- ஜனவரி 30 அன்று இந்தியாவில் முதல் கரோனா தொற்றாளர் கேரளத்தில் கண்டறியப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது.
- இதுவரை இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கோடியே 7 லட்சத்து 36 ஆயிரம் பேர்; உயிரிழந்தவர்கள் ஒரு லட்சத்து 54 ஆயிரம் பேர். மக்கள்தொகை அடிப்படையில் உலக நாடுகளோடு ஒப்பிடும்போது, கரோனாவின் பரவலும் பாதிப்பும் இந்தியாவில் மிகக் குறைவு.
- ஓராண்டுக்குப் பிறகு இங்கு கரோனா பரவலின் ‘வரைபட வளைவு’ இறங்குமுகத்தில் இருக்கிறது. அதே வேளையில், மருத்துவக் கட்டமைப்புகளில் மேம்பட்டதாக அறியப்படும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் இந்த வளைவு இன்னமும் உச்சத்தை நோக்கியே செல்கிறது.
- இந்தப் பின்னணியில், இந்தியா மேற்கொண்ட மருத்துவ முன்னெடுப்புகளைப் பின்னோக்கிப் பார்த்தோமானால், பலவீனமான உள்கட்டமைப்புகளை அவசர நிதி ஒதுக்கி, படிப்படியாக மேம்படுத்தி கரோனோ பெருந்தொற்றைச் சமாளித்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
- கேரளத்தைத் தொடர்ந்து மார்ச் 4-ல் இத்தாலியிலிருந்து இந்தியாவுக்குச் சுற்றுலா வந்தவர்களில் 14 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியானது.
- மார்ச் 12-ல் இந்தியாவில் கரோனாவின் முதல் உயிர்ப்பலி பதிவானது. மார்ச் 25 அன்று இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தது.
- அன்றைய தேதியில் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் 1,403 பேர்; இறந்தவர்கள் 47 பேர். ஏப்ரல் இறுதியில் இறப்பு எண்ணிக்கை 1,075 ஆனது. இது 23 மடங்கு அதிகம். அக்டோபரில் கரோனா பலி ஒரு லட்சத்தைக் கடந்தது.
- இந்த வேகத்தில் கரோனா கோரதாண்டவம் ஆடினால், இந்தியா தாங்காது என்றே உலக நாடுகள் கணித்தன. ஆனால், இன்று கரோனா தொற்றின் தினசரி இறப்பு 127-க்குக் குறைந்திருக்கிறது.
மருத்துவக் கட்டமைப்பில் போதாமைகள்
- ஆரம்பத்தில் கரோனா இந்திய நகர்ப்புறங்களில் மட்டுமே அதிகம் பரவியது. ஊரடங்கில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் பணியிழந்தனர்; போக்குவரத்து வசதியில்லாமல் பல ஆயிரம் கிமீ தூரம் நடந்தே சொந்த ஊர் திரும்பினர்.
- அப்போது அவர்கள் மூலம் பல வடமாநிலங்களில் கிராமங்களிலும் கரோனா வேகம் பிடித்துப் பரவியது. இந்தச் சூழலில் இந்தியாவில் நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களுக்கு இடையில் மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சமச்சீரான முறையில் பரவலாக்கப்படவில்லை. இந்திய மக்கள்தொகையில் 65% பேர் கிராமவாசிகள்தான்.
- ஆனால், அரசு மருத்துவமனைப் படுக்கை வசதிகள் 65% நகர்ப்புறங்களில்தான் உள்ளன. இப்படி வலு குறைந்த மருத்துவக் கட்டமைப்பு மூலம் இந்தியா கரோனாவை எப்படிச் சமாளிக்கும் என்ற கவலை பொதுவெளியில் அதிகரித்தது.
- மேலும், அப்போது கரோனா தொற்றாளர்களை அடையாளம் காண பரிசோதனை வசதிகள் இல்லை. சிகிச்சைக்குத் தகுந்த மருந்துகள் இல்லை. தடுப்பூசி இல்லை. அரசு மருத்துவமனைகளில் இருக்கும் படுக்கை வசதிகள் வழக்கமான நோயாளிகளுக்கே போதுமானதாக இல்லை.
- அதனால், கரோனா தொற்றாளர்களுக்குத் தனி இடமில்லை. அடுத்து, மருத்துவப் பணியாளர்களுக்குத் தேவையான ‘பிபிஇ’ எனும் முழுப்பாதுகாப்பு உடைகள், மருத்துவமனை ‘ஐசியு’ அவசரப் பிரிவுகள், ஆக்ஸிஜன் விநியோகம், வென்டிலேட்டர் வசதிகள் ஆகியவற்றில் கடுமையான பற்றாக்குறை. இப்படி போதாமைகளோடுதான் இந்தியா கரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியது.
பரிசோதனைகளின் முக்கியத்துவம்
- கரோனா தொற்றாளர்களைத் தனிமைப்படுத்துவதுதான் கரோனாவுக்கு எதிரான போரில் முதல் படி என்பதைப் புரிந்துகொண்ட ஒன்றிய அரசு ‘ஆர்.டி.பி.சி.ஆர்.’ மற்றும் ‘ஆர்.ஏ.டி’ பரிசோதனைக் கருவிகளை இறக்குமதி செய்து, பெருநகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரிசோதனையை மேற்கொண்டது. இதுவரை இந்தியாவில் மொத்தம் 7,416 ஆய்வகங்களிலும், 17,920 சளிச் சேகரிப்பு மையங்களிலும் சேர்த்து 12 கோடிப் பேருக்கு இந்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கரோனாவுக்கு தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்ஸிமீட்டர், கிருமிநாசினிப் பயன்பாடு, முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற புதிய வழிகள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதிலும் 40,000 வென்டிலேட்டர்கள் மட்டுமே இருந்தன. அடுத்த ஓராண்டுக்குள் 6 லட்சம் வென்டிலேட்டர்களை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.
- வளர்ந்த வெளிநாடுகளில் ஆரம்பக் கட்ட கரோனா தொற்றாளர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி தொலைமருத்துவத்தில் சிகிச்சை அளிக்கும் நிலையில், இந்தியாவில் அவர்களை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை கொடுக்க நம் மாநில அரசுகள் கரோனா வார்டுகளைத் தனியாக அமைத்தன; அவசரப் பிரிவு வசதிகளை மேம்படுத்தின.
- ஊரடங்கின்போது பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில், 108 ஆம்புலன்ஸ் சேவையும் அதிகரித்தது. சிகிச்சைக்கு ‘ஃபெவிபிரவிர்’, ‘ரெம்டெசிவிர்’, ‘டொசிலிசுமாப்’ ஆகிய புதிய மருந்துகள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
- தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் பெரிய நகரங்களில் எல்லாமே கரோனா முகாம்கள் அமைக்கப்பட்டன. அறிகுறிகள் இல்லாத கரோனா தொற்றாளர்கள் அங்கு தனிமைப்படுத்தப்பட்டனர்.
- தேவைப்படுவோர் 2 வாரம் மருத்துவக் கண்காணிப்பில் இருந்தனர். கரோனா தடுப்பில் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்திக்கு முக்கியப் பங்கு உள்ளதை அறிந்து, இந்த முகாம் பயனாளிகளுக்கு ஆரோக்கிய உணவு வழங்கப்பட்டது. யோகா, மூச்சுப் பயிற்சிகள் கற்பிக்கப்பட்டன.
- உள்ளாட்சிகள் மூலம் பொதுமக்களுக்குக் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. கரோனா பாதிப்பு உச்சம் தொட்டபோது, தனியார் மருத்துவமனைகளும் களத்தில் புகுந்தன. இந்தியர்களிடம் இருந்த இயற்கை நோய் எதிர்ப்புச் சக்தியும், பாரம்பரிய உணவுமுறையும், வெயிலில் உழைப்பதும், ‘பி.சி.ஜி’, ‘எம்.எம்.ஆர்.’ தடுப்பூசிப் பயன்பாடுகளும் கரோனாவை வெற்றிகொள்ள உதவின. தடுப்பூசிக்கு முன்பாகவே இது சாத்தியமானது.
தடுப்பூசிகளின் வருகை
- தடுப்பூசித் தயாரிப்பிலும் விநியோகத்திலும் இந்தியா சுயசார்பும் தன்னிறைவும் பெற்ற நாடு என்பது கரோனா விஷயத்தில் உறுதியானது. வளர்ந்த வெளிநாடுகளுக்கு இணையாக, கரோனாவுக்கு எதிரான போரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இலவசத் தடுப்பூசி செயல்திட்ட’த்தைச் சென்ற மாதம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
- அதில் முதன்மை ஆயுதங்களாக ‘கோவிஷீல்டு’, ‘கோவேக்ஸின்’ எனும் இரண்டு இந்தியத் தடுப்பூசிகளை அவசரத்துக்குப் பயன்படுத்திக்கொள்ள ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது.
- முதல் கட்டத்தில் ஆறு மாதங்களுக்குள் 30 கோடிப் பேருக்கு 60 கோடித் தவணைகள் தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற இலக்குடன் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டம், ஆரம்பத்தில் மந்தநிலையில் காணப்பட்டாலும், இப்போது மெல்ல மெல்ல வேகமெடுப்பது ஆறுதல் அளிக்கிறது.
- இந்தத் தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. இதுவரை நாட்டில் 37 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இவை செலுத்தப்பட்டதில் அச்சுறுத்தும் பக்கவிளைவுகள் இல்லை. தடுப்பூசிதான் கரோனாவுக்கான கடைசி ஆயுதம்.
- ஆகவே, ஊடகங்களில் உலவும் தடுப்பூசிகள் குறித்த புரளிகளைப் புறந்தள்ளிவிட்டு, தகுதியானவர்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசிகளில் ஒன்றை 2 தவணைகள் செலுத்திக்கொள்ள வேண்டும்.
- அதேநேரம் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கரோனா முன்னெச்சரிக்கைகளையும் மறந்துவிடக் கூடாது. அப்போதுதான் கரோனாவை நாம் முழுதாக வெற்றிகொள்ள முடியும்.
நன்றி: இந்து தமிழ் திசை (02-02-2021)