TNPSC Thervupettagam

கரோனா தடுப்புப் பொருட்கள் மீது அரசின் கண்காணிப்பு அவசியம்

June 5 , 2020 1689 days 1193 0
  • திடீரென வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளில் இடம்பெற்றுவிட்டிருக்கும் முகக்கவசம் முதல் கிருமிநாசினி வரையிலான கரோனா தவிர்ப்புப் பொருட்களின் வணிகத்தில் அரசின் கண்காணிப்பு கூடுதலாகத் தேவைப்படுகிறது.
  • பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாகக் கிருமிநாசினி உள்ளிட்ட குளியலறை உபயோகப் பொருட்களைத் தயாரித்து விநியோகித்துவந்த வடமாநிலங்களைச் சேர்ந்த இருவர் சென்னையில் கைதுசெய்யப்பட்டிருப்பதை, ஒரு பெரிய முறைகேட்டின் சிறு பகுதியாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
  • சென்னையில் மட்டுமல்ல; நாடு முழுவதும் இத்தகைய முறைகேடுகள் அதிகரித்திருக்கின்றன.
  • பெங்களூருவில் ரூ.56 லட்சம் மதிப்பு கொண்ட போலி கிருமிநாசினிகள் கைப்பற்றப்பட்டிருப்பதும், குருகிராமில் 5,000 போலி கிருமிநாசினி போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதும் சென்னை சம்பவத்தோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டியவை ஆகும்.

கண்காணிப்பு அவசியம்

  • கரோனா தொற்றைத் தடுக்கப் பொது இடங்களில் முகக்கவசத்தை அணிந்துகொள்வதையும், அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவும் முறையிலோ, கிருமிநாசினியைத் தேய்த்துக்கொள்ளும் வகையிலோ கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்வதையும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
  • ஊரடங்கு தளர்த்தப்பட்டு அலுவலகங்களும் தொழிற்சாலைகளும் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ள நிலையில், மேற்கண்ட பொருட்களின் தேவை அதிகமாகிறது.
  • இதையொட்டி, போலி கிருமிநாசினி தயாரிப்பும் விற்பனையும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. மேலும், அவரவர் தீர்மானிப்பதே விலை என்றும் ஆகிவிட்டிருக்கிறது.
  • கிருமிநாசினியும் முகக்கவசங்களும் அத்தியாவசியப் பொருட்களின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
  • மார்ச் 13 அன்றே மத்திய நுகர்வோர் நலத் துறை 200 மிலி கிருமிநாசினிக்கு ரூ.100, மூன்றடுக்கு முகக்கவசங்களுக்கு ரூ.10, இரண்டடுக்கு முகக்கவசங்களுக்கு ரூ.8 என்று விலை நிர்ணயித்து அறிவித்தது என்றாலும், நடைமுறையில் அது பின்பற்றப்படவில்லை.
  • குறைந்தது, கிருமிநாசினியின் விற்பனை கடந்த சில மாதங்களில் ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது, முகக்கவசங்களின் விற்பனை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
  • அடுத்து வரும் மாதங்களில் கிருமிநாசினிக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்பதால், ஆல்கஹாலை அடிப்படையாகக் கொண்ட கிருமிநாசினியை ஏற்றுமதிசெய்ய மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.
  • ஆனால், உள்நாட்டுத் தேவையைச் சமாளிக்கும் வகையில் இதுவரை கிருமிநாசினி விநியோகம் முறைப்படுத்தப்படப்படவில்லை. மருந்தோ தடுப்பூசியோ இல்லாத நிலையில், கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ளும் முயற்சியில் கிருமிநாசினி, முகக்கவசங்களின் பங்கு தவிர்க்கவியலாதது.
  • ஆகையால், அத்தியாவசியப் பொருட்களான இவற்றுக்கு விலைக் கட்டுப்பாடும், தர நிர்ணயங்களும் கடுமையான முறையில் பின்பற்றப்படவும் கண்காணிக்கப்படவும் வேண்டியது அவசரமும் அவசியமும் ஆகும்.

நன்றி: தி இந்து (05-06-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories