TNPSC Thervupettagam

கலக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்: இந்தியாவின் அடுத்த முயற்சி எப்படி?

February 27 , 2025 2 days 14 0

கலக்கும் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம்: இந்தியாவின் அடுத்த முயற்சி எப்படி?

  • இந்தியா பல்வேறு துறைகளிலும் புதிய வேகத்தோடு முன்னேறி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உலகுக்கு அளித்து வருகிறது. கரோனா காலத்தில் தடுப்பு மருந்துகளை தயாரித்து உலக நாடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்தது. அடுத்ததாக, யூபிஐ எனப்படும் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அது தற்போது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் என பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் அடுத்த முயற்சிதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம். பாதுகாப்பான துரித போக்குவரத்தை உறுதி செய்கிறது இது.
  • வளர்ச்சி அடைந்த நாடுகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் கோடிக்கணக்கில் செலவிட முடியும் என்ற நிலை இருந்தது. இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கி தான் இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆராய்ச்சிகளுக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழித்து வருகிறது. உலகம் முழுவதும் அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.
  • மணிக்கு 1000 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் இந்த தொழில்நுட்பம் பயணிகள், சரக்கு போக்குவரத்தில் புதிய புரட்சியை உருவாக்கும். சென்னையில் இருந்து பெங்களூருக்கு வெறும் அரைமணி நேரத்தில் சென்று விடலாம். மெட்ராஸ் ஐஐடி, இந்திய ரயில்வே அமைச்சகத்தின் நிதி உதவியோடு 422 மீட்டர் நீளத்துக்கு ஹைப்பர்லூப் காரிடார் அமைத்து சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
  • ஆசியாவிலேயே முதன்முறையாக சர்வதேச ஹைப்பர் லூப் போட்டியை மெட்ராஸ் ஐஐடி சென்னையில் நடத்தியது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ், இந்த ஆராய்ச்சிக்காக ரூ.9 கோடிவரை செலவிட்டுள்ளதாக கூறியிருக்கிறார்.
  • முதல் கட்டமாக, 40 முதல் 50 கி.மீ. நீளத்துக்கு ஹைப்பர்லூப் காரிடார் அமைக்கத் திட்டம் உள்ளதாகவும், இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், பெரியநகரங்களை இணைக்கும் வகையில் புதிய வழித்தடங்கள் உருவாக்கப்படும் என பேசியிருக்கிறார். விமானம், ரயில் போக்குவரத்துக்கு மாற்றாக அமையும் ஹைப்பர்லூப் காரிடார், போக்குவரத்துத் துறையில் புதிய பாய்ச்சலாக அமையும். விமானத்தை விட ஏறக்குறைய 2 மடங்கு வேகத்தில் செல்ல முடியும் என்பதால் பயண நேரம் பாதியாகக் குறையும்.
  • இதில் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் புதிய தொழில்நுட்பங்களில் செய்யப்படும் கணிசமான முதலீடு. முதலில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கியவர் ஸ்விஸ் நாட்டைச்சேர்ந்த பேராசிரியர் மார்சல் ஜபர். 1992-ம் ஆண்டில் ஸ்விஸ்மெட்ரோ நிறுவனம் இந்த தொழில்நுட்ப ஆராய்ச்சிக்காக கோடிக்கணக்கில் செலவிட்டது. எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு 2009-ம் ஆண்டில் இந்த நிறுவனம் திவால் ஆனது.
  • தற்போது அமெரிக்காவின் வர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனமும் கனடாவின் டிரான்ஸ்பாட் நிறுவனமும்தான் தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன. புதிய தொழில்நுட்பங்கள் அவசியம்தான். ஆனால், இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடு, கோடிக்கணக்கான ரூபாயை இதுபோன்ற முயற்சிகளுக்கு செலவிடும்போது அரசு போதுமான முன்னெச்சரிக்கையும் கவனமும் செலுத்திய பிறகே இதில் இறங்க வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (27 – 02 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories