ஜெர்மனி ஏன் விதிவிலக்கு?
- ஐரோப்பாவில் உள்ள ஜெர்மனியிலும் இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின்போல கரோனா தொற்றுக்குப் பல்லாயிரக்கணக்கானோர் ஆட்பட்டனர்.
- ஆனால், இறந்தவர் எண்ணிக்கை 1,295 மட்டுமே; அதாவது, 1.4%. இத்தாலியில் இது 12%, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டனில் தலா 10%. காரணம் என்னவென்றால், நோய்க்கிருமியின் மரபணுக்களை சீனா வெளியிட்ட உடனேயே அதை அடையாளம் காணும் சாதனங்களையும் வழிமுறைகளையும் ஜெர்மனி தயாரித்தது. மருத்துவப் பரிசோதனை, சிகிச்சை அனைத்தும் இலவசம் என்பதால் வேலையில்லாதவர்களும் வறியவர்களும்கூட தாங்களாகவே முன்வந்து பரிசோதனைகளைச் செய்துகொண்டனர்.
- நோய் தொற்றா முழு உடையணிந்த மருத்துவர்கள் சளி, காய்ச்சல், இருமல் இருந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதித்தனர். கரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துவிட்டனர். பரிசோதனை முறைகளைத் தயார் செய்த உடனேயே நாட்டில் 40,000 சிறப்பு படுக்கைகளையும், லட்சம் பேருக்கு 34 என்ற விகிதத்தில் வென்டிலேட்டர்களையும் முதல் கட்டத்தில் தயார்படுத்தினர்.
- எண்ணற்றவர்களுக்கு சிகிச்சை, தனிமைப்படுத்தல், வீட்டிலிருந்தே வேலை செய்ய ஆணை, சமூக இடைவெளியைப் பின்பற்றுவதில் கண்டிப்பு ஆகிய காரணங்களால் ஜெர்மனியில் இறப்பு விகிதம் குறைவு. இப்போது இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் நாட்டவர்களையும் ஜெர்மனி தனது மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளிக்கிறது!
கரோனா சிறுவர்களைப் பாதிப்பதில்லையா?
- கரோனாவுக்குப் பலியானவர்களில் அதிகம் பேர் முதியவர்களாகவும், 5% அல்லது அதற்கும் கீழே மட்டுமே குழந்தைகளும் சிறார்களும் இருக்கிறார்கள்.
- சீனாவின் ஜெஜியாங் மாநிலத்தில் பிறந்த சிசு முதல் 16 வயது வரையிலான சிறார்கள் இன்ஃப்ளுயன்சா என்ற குளிர்க்காய்ச்சலுக்கு ஆளாகியிருந்தனர். அவர்களுக்குக் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் மட்டுமே இருந்தன.
- பெரும்பாலான குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு ஆற்றலும், சுவாச மண்டலமும் பலமாக இருப்பதால் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பிரச்சினை என்னவென்றால் சிறுவர்கள் கரோனா வைரஸை உடலில் ஏற்றுக்கொண்டு, அதை வீட்டில் உள்ள மற்றவர்களுக்கு, குறிப்பாகத் தாத்தா பாட்டிகளுக்குப் பரப்பிவிடுகிறார்கள்.
- சமூக விலகலை வீட்டுக்குள்ளும் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள், சிறார்களைத் தூக்கிக்கொள்வது, கொஞ்சுவது கூடாது.
நன்றி: தி இந்து (13-04-2020)