவிவரம் இல்லை. புகை/மதுப் பழக்கத்தை நாடாமல் ஆரோக்கிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியைச் சிறப்பாகப் பெற்றிருப்பவர்களுக்கு இந்தக் காய்ச்சல் உயிரிழப்பை ஏற்படுத்துவதில்லை. இளைய வயதினரை அவ்வளவாக இது பாதிப்பதில்லை.
  • குழந்தைகளுக்கு இது வந்துவிடுமோ எனப் பெற்றோரும் அஞ்ச வேண்டியதில்லை. இளைய சமுதாயம் அதிகமுள்ள இந்தியாவுக்கு இந்தச் செய்திகள் எல்லாமே சாதகம்தான். கோவிட் குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாகவும் அநாவசியக் கவலைகளைக் களையும் விதமாகவும்தான் இவை இருக்கின்றன.

மக்கள் என்ன செய்ய வேண்டும்?

  • அரசுகள் முன்னெடுக்கும் முயற்சிகளோடு மக்களின் விழிப்புணர்வும் சேர்ந்துகொண்டால் இந்தக் காய்ச்சலை எளிதாக வெல்லலாம். உடல் சுத்தமும் சுற்றுப்புற சுகாதாரமும் பராமரிக்கப்பட்டால் கரோனா வைரஸுக்கு இங்கே இடமில்லாமல் போகும். முக்கியமாக, கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • இருமல், தும்மல் உள்ளவர்களிடமிருந்து 3 அடி தூரம் தள்ளியே இருக்க வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையால் முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டும். கண், காது, வாய், மூக்கைத் தேவையில்லாமல் தொடுவது கூடாது.
  • கண்ட இடங்களில் சளியைத் துப்பக் கூடாது. கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு இப்போது செல்ல வேண்டாம். இருமல் உள்ளவர்கள் என்-95 முகக்கவசம் அணிந்துகொள்ளலாம். அதேநேரம் அனைவரும் இதை அணிய வேண்டிய அவசியமில்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் இருந்தால் உடனே மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

அரசின் நடவடிக்கைகள் என்ன?

  • கரோனா காய்ச்சலைவிடப் பல மடங்கு ஆபத்தான கொள்ளைநோய்களைக் கடந்துவந்த நாடு இந்தியா. கடந்தகால அனுபவங்களைக் கையில் எடுத்துக்கொண்டு, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளைக் கண்காணிப்பது, சந்தேகம் உள்ளவர்களைத் தனிமைப்படுத்துவது, மேல் சிகிச்சைக்கு அனுப்புவது என மருத்துவத் துறை சார்ந்த அரசு இயந்திரங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. ஆனாலும், மக்களின் அச்சத்தைப் போக்க இவை மட்டுமே போதுமா?

கரோனா குறித்துப் பரவும் செய்திகளை நம்பலாமா?

  • நாட்டில் தொற்றுநோய் பரவும் காலங்களில் வைரஸ் பரவும் வேகத்தைவிடப் பல மடங்கு அதிகமாகச் சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவுவதுதான் இங்கே உள்ள பிரச்சினை. கோவிட் காய்ச்சலுக்கு மருந்து இல்லை; தடுப்பூசி இல்லை என்பதால் மக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளில்தான் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
  • வதந்திகள் மக்களுக்கு அச்சத்தையும் அநாவசியக் குழப்பங்களையும் ஏற்படுத்தி, தகுந்த பாதுகாப்புக்கு அவர்கள் தயாராவதைத் தடுத்துவிடலாம். உதாரணத்துக்கு, கரோனா காய்ச்சலுக்கு ஆயுஷ் மருத்துவத்தில் மருந்து உள்ளது; கோமியம் கரோனா வைரஸைக் கொல்லும் போன்ற வதந்திகள் மக்களைத் திசைதிருப்புகின்றன.
  • அறிவியலாளர்களால் அங்கீகரிக்கப்படாத மருந்துகளைச் சமூக ஊடகங்கள் பரிந்துரை செய்யும்போது, மக்கள் அவற்றைப் பயன்படுத்துவதில்தான் அதிக கவனம் செலுத்துவார்களே தவிர, அரசு சொல்லும் எச்சரிக்கைகளைப் பின்பற்றுவதில் சுணக்கம் காட்டுவார்கள். இந்தத் தவறான போக்கு நோய்த்தடுப்புக்குத் தடைக்கல்லாக அமையும். ஆகவே, மத்திய, மாநில அரசுகள் ஊடகங்களில் தீவிரமாகப் பரவும் வதந்திகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

சீனாவைப் போல் இந்தியா சமாளிக்குமா?

  • சீனா, அமெரிக்கா போன்ற வல்லரசுகளே கரோனா தொற்றைச் சமாளிக்கத் திணறும்போது, சீனாவைப் போல் மக்கள்தொகையும் நகரும் மக்களும் அதிகமுள்ள இந்தியா எம்மாத்திரம் என்னும் அவநம்பிக்கை அநேகரிடம் உள்ளது. இதற்குக் காரணமும் உண்டு.
  • சீனாவில் ஏற்பட்டதுபோல் பெரிய அளவில் ஒரு தொற்றுப் பேரிடர் இந்தியாவில் ஏற்படுமானால், அதைச் சமாளிப்பது பெரிய சவாலாகவே இருக்கும். அந்த நிலைமைக்கு நாடு தள்ளப்படுவதைத் தவிர்க்க, தற்போது அரசுகள் மேற்கொள்ளும் தற்காலிக மருத்துவ அவசரநிலைப் பாதுகாப்புகளோடு, தொற்றுநோய்களைத் தடுக்கும் நிரந்தர ஏற்பாடுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளின் பங்கு என்ன?

  • பன்றிக் காய்ச்சல், டெங்கு காய்ச்சல், கரோனா காய்ச்சல் போன்ற தொற்றுநோய்கள் நாட்டில் பரவும்போது, அரசு மருத்துவமனைகளுக்குத்தான் மக்களை அழைக்கின்றனர். அரசு மருத்துவமனைகளின் மீது மக்களுக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட, முதலில் அங்குள்ள அவலங்களைக் களைய வேண்டும்.
  • உள்கட்டமைப்பு வசதி, ஆய்வக வசதி, பணியாளர் நியமனம், மருந்து மேலாண்மை, மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்குமான தற்காப்பு அம்சங்கள் உள்ளிட்ட சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த வேண்டும். அத்தோடு மாவட்டந்தோறும் தொற்றுநோய் மருத்துவமனைகளைத் தனியிடங்களில் அமைத்து மருத்துவ வசதிகளை நவீனப்படுத்த வேண்டியதும் முக்கியம்.

தொழில்நுட்பத்தின் பங்கு என்ன?

  • அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் இந்த நவீன காலத்தில், சீனா மேற்கொண்டதைப் போல சுற்றுப்புற சுவாசக் காற்றைக் கிருமிநீக்கம் செய்வதற்கு மனித சக்தியோடு ரோபோட் மற்றும் ட்ரோன்களைப் பயன்படுத்த வேண்டியதும், தொற்றுநோய்ப் பரவலை முன்கூட்டியே அறிந்துகொள்ள செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டியதும் காலத்தின் கட்டாயம்.
  • இதற்கெல்லாம் சுகாதாரத் துறைக்கு நிறைய நிதி ஆதாரம் வேண்டும். அரசுகள் இதற்குச் செவிசாய்க்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (12-03-2020)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories