- சீனாவில் தோன்றியிருக்கும் "கரோனா' வைரஸ் என்கிற நோய்த்தொற்று சர்வதேச அளவில் பரவத் தொடங்கியிருக்கிறது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று
- அமெரிக்கா, சவூதி அரேபியா, தாய்லாந்து, சிங்கப்பூர், வியத்நாம், ஜப்பான், தென்கொரியா என்று உலகின் பல்வேறு பகுதிகளில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
- சீனாவில் மட்டும் இதுவரை 889 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 26 பேர் மரணமடைந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன.
- சீனாவின் ஐந்து முக்கிய நகரங்கள் முற்றிலுமாக ஸ்தம்பித்துப் போய் இருக்கின்றன. 13 நகரங்களுக்கான போக்குவரத்து தடை செய்யப்பட்டிருக்கிறது. கோடிக்கணக்கான மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கிறார்கள். பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டிருக்கிறது. ஐந்து நகரங்களின் வழியே ரயில்கள் செல்வது தடை செய்யப்பட்டிருக்கிறது. விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், படகுப் போக்குவரத்துகள் அனைத்துமே செயல்படாத நிலையில் ஏறத்தாழ 2 கோடிக்கும் அதிகமான மக்கள் வெளியில் வர அச்சப்பட்டு, 4.1 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது.
- இந்த நோய்த்தொற்றுக்கு "கரோனா' வைரஸ் என்று அதனுடைய உருவ அமைப்பின் அடிப்படையில் பெயரிடப்பட்டிருக்கிறது. எலக்ட்ரான் நுண்ணாடியில் பரிசோதித்தபோது கிரீடம்போல காட்சியளிப்பதால் அதற்கு "கரோனா' வைரஸ் நோய்த்தொற்று என்று பெயரிடப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். இந்த நோய்த்தொற்று காற்றின் மூலம் பரவுகிறது. தொடக்கத்தில் சுவாசப் பாதையின் மேற்பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி தொடர்ந்து நுரையீரல், குடல் பகுதிகளுக்குப் பரவுகிறது. பாலூட்டிகள், பறவைகள் இரண்டும்தான் இந்த நோய்த்தொற்றின் முதல் இலக்கு என்று கூறகிறார்கள்.
ஆய்வு
- "மெடிக்கல் வைராலஜி' என்கிற மருத்துவ இதழில் வெளியாகியிருக்கும் ஆய்வின்படி, சீனர்கள் மிக விரும்பி உட்கொள்ளும் உணவுவான பாம்புகள்தான் "கரோனா' வைரஸ் நோய்த்தொற்றுக்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. வெளவாலில் இருந்து பாம்புக்கு இந்த நோய்த்தொற்று பரவியிருக்க வேண்டும். சீனாவின் வூஹான் நகரிலுள்ள மீன் சந்தையில் அந்தப் பாம்புகள் விற்பனைக்கு வந்திருக்கக் கூடும் என்றும், அதிலிருந்து இந்த நோய்த்தொற்று பரவியிருக்கிறது என்றும் கருதப்படுகிறது.
- கம்யூனிச சீனாவில் அரசு நிர்வாகம் சமூக ஊடகங்களையும், செய்திகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் தகவல்கள் மறைக்கப்படுகின்றன. 2003-இல் இதேபோல "சார்ஸ்' என்கிற கடுமையான நுரையீரல் தொற்று பாதித்தபோது பல மாதங்கள் அது குறித்து வெளியில் தெரியாமல் சீன அதிகாரிகள் மறைத்து வைத்தனர்.
- அதனால், "சார்ஸ்' பாதிப்பு உலகிலுள்ள பல நாடுகளுக்கும் பரவி 800-க்கும் அதிகமானோர் உயிரிழக்க நேர்ந்தது.
சார்ஸ்
- "கரோனா' வைரஸ் குறித்த ஆரம்ப ஆய்வுகள், கடந்த 20 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்றுகளில், 2003-இல் பரவிய "சார்ஸ்' என்கிற நோய்த்தொற்றால் ஏற்படும் புளு காய்ச்சல் ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று தெரிவிக்கின்றன. 2016-இல் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் கண்டறியப்பட்ட நோய்த்தொற்றுகளில் 75% விலங்கினங்களின் மூலமும், கால்நடைகள், பறவைகள் உள்ளிட்ட உணவு வகைகளாலும் ஏற்படுகின்றன என்று கூறப்படுகிறது. மனிதர்களிலிருந்து மனிதர்களுக்கு மிக வேகமாகப் பரவும் இந்த நோயின் அடிப்படைக் காரணமான விலங்கினம் எது என்பதை இன்னும் தீர்மானிக்க முடியாத நிலையில் மருத்துவ ஆய்வாளர்கள் திணறுகிறார்கள்.
- விவசாயத்துக்காகவும், நகர்ப்புற விரிவாக்கத்துக்காகவும் மக்கள்தொகைப் பெருக்கத்தால் காடுகள் அழிக்கப்படுகின்றன.
- இதனால் மனிதர்கள் மட்டுமல்லாமல், வளர்ப்பு மிருகங்களான கால்நடைகளும், கோழி உள்ளிட்ட பறவைகளும் நோய்த்தொற்றுகளைப் பரப்பும் மிருகங்களுடனான தொடர்புக்கு உள்ளாகின்றன. பெருச்சாளிகள், பாம்புகள், வெளவால்கள் போன்றவற்றில் உருவாகும் நோய்த்தொற்றுகள் வளர்ப்பு மிருகங்களுக்கும், அவற்றிலிருந்து அதிவிரைவாக மனிதர்களுக்கும் பரவிவிடுகின்றன.
மருந்துகளுக்கான எதிர்ப்புச் சக்தி
- இந்த நோய்த்தொற்றுகள் எந்த சூழலுக்கும் தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை பெற்றவையாக இருப்பதால், மிருகங்களிலிருந்து மனிதர்களை சட்டென்று தொற்றிக்கொள்கின்றன. அது மட்டுமல்லாமல், மனித இனம் கண்டுபிடித்திருக்கும் மருந்துகளுக்கான எதிர்ப்புச் சக்தியையும் கொண்டிருக்கின்றன. அதனால்தான் சார்ஸ், நிபா, இப்போது "கரோனா' வைரஸ் போன்ற நோய்த்தொற்றுகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்க வேண்டிய தர்மசங்கடம் ஏற்பட்டிருக்கிறது.
- உலகமயச் சூழல் ஒரு மிகப் பெரிய சுகாதார சவாலாக மாறியிருக்கிறது. அதிவிரைவாகவும், அதிக அளவிலும் சர்வதேச அளவில் மனிதர்கள் பயணிக்கிறார்கள். உலகின் ஏதாவது மூலையில் உருவாகும் எந்தவொரு நோய்த்தொற்றும் சர்வதேச அளவில் ஒரு சில மாநிலங்களில் பரவிவிடுகிறது. உதாரணமாக, சீனாவில் உருவான "சார்ஸ்' நோய்த்தொற்று, ஓராண்டுக்குள் 30 -க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியது. லட்சக்கணக்கான சீனர்கள் உலகம் முழுவதும் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
- சீனாவின் மர்மக் காய்ச்சலான "கரோனா' வைரஸ் நோய்த்தொற்றை இந்தியா முற்றிலுமாகத் தடுத்துவிட முடியாது. அதனால், அதை எதிர்கொள்ள போர்க்கால அவசரத்துடன் நடவடிக்கைகளை மத்திய - மாநில அரசுகள் மக்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்க வேண்டும்!
நன்றி: தினமணி (25-01-2020)