TNPSC Thervupettagam

கரோனாவுக்குத் தடுப்பூசி: அவசரத் தேவைதான்… ஆனால், அவசரப்படக் கூடாது!

July 8 , 2020 1657 days 1304 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் (ஐசிஎம்ஆர்) நிலவும் பிரச்சினைகளை கரோனா தொற்று மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறது.

  • ஐசிஎம்ஆரின் தலைவர் பல்ராம் பார்கவா கடந்த வாரம் மருத்துவர்களுக்கு எழுதிய கடிதமானது, ஆகஸ்ட் 15-க்குள் கரோனாவுக்குத் தடுப்பூசி தயாராக இருக்கும் வகையில் மருந்துகளை மனிதர்களிடம் பரிசோதித்துப் பார்ப்பதற்குக் கட்டாயப்படுத்துவதுபோல் தோன்றுகிறது.

  • அந்தக் கடிதம் குறித்த சலசலப்புகள் எழுந்ததும், கொள்ளைநோய்க்குத் தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான அவசரத் தேவையை உணர்த்துவதே தமது நோக்கம் என்றும், தடுப்பூசியை மேம்படுத்துவது குறித்த விதிமுறைகளிலிருந்து விலகும் நோக்கம் எதுவுமில்லை என்றும் ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

  • மிகப் பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் இச்சூழலில், உலகம் முழுவதும் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளெல்லாம் மருந்து, தடுப்பூசி சோதனைகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்திவருகின்றன.

  • உடனடித் தேவையின் காரணமாக மருந்துகளைத் தயாரிப்பதில் சற்று நெகிழ்வான போக்கு பின்பற்றப்படுவதுடன், மருத்துவத் துறையின் வழிகாட்டலின்படி சந்தையிலும் அவை அனுமதிக்கப்படுகின்றன.

  • ரெம்டெசிவிர்’, ‘பவிபிரெவிர்’ போன்ற மருந்துகள் குறைந்த அளவிலேயே பலனளிக்கிறபோதும் நோயாளிகளுக்கு அவை பரிந்துரைக்கப்படுவதற்கான காரணமும் அதுதான்.

  • தடுப்பூசிகளைப் பொறுத்தவரை அவை மருந்துகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமானவை. அனைத்து வகை தடுப்பூசிகளுக்குமான அடிப்படைத் தத்துவமானது ஆரோக்கியமான தன்னார்வலர்களுக்கு நோய்க்கூறுகளை உட்செலுத்துவதோடு தொடர்புடையது.

  • பரிசோதிக்கப்படும் தடுப்பூசியின் முதற்கட்ட சோதனையானது அது ஆரோக்கியமானவர்களை நோயாளியாக்கக் கூடாது என்பதுதான்.

  • இரண்டாவதாக, அந்தத் தடுப்பூசி நோய்த்தடுப்பு ஆற்றலைத் தூண்டிவிட வேண்டும். அனைத்துக்கும் மேலாக, அது செயல்திறன் மிக்கதாக இருக்க வேண்டும். நடப்புச் சூழலில் சில ஆயிரம் பேரிடம் அதைப் பரிசோதித்துப் பார்த்தால் மட்டுமே அது நலமளிப்பதாக இருக்கும்.

  • தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களைவிட அவர்கள் அதிகளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்பதை நீண்ட கால நோக்கில் நிரூபித்தாகவும் வேண்டும். இந்த ஒவ்வொரு படிநிலையையும் அவசரப்படுத்த முடியாது.

  • கோவாக்ஸின்’ மருந்து தயாரிப்பு நிறுவனமான ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக், தடுப்பூசி தயாரிப்பதில் அனுபவமும் நன்னம்பிக்கையும் கொண்டது.

  • சார்ஸ்-கோவிட்-2’ கிருமியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட கூறுகளைக் கொண்டு ‘கோவாக்ஸின்’ மேம்படுத்தப்பட்டது. எனினும், பரிசோதிக்கப்படும் தகுதியான தடுப்பூசிகளில் நூறில் ஒன்றாகவே இது இருக்கும். தடுப்பூசிக்கான சோதனைகளை நடத்தி முடிப்பதற்கே குறைந்தபட்சம் 6-9 மாதங்கள் வரை தேவைப்படும் என்று தெரிவித்திருக்கிறார் உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை அறிவியலாளரான சௌம்யா சுவாமிநாதன்.

  • இதற்கிடையில், பெரும்புகழ் வாய்ந்த ஐசிஎம்ஆருக்கு ஆய்வுகளின் அடிப்படைகளையே தவிர்த்துவிடலாம் என்கிற குழப்பம் எப்படி வந்ததென்று தெரியவில்லை. அறிவியலை நம்முடைய வேகத்துக்கு அவசரப்படுத்த முடியாது.

  • நோயின் புதிய அம்சங்கள் அனைத்தும் தொடர்ந்து பொதுக்கவனத்துக்குக் கொண்டுவரப்படுகின்றன. நெருக்கடியான இந்த நேரத்தில் வெளிப்படைத்தன்மையைப் பின்பற்றுவது மட்டுமே சிறந்த அணுகுமுறையாக இருக்க முடியும்.

நன்றி: தி இந்து (08-07-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories