TNPSC Thervupettagam

கரோனா தடுப்பூசி: சிறப்பு முகாம்களின் குறிப்பிடத்தக்க வெற்றி

November 26 , 2021 974 days 461 0
  • கடந்த செப்டம்பர் 12-ல் தொடங்கப்பட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், இதுவரை 11 முறை நடத்தப்பட்டுள்ளன.
  • சென்னை, கோவை, கிருஷ்ணகிரி போன்ற தொழிலகப் பகுதிகளில் பெருமளவில் தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன.
  • மற்ற மாநிலத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டின் மற்ற மாவட்டத் தொழிலாளர்களும் வசிக்கும் இந்தப் பகுதிகளில் தடுப்பூசிகள் போடப்படுவதில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள கவனம் பாராட்டுக்குரியது.
  • தவிர, சில மாவட்டங்களில் அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ள கிராமப்புறப் பகுதிகளில் விடுபட்டவர்களை வீடுவீடாகச் சென்று, சுகாதாரப் பணியாளர்கள் சிறப்பு முகாம்களுக்கு அழைத்துவரத் தொடங்கியுள்ளனர்.
  • முதலாவது சிறப்பு முகாமை நடத்தியபோது விரைவில் வாரம் ஒரு முறை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்தார்.
  • ஆனால், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக இரண்டாவது முகாமிலேயே தடுப்பூசி மையங்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைக்கப்பட்டது.
  • பிரதமருக்குக் கடிதம் எழுதியது, தங்களது கட்சி நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவை அனுப்பி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த தொடர் நடவடிக்கைகள், தடுப்பூசி சிறப்பு முகாம்களை இப்போது வாரம் இருமுறை வெற்றிகரமாக நடத்தி முடிக்க உதவியிருக்கின்றன.
  • இவ்விஷயத்தில், மாநில அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட மத்திய அரசும் பாராட்டுக்குரியது.
  • சென்னையில் நடந்த தடுப்பூசி சிறப்பு முகாம்களில் முதல்வரே நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டார்.
  • தென் மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டபோது, அருப்புக்கோட்டை ஒன்றியம் கஞ்ச நாயக்கன்பட்டியிலும்கூட அவர் ஆய்வுசெய்தார்.
  • தவிர, தலைமைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், அத்துறையின் செயலர் ஆகியோரும் சிறப்பு முகாம்கள் சார்ந்து கொடுத்துவரும் தனிக் கவனத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
  • டிசம்பர் தொடங்கி பிப்ரவரி மாதத்துக்குள் கரோனாவின் மூன்றாவது அலைக்குச் சாத்தியமுள்ளது என்றும் பெருமளவில் தடுப்பூசிகள் போடப்பட்டிருப்பதாலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரித்திருப்பதாலும் தொற்றுப் பாதிப்பு அச்சப்படும் அளவுக்கு இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்நிலையில், வாய்ப்புள்ள அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுவிடுவதற்கான முயற்சிகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டும்.
  • தட்டுப்பாடின்றித் தடுப்பூசிகள் கிடைக்கத் தொடங்கிவிட்ட பிறகு, கரோனா மீதான அச்சம் சற்றே குறைந்திருக்கிறது.
  • ஆனாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வதற்குத் தயங்குபவர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். சிற்சில இடங்களில் சமய நம்பிக்கைகளும் அதற்குக் காரணமாக இருக்கின்றன.
  • பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் என்று பொது இடங்களில் நடத்தப்படும் தடுப்பூசி முகாம்கள் அனைத்துச் சமய வழிபாட்டிடங்களை நோக்கியும் நகர வேண்டிய தேவையுள்ளது.
  • இதற்கிடையே, தடுப்பூசி போட்டுக்கொள்ளக் கட்டாயப்படுத்தக் கூடாது என்று அலோபதி மருத்துவத்தையும் தடுப்பூசிகளையும் சந்தேகிக்கும் குறுங்குழுக்கள் வலிந்து பேச ஆரம்பித்திருக்கின்றன; சமூக ஊடகங்களை அதற்கான வாய்ப்பாகவும் பயன்படுத்திக் கொள்கின்றன.
  • எனவே, தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கான தேவை இன்னமும்கூடக் குறைந்துவிடவில்லை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (26 - 11 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories