- ஏவுகணை (ராக்கெட்) இன்று நேற்று கண்டுபிடிக்கப்பட்டதல்ல. சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஏவுகணைக்கான அடித்தளம் அமைக்கப்பட்டுவிட்டது. கிரேக்கர்களும் சீனர்களும் மிகப் பெரிய அளவில் பங்களித்திருக்கிறார்கள். பல நூறு ஆண்டுகளில் ஏவுகணைத் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டேயிருந்தன.
- 16ஆம் நூற்றாண்டில் கலீலியோ கலிலி, ஐசக் நியூட்டன் காலத்தில் நவீன ஏவுகணை அறிவியல் உருவானது. பிரிட்டனின் வில்லியம் காங்ரீவ், சோவியத் ஒன்றியத்தின் கான்ஸ்டன்டின் சியால்கோவிஸ்கி, அமெரிக்காவின் ராபர்ட் எச். காடர்ட், ஜெர்மனியின் ஹெர்மன் ஒபர்த் போன்றவர்கள் ஏவுகணை வரலாற்றில் முக்கியமானவர்களில் சிலர்.
- ஆங்கிலேயருக்கு எதிரான போரில் நம் மைசூர் மன்னர் திப்பு சுல்தான் ஏவுகணைகளைப் பயன்படுத்தியிருக்கிறார். 224 ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட ‘மைசூர் ஏவுகணைகள்’ புகழ்பெற்றவை. லண்டன் அருங்காட்சியகத்தில் அவை வைக்கப்பட்டிருக்கின்றன.
- அறிவியலாளர்களுக்கு மத்தியில் ஓர் எழுத்தாளருக்கும் ஏவுகணை வரலாற்றில் இடம்கொடுத்திருக்கிறது அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா. அவர், பிரெஞ்சு எழுத்தாளர் ஜூல்ஸ் வெர்ன். அவர் எழுதிய ‘From the Earth to the Moon’ 1865ஆம் ஆண்டு வெளிவந்தது.
- பூமியிலிருந்து நிலவுக்கு மனிதர்கள் செல்வதுதான் கதை. இந்த நாவல் வந்த பிறகே, விண்வெளிக்கு மனிதர்கள் செல்ல வேண்டும் என்கிற ஆர்வம் உருவானது. 104 ஆண்டுகளுக்குப் பிறகு, 1969இல் அப்பல்லோ 11 விண்கலம் 3 மனிதர்களை ஏற்றிக்கொண்டு நிலவுக்குச் சென்றது.
- அந்தப் பணியில் ஈடுபட்டிருந்த விஞ்ஞானிகள், ’மனிதர்கள் விண்வெளியில் எடையற்றவர்களாக உணர்வார்கள்’ என்பது போன்ற பல அறிவியல் தகவல்கள் ஜூல்ஸ் வெர்ன் தன் நாவலில் எழுதியிருந்ததைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். அதனால்தான் ஜூல்ஸ் வெர்ன் ‘அறிவியல் புனைகதைகளின் தந்தை’ என்று அழைக்கப்படுகிறார். ஒரு கற்பனையை உண்மையாக மாற்றும் சக்தி அறிவியலுக்கே இருக்கிறது. அறிவியல் மக்களுக்கே! அறிவியல் நாட்டுக்கே! அறிவியல் புதிய கண்டு பிடிப்புகளுக்கே!
நன்றி: இந்து தமிழ் திசை (31– 08 – 2023)