TNPSC Thervupettagam

கர்தார்பூர் வழித்தடம்

November 13 , 2019 1892 days 2180 0
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவில் புதியதொரு அத்தியாயத்தை கர்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்தியது. சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் தேவ், தனது வாழ்நாளின் கடைசி 18 ஆண்டுகளை கர்தார்பூரிலுள்ள குருத்வாராவில்தான் கழித்தார். அதனால் கர்தார்பூரிலுள்ள "குருத்வாரா தர்பார் சாஹிப்', அந்த மதத்தினரின் மிக முக்கியமான புனிதத் தலம்.

கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப்

  • இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியப் பகுதியிலுள்ள தேரா பாபாநானக் குருத்வாராவிலிருந்து நான்கு கி.மீ. தொலைவிலுள்ள கர்தார்பூர் குருத்வாரா தர்பார் சாஹிப் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டது. அன்று முதல் பாகிஸ்தானிலுள்ள சீக்கியர்கள் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கும் புனிதப் பயணம் மேற்கொள்வது கானல்நீர் கனவாகத் தொடர்ந்து வந்தது.
  • இதுவரை இந்தியாவிலுள்ள சீக்கியர்கள் இந்திய எல்லைக்குள் அமைக்கப்பட்டிருக்கும் கண்காணிப்பு கோபுரத்தில் ஏறி, பாதுகாப்புப் படையினரின் தொலைநோக்கியின் மூலம் குருத்வாரா தர்பார் சாஹிப்பை தரிசித்து திருப்தி அடைந்து வந்தனர். கர்தார்பூரிலுள்ள குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கு புனிதப் பயணம் மேற்கொள்ள மாட்டோமா என்று ஏங்கிக் கொண்டிருந்த இந்திய சீக்கியர்களுக்கு குருநானக் தேவின் 550-ஆவது பிறந்த ஆண்டு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது.

கர்தார்பூர் வழித்தடம்

  • கடந்த செப்டம்பர் 2018-இல் இந்தியாவும் பாகிஸ்தானும் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், குருத்வாரா தர்பார் சாஹிப்புக்கும் இடையே கர்தார்பூர் வழித்தடம் ஏற்படுத்துவது என்றும், நுழைவு அனுமதி (விசா) இல்லாமல் இரு தரப்பு யாத்ரீகர்களும் பயணிக்க வழிகோலுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. உரி, புல்வாமா தாக்குதல்களைத் தொடர்ந்து இந்திய - பாகிஸ்தான் உறவு முற்றிலுமாகச் சிதைந்துவிட்ட சூழல்.
  • இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ராஜாங்க ரீதியாக மிகப் பெரிய பிரச்னைகள் தோன்றியும்கூட, கர்தார்பூர் வழித்தடம் நனவாகியிருப்பதற்கு இரு நாட்டு அரசுகள் மட்டுமல்ல, குருநானக் தேவின் ஆசியும்கூட காரணம் என்று ஏற்றுக்கொள்ளத் தோன்றுகிறது.
  • பிரதமர் மோடி கூறியிருப்பதுபோல, ஓராண்டு இடைவெளியில் கர்தார்பூர் வழித்தடத்தை நனவாக்கியதற்கு பாகிஸ்தானிய தொழிலாளிகளுக்கு உண்மையிலேயே நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம். கடந்த சனிக்கிழமை முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இந்நாள் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் உள்ளிட்ட சீக்கிய புனித யாத்ரீகர்கள் கர்தார்பூர் வழித்தடம் மூலம் சென்று குருத்வாரா தர்பார் சாஹிப்பில் பிரார்த்தனை நடத்தித் திரும்பியிருக்கிறார்கள்.

நுழைவு அனுமதி

  • மூன்று தலைமுறை சீக்கியர்களின் கனவு நனவாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த ஓராண்டு காலம் நுழைவு அனுமதி இல்லாமல் தினந்தோறும் 5,000 இந்திய - பாகிஸ்தானிய சீக்கிய யாத்ரீகர்கள் இரு குருத்வாராக்களிலும் பிரார்த்தனை நடத்த வழிகோலப்பட்டிருக்கிறது. அதற்குப் பிறகும் இதே நிலைமை தொடர வேண்டும் என்பதுதான் உலக அளவிலான சீக்கியர்களின் கனவும் விருப்பமும் வேண்டுகோளும்.
  • வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது என்றாலும்கூட, பகைமை உணர்வு பாராட்டும் இரு நாடுகளுக்கு இடையேயான நிகழ்வு என்பதால் நெருடல்கள் இல்லாமல் இல்லை. இந்திய யாத்ரீகர்கள் கர்தார்பூரை வந்தடையும் நேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் குறித்தும், அயோத்தி தீர்ப்பு குறித்தும் கருத்துத் தெரிவித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
  • இந்திய முஸ்லிம்களின் நலன் குறித்துக் கவலை தெரிவித்திருக்கும் பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியும், பலுசிஸ்தானில் சக முஸ்லிம் குடிமக்களுக்கும், சீனாவின் ஜிங்ஜியான் பகுதியிலுள்ள முஸ்லிம்களுக்கும் இழைக்கப்படும் கொடுமைகள் குறித்தும் பேசாமல் இருந்தது அவர்களது வாதத்தின் போலித்தனத்தைத்தான் எடுத்தியம்புகிறது.

இம்ரான் கான் நியாசி

  • இந்தியத் தரப்பிலும் சரி, பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமருக்கு நன்றி தெரிவித்தபோது, அவரை "இம்ரான் கான் நியாசி' என்று அழைத்திருக்கக் கூடாது. ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதியாக இருக்கும் நியாசி என்கிற பகுதியைச் சேர்ந்தவர் என்று பொருள்படும் நியாசி என்கிற பெயருக்குப் பின்னால் ஒரு களங்கம் இருக்கிறது.
  • 1971 இந்திய - பாகிஸ்தான் போரில் பாகிஸ்தானின் சரணாகதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டவர் ஜெனரல் அமீர் அப்துல்லாகான் நியாசி என்பவர். பாகிஸ்தானின் தோல்விக்கு அடையாளமான அந்தப் பெயர் அவமானமாகக் கருதப்படுகிறது. அதனால் இம்ரான் கான் அதிகாரப்பூர்வமாக, தனது பெயருக்குப் பின்னால் இருந்த நியாசி என்பதை அகற்றிவிட்டிருக்கும் நிலையில், கர்தார்பூர் வழித்தடம் திறக்கப்பட்டதற்கு நன்றி கூறும்போது அதை நினைவுபடுத்தியது அரசியல் நாகரிகம் அல்ல.
     கர்தார்பூர் வழித்தடம் வரலாற்று நிகழ்வு.
  • அதே நேரத்தில், பிந்தரன்வாலே உள்ளிட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்பான துண்டுப் பிரசுரங்களையும், விடியோ குறுந்தகடுகளையும் விற்பனை செய்து பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் முயற்சியில் இஸ்லாமாபாத் ஈடுபட்டிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.
  • இந்த வழித்தடத்தை மத நல்லிணக்கத்திற்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, பிரிவினைவாதத்தை வளர்ப்பதற்கு பாகிஸ்தானால் பயன்படுத்தப்படுவதை இந்தியா மிகவும் எச்சரிக்கையாகக் கண்காணிக்க வேண்டும். தீவிரவாத விஷக்கிருமிகளை சீக்கியர்கள் இடையே பரப்பும் பாகிஸ்தானின் முயற்சிக்கு கர்தார்பூர் பயன்பட்டுவிடக் கூடாது!

நன்றி: தினமணி (13-11-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories