TNPSC Thervupettagam

கரோனா சொல்லும் பாடம்

July 14 , 2020 1652 days 1249 0
  • இந்தியாவில் நகர்மயமாதல் தொழில் துறை வளர்ச்சியின் அடையாளமாக மட்டும் பார்க்கப்படவில்லை; மனித வாழ்க்கை முறையின் மேம்பாடாகவும் கருதப்படுகிறது.

  • ஆனால், நகரங்கள் உற்பத்தியில் காட்டிய வேகத்தைத் தங்களது அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் காட்டுவதற்குத் தவறிவிட்டன.

  • அளவுக்கதிகமான மக்கள் நெரிசல் தொற்றுநோய்களுக்கான களங்களாக எப்படி நகரங்களை மாற்றியிருக்கின்றன என்பதோடு, சகலமும் ஒன்று குவிக்கப்பட்ட பெருநகரங்கள் எப்படி ஒட்டுமொத்த மாநிலத்தின் செயல்பாட்டையும் முடக்குகின்றன என்பதையும் கரோனா நமக்குச் சொல்கிறது.

  • பெருநகரங்களில் அனைத்து மருத்துவ வசதிகளும் இருக்கின்றன. ஆனால், அது சாமானியர்களுக்கானது அல்ல.

  • அரசே நடத்தும் இலவச மருத்துவமனைகள் இருக்கின்றன. ஆனால், அது அனைவருக்கும் போதுமானதல்ல. நகர்ப்புறங்களில் அனைத்து வகையான உயர்கல்வி நிறுவனங்களும் இருக்கின்றன. ஆனால், அவை அனைவருக்குமானதல்ல.

  • நகரங்களுக்கு அனைவரும் தேவைப்படுகிறார்கள். ஆனால், அது அனைவருக்குமானதல்ல. கிராமிய வாழ்க்கை முறையிலிருந்து சாதிய மனோபாவத்தைப் பிரித்தெடுக்க முடியாததாலேயே அடித்தட்டு மக்களிடம் நகரங்களை நோக்கி நகருங்கள் என்ற குரல் முன்னெடுக்கப்பட்டது.

  • ஆனால், நகர்ப்புற வாழ்வில் வர்க்கம் என்ற இன்னொரு கூட்டுக்குள் அவர்கள் அடைந்துகிடக்க நேரிட்டிருக்கிறது. இன்றைய பெருநகரங்கள் உழைப்புச் சக்திகளை எளிதாகப் பெற்று, பொருளாதார வளர்ச்சிக்குக் கணிசமாக உதவலாம். ஆனால், அந்த வளர்ச்சியும் ஒரு மாத கால முடக்கத்தில் கேள்விக்குறியாக மாறும் எனில், ஒட்டுமொத்த மக்களையும் அந்நகரங்களில் குவிப்பதைப் பற்றி நாம் மறுபரிசீலித்தே ஆக வேண்டும்.

  • நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை பெருநகரத்துக்குத் தேவையான மொத்தக் காய்கறிகளும் ஒரே சந்தையிலிருந்துதான் மொத்த விற்பனையாகின்றன என்பது மாதிரியான அமைப்புதான் தமிழகத்துக்குள் நோய்ப்பரவலுக்கான முக்கிய வழித்தடம்.

  • அரசின் தலைமையிடம் என்பதைத் தாண்டி, தொழில் துறையின் தலைமையிடமாகவும் சென்னை விளங்குகிறது. சென்னையில் மையம் கொள்ளாத தொழில் துறையே இல்லை.

  • இந்தப் பெருவளர்ச்சிக்குத் துறைமுகம்தான் காரணம் என்றால், தமிழகம் நீண்ட நெடிய கடற்கரை கொண்ட மாநிலம் என்பதையும் மற்ற கடற்கரை மாவட்டங்களில் அதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படவே இல்லை என்பதையும் மறந்துவிடக் கூடாது. விளைவாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள நோய்ப்பரவல், ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் செயலற்ற நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

  • திட்டமிடப்படாத பெருநகரமொன்றின் அசுரத்தனமான வளர்ச்சி, அதைச் சார்ந்துள்ள ஒட்டுமொத்த நிலப்பரப்பின் இயல்பான இயக்கத்தையும் ஸ்தம்பிக்கச்செய்திருக்கிறது. பெருநகரத் திட்டமிடலோடு அரசியல், சமூக, பொருளாதார இயக்கம் முழுவதையும் ஒற்றை நகரத்தில் மையப்படுத்துவதையும் மறுபரிசீலிக்க வேண்டிய கட்டத்தை நோக்கி கரோனா நம்மைத் தள்ளியிருக்கிறது.

நன்றி: தி இந்து (14-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories