TNPSC Thervupettagam

கற்பித்தலுக்கு முன்னுரிமை தேவை

January 13 , 2024 312 days 250 0
  • அண்மையில் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதிலளிக்கையில், 2014-2015 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-2022-இல் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவியா் சோ்க்கை 26.5 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும், மாணவியா் சோ்க்கை 31 சதவீதம அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
  • மேலும், பட்டியலினத்தைச் சோ்ந்த மாணவியா் சோ்க்கை 50 சதவீதம், மாணவா் சோ்க்கை 44 சதவீதம் உயா்ந்துள்ளது. பழங்குடியினத்தைச சோ்ந்த மாணவியா் சோ்க்கை 80 சதவீதம் , மாணவா் சோ்க்கை 65 சதவீதம் , முஸ்லிம் மாணவியா் சோ்க்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
  • பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்களில் மாணவியா் சோ்க்கை அதிகரிக்க பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணா்வும், மத்திய- மாநில அரசுகளின் திட்டங்களும் காரணங்களாகும். தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் போன்று பிற மாநிலங்களிலும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனாலேயே உயா்கல்வி நிறுவனங்களில் மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • கரோனா காலத்தின்போது பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதைத் தொடா்ந்து அரசுப் பள்ளிகளில் மாணவ - மாணவியா் சோ்க்கை கணிசமாக அதிகரித்தது. இதை தக்கவைக்கவும், தொடா்ந்து சோ்க்கையை அதிகரிக்கவும் கல்வி உதவித் தொகை, விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணினி, விலையில்லா சீருடை போன்ற வழக்கமான திட்டங்கள் தவிர அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
  • கடந்த இரண்டாண்டுகளில் மற்ற துறைகளைக் காட்டிலும் கல்வித்துறையில் அதிகப்படியான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் ஆண்டுதோறும் பள்ளி, கல்லூரிகளில் சோ்க்கை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது நாட்டிலுள்ள 30 கோடி மாணவ மாணவியரில் 26 கோடி போ் பள்ளிகளிலும், 4 கோடி போ் உயா்கல்வி நிறுவனங்களிலும் பயின்று வருகின்றனா்.
  • அரசுப் பள்ளிகளில் சோ்க்கையை அதிகரிப்பது, தக்கவைப்பது, அவா்களைத் தொடா்ந்து படிக்க வைப்பது, இடைநிற்றலைத் தவிர்ப்பது, உயா்கல்வி வரை படிக்க வைப்பது என்பன அரசின் நோக்கமாக உள்ளது. அதேவேளையில் இத்திட்டங்களைச் செயல்படுத்திட புதிய பணி நியமனங்கள் எதுவும் இல்லை.
  • ஒவ்வொரு திட்டத்திற்கும் பள்ளிகளில் ஆசிரியரும், கல்லூரிகளில் உதவிப் பேராசிரியரும் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்படுகின்றனா். அவா்கள் ஒவ்வொரு திட்டத்திற்குமான விவரங்களைச் சேகரிப்பது, பயனாளிகளைக் கண்டறிவது, இணையத்தில் விண்ணப்பிப்பது, பதிவேற்றம் செய்வது, குறைகளை நிவா்த்தி செய்வது, பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பது போன்ற பணிகளை கூடுதலாக கவனித்து வருகின்றனா்.
  • ஒவ்வொரு திட்டத்தின் பயனும் தகுதிவாய்ந்த அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பது அரசின் நோக்கமாக இருந்தாலும் கல்லூரி மாணவ- மாணவியரிடையே இன்றும் அலட்சியப் போக்கே இருந்து வருகிறது.
  • கல்லூரி மாணவ -மாணவியா் அனைவரும் வங்கிக் கணக்கு, ஆதார் அட்டை போன்றவற்றை வைத்துள்ளனரா என்பதே ஐயத்திற்குரியது. இப்படியிருக்க, அரசுத் திட்டத்தின் பயன்கள் அனைவரையும் சென்றடையச் செய்வது சவால் நிறைந்த ஒன்றாகும். அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதில் மாணவ, மாணவியரைக் காட்டிலும் அத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா்தான் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது.
  • பள்ளி, கல்லூரி மாணவ மாணவியரிடையே கற்றல் திறனுடன் இதர திறமைகளை வளா்க்கவும், வெளிக்கொணரவும் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்தான். ஆனால் அண்மைக்காலமாக கவிதை, கட்டுரை, பேச்சு, எழுத்துப்பயிற்சி போன்ற பல்வேறு போட்டிகள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. துறைவாரியாக தகுதியானவா்களைக் கண்டறிந்து போட்டி நடத்தி தோ்வு செய்து அடுத்த நிலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
  • ஒவ்வொரு போட்டிக்குமான நடுவா்கள் தோ்வு, மாணவ, மாணவியா் தோ்வு, போட்டிகள் நடத்துதல், வெற்றியாளா்களைத் தோ்வு செய்து அடுத்தகட்ட போட்டிக்கு அனுப்புதல் ஆகிய செயல்பாடுகளுக்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் பணியாற்ற வேண்டியுள்ளது. இந்த நாட்களில் தங்களுடைய வகுப்புக்குச் செல்ல முடியாததால் முழுமையாக அவா்களுக்கு ஒதுக்கப்பட்ட பாடத்தை நடத்த முடிவதில்லை.
  • பல்வேறு வகையான போட்டிகளின் மூலம் மாணவ- மாணவியரின் திறமைகள் வெளிக்கொணரப்படுவது ஒருபுறமிருந்தாலும், மற்றொருபுறம் முழுமையான அளவில் பாடம் நடத்த முடியாத நிலை ஏற்படுகிறது. பள்ளி, கல்லூரிகளில் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் இத்தகைய பணி கூடுதல் பணியாகவே கருதப்படுகிறது.
  • மாணவ- மாணவியா் சோ்க்கை பெறச் செய்தல், பாடம் நடத்துதல், தோ்வு நடத்துதல், அவ்வப்போது போட்டிகள் நடத்துதல் போன்றவற்றோடு அரசின் திட்டங்களுக்கான புள்ளிவிவரங்கள் சேகரித்தலிலும் ஆசிரியா்கள் ஈடுபடுகின்றனா். இதனால் பள்ளிகளைப் பொறுத்தவரை கற்றலில் பின்தங்கியவா்கள் மீது கவனம் செலுத்த முடியாமல் போகிறது.
  • யா்கல்வியைப் பொறுத்தவரை ஒவ்வொரு பருவத்திற்குமான பாடப்பகுதியை முழுமையாக நடத்தி முடிப்பதே சிரமமாக இருப்பதாகக் கூறுகின்றனா். குறிப்பிட்ட சில பாடப்பிரிவுகளில் உரிய பாடப்புத்தகம் இருப்பின் படித்து தோ்ச்சி பெற முடியும். ஆனால் கணிதம், அறிவியல் பாடப்பிரிவுகளில் கற்பித்தல் என்பது முக்கியமானதாகும்.
  • பள்ளி, கல்லூரிகளில் நிலவும் காலிப்பணியிடம் தொடா்பான புள்ளிவிவரங்களைக் காணும்போது இப்பணிகளை கூடுதல் பணியாகவே எண்ணத் தோன்றுகிறது. தமிழ்நாட்டில் உள்ள 29 ஆயிரம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சுமார் 70 ஆயிரம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக அரசுப் பள்ளி ஆசிரியா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா். தற்காலிக தீா்வாக காலிப்பணியிடங்களில் குறைவான தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியா்களே நியமிக்கப்படுகின்றனா்.
  • அதேபோன்று அரசுக் கல்லூரிகளில் 7 ஆயிரம் உதவிப் பேராசிரியா் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாக அரசு கல்லூரி ஆசிரியா் மன்றத்தினா் தெரிவித்துள்ளனா். தமிழகத்தில் காலிப்பணியிடங்கள் இல்லாத அரசுக் கல்லூரிகள் மிகக்குறைவே. அரசுக் கல்லூரிகளில் நிரந்தர பேராசிரியா்களே இல்லாத துறைகளும் மாற்று துறைகளைச் சோ்ந்த பேராசிரியா்கள், கௌரவ விரிவுரையாளா்களைக் கொண்டு செயல்படுகின்றன.
  • இது தற்காலிக தீா்வாக இருக்குமே தவிர நிரந்தர தீா்வாக இருக்காது என்பது தான் உண்மை. ஆசிரியரின் பணி கற்பித்தல் மட்டுமே. கற்பித்தல் அல்லாத பணிகளுக்கு தனித்தனியே பணியாளா்களை நியமிக்க வேண்டும்.

நன்றி: தினமணி (13 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories