TNPSC Thervupettagam

கலப்படம், ஓர் உயிர்க்கொல்லி

August 7 , 2019 1981 days 2060 0
  • நுகர்வோர் அஞ்சும் ஒரு பிரச்னையாக இருப்பது கலப்படப் பொருள்கள்தான். உணவு கலப்படம் என்பது, ஒரு பொருளில் அதே போன்று பொருளை எளிதில் பிரித்தறிய முடியாதவாறு கலப்பது ஆகும். இந்தக் கலப்படம், சுத்தமான மூலப் பொருளின் தரத்தைக் குறைப்பதோடு, நுகர்வோருக்கு உடல்நலப் பாதிப்பினையும் தீராத நோய்களையும் ஏற்படுத்தி, உயிரினங்கள் உண்பதற்கு தகுதியற்றதாக மாற்றி விஷப் பொருளாக மாற்றி உடலுக்கும், உயிருக்கும் ஆபத்தை விளைவிக்கிறது.

கலப்படம்

  • கலப்படப் பொருள் என்பது உணவைப் பாதுகாப்பற்ற முறையில் தயாரிப்பதற்கு அல்லது இரண்டாந்தர நிலையில் தயாரிப்பதற்கு அல்லது தவறாகக் குறியிட்டு, போலி முத்திரையோடு தயாரிப்பதற்கு அல்லது வேறு பொருள்களைக் கொண்டு தயாரித்து விற்பனைக்குப் பயன்படும் பொருளைக் குறிக்கும்.
    கலப்படத்துக்கு அடிப்படைக் காரணம் சுயநலம். அதிக லாபத்தில் நிறைய பொருள்கள் விற்க வேண்டும், தரம் வேண்டாம், குறுக்கு வழியில் சம்பாதிக்க வேண்டும், நுகர்வோரின் உடல்நலம் குறித்து கவலை இல்லை என சில வியாபாரிகள் செயல்படுவதால்தான் கலப்படம் கோலோச்சுகிறது.
  • நாணயங்களை வாங்கிக் கொண்டு நாணயமில்லாதவர்கள் செய்யும் தொழில்தான் கலப்படத் தொழில். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பால் பொருள்கள், அரிசி, பற்பசை, காபி கொட்டைகள், தேயிலைத் தூள், இனிப்புப் பொருள்கள், அழகு சாதனப் பொருள்கள், குளிர்பானங்கள், தேன் அனைத்திலும் கலப்படம் விரவிக் கிடக்கின்றன.
    கலப்பட உணவில் கற்களும், மணலும் இருந்தால் அது பற்களையும், குடலின் மெல்லிய சதைப் பகுதிகளையும் பாதிக்கும், அழுக்குப் பொருள்கள் பாக்டீரியா மூலம் செரிமான சக்தியைப் பாதிக்கும். கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றில் கேசரி பருப்பு கலப்படம் செய்யப்படுகிறது.
  • இதை பயன்படுத்துவோருக்கு வாத நோய் ஏற்படும். கடுகில் ஆர்ஜீமோன் விதை கலப்படம் செய்யப்படுகிறது. இது, தோல் நோயை ஏற்படுத்தும்; உணவு எண்ணெயில் மினரல் ஆயில் சேர்க்கப்பட்டால் புற்று நோய் ஏற்படும். மஞ்சள் தூளில் லெட்குரோமேட் சேர்க்கப்படுகிறது. இது ரத்த சோகை, குறைப் பிரசவம், மூளை பாதிப்பை ஏற்படுத்தும். மிளகில் பப்பாளி விதையைக் கலக்கிறார்கள். இது இரைப்பை, கல்லீரல் பாதிப்புகளை ஏற்படுத்தும். சிறுவர்கள் விரும்பி உண்ணும் சாக்லெட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இது சிறுவர்களின் உடலைப் பருமனாக்குகிறது.

ஆய்வுகள்

  • இந்தியாவில் உற்பத்தியாகும் பால், பால் தொடர்பான பொருள்களில் 68 சதவீதம் கலப்படம் காணப்படுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இந்திய தரச்சான்று நிர்ணயித்துள்ள தரத்தின்படி பால் விற்பனை செய்யப்படுவதில்லை. பாலில் யூரியா, சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுகோஸ், வெள்ளை நிற பெயின்ட், ரீபைண்டு எண்ணெய் போன்ற ஆபத்தான பொருள்கள் கலக்கப்படுகின்றன.
  • கலப்படம் காரணமாக உடல் உறுப்புகள் பாதிப்படைந்து, எந்த நேரமும் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு என்றும், இந்தியாவில் பால் பொருள்களில் செய்யப்படும் கலப்படத்தை இப்போதே தடுக்காவிட்டால், 2025-ஆம் ஆண்டில் புற்று நோய் உள்ளிட்ட நோய்களால் 87 சதவீத மக்கள் பாதிப்படைவார்கள் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.
    குளிர் பானங்கள், இனிப்புகளில் அனுமதிக்கப்படாத சாயங்கள் சேர்க்கப்பட்டிருந்தாலும் புற்று நோய் ஏற்படும். பற்பசைகளில் நிகோட்டின் கலக்கப்படுவதாக தில்லி பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
  • அதாவது, ஒன்பது சிகரெட்டுகளைப் புகைத்தால் எவ்வளவு நிகோட்டின் உடலில் சேருமோ, அதே அளவில் நிகோட்டின் ஒவ்வொரு தடவை நாம் பல் துலக்கும்போதும் நம் உடலில் சேருகிறது. இதுவும் புற்றுநோய்க்கு அச்சாரமிட்டுக் கொடுக்கிறது. ஆண், பெண் முக அழகு பசைகளில் பன்றிகளின் கொழுப்பு சேர்க்கப்படுகிறது. இது இள வயது முகத்தை முதிர்ச்சியாக்கும்.
  • இந்தியாவில் விற்கப்படும் உணவுப் பொருள்களில் பாதி கலப்படமானவை என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதும் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் மூலம் கடந்த 2017-2018-ஆம் ஆண்டுக்கான உணவு பாதுகாப்பு குறித்த சோதனைகள் நடத்தப்பட்டன. இந்தச் சோதனைகளில் தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் விற்கப்படும் உணவுகளில் அதிக அளவு கலப்படும் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
  • தேசிய அளவில் நடத்தப்பட்ட சோதனைகளில் 99,000 வகையான உணவுப் பொருள்களில் 24,000 உணவுப் பொருள்கள் கலப்படம் எனவும், தமிழகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் 5,730 வகையான உணவுப் பொருள்களில் 2,601 உணவுப் பொருள்கள் கலப்படம் நிறைந்தவை எனவும் தெரியவந்துள்ளது.
  • மக்களவையில் மத்திய நுகர்வோர் நலத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2018-ஐ அறிமுகப்படுத்தி பேசும்போது, 2016-2019 வரையிலான காலகட்டத்தில் தரமற்ற, கலப்படமான உணவுகளை விற்றதற்காக 8,100 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்; அவர்களிடமிருந்து ரூ.43.65 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

நுகர்வோர் உரிமை

  • இந்த நிலையில், நுகர்வோர் உரிமை மற்றும் குறைகளுக்குத் தீர்வு காணும் வகையில், நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் மசோதா- 2018, மக்களவையில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி அன்று நிறைவேறியது; மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 6) நிறைவேறியது. இந்த மசோதா நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 1986-க்கு மாற்றாக அமையும். ஒருவர் தன் சுய பயன்பாட்டிற்காக பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கினாலோ அல்லது சேவையைப் பயன்படுத்திக் கொண்டாலோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலமோ, இணையதளம் மூலமோ அல்லது வெளியிடங்களில் நேரடியாக பொருள் வாங்கினாலும் அவர் நுகர்வோர் என இந்த மசோதா வரையறை செய்கிறது.
  • சரக்கு மற்றும் சேவைகளைப் பயன்படுத்துவதால் ஒருவரின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஏற்படும் ஆபத்துகளிலிருந்து பாதுகாத்தல், பொருள்கள், சேவைகளின் அளவு, ஆற்றல், தூய்மை, தரநிலை மற்றும் விலை ஆகியவை குறித்து நுகர்வோர் தன்னிச்சையாக அறிந்து கொள்ளுதல், போட்டி விலையில் பல்வேறு வகையான பொருள்கள் அல்லது சேவைகளை விரும்பி அணுகுதல், நியாயமற்ற அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராக தீர்வு காணுதல் ஆகிய நுகர்வோர் உரிமைகளுக்கு இந்த மசோதா வழிகோலுகிறது. நுகர்வோரின் நலனையும், நுகர்வோர் குறைகளை உடனடியாகத் தீர்ப்பதற்கு சிறப்பான நிர்வாக நடைமுறைகளையும் இந்த மசோதா கொண்டுள்ளது.
  • நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், செயல்படுத்தவும் மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு விரைவில் அமைக்கவுள்ளது. நுகர்வோர் உரிமைகளை மீறுவோர், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை வழி நடத்தி ஆபத்தை விளைவிப்போர் மீது இந்த ஆணையம் நடவடிக்கை எடுத்து நுகர்வோரைப் பாதுகாக்கும்.
  • தலைமை இயக்குநரின் மேற்பார்வையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு அது நுகர்வோர் உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்து வழக்குத் தொடுத்தல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை நிறுத்துதல், பாதிக்கப்பட்ட நுகர்வோருக்கு பொருளின் தொகையைத் திருப்பி அளித்தல், அபாயகரமான சேவையை அளித்தவருக்கு உரிய தண்டனை அளித்தல், அந்தப் பொருள்களுக்கு தடை விதித்தல், நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தவறான விளம்பரத்தை நிறுத்துதல், அபராதம் விதித்தல், அவ்வப்போது நுகர்வோர்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகளை வெளியிடுதல் ஆகிய பணிகளை இந்த ஆணையம் மேற்கொள்ளும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட ரீதியிலான நடவடிக்கை

  • தவறான பொருள்களால் நுகர்வோர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நுகர்வோர் தகராறு நிவாரண ஆணையங்கள் தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் அமைக்க இந்த மசோதா உத்தரவாதம் அளித்துள்ளது. தவறான விளம்பரங்கள் மூலம் நுகர்வோருக்கு பொய்த் தகவல்களை அளித்தல் அல்லது அவர்களை தவறாக வழி நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; நுகர்வோரைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் விளம்பரங்களை ஒளிபரப்பும் ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அந்த விளம்பரதாரர் மீதே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விவாதத்தின்போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • ஆனால், நுகர்வோரை தவறாக வழிநடத்தி விளம்பரம் செய்யும் நடிகர், நடிகைகளின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இந்த மசோதாவில் குறிப்பிடப்படவில்லை.
    நுகர்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பொருள்களை உற்பத்தி செய்வோர் மீதும், விளம்பரம் செய்வோர் மீதும் ரூ.10 லட்சம் வரை அபராதமும், இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்க இந்த ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது. தடையை மீறி இந்த விளம்பரம் தொடருமேயானால் ரூ.50 லட்சம் வரை அபராதமும், 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.
  • இந்தக் கலப்பட பிரச்னையை சட்டங்களால் மட்டும் தீர்த்து வைக்க முடியாது. மக்களிடமும் விழிப்புணர்வு இருக்க வேண்டும். குறைந்த விலையில் பொருள்கள் கிடைக்கின்றன என்றால் அதன் தரத்தை சோதிக்க வேண்டும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசாதோ, சட்டமாக மாறி கலப்படத் தொழிலுக்கும், போலி விளம்பரங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என நம்புவோம்.

நன்றி: தினமணி (07-08-2019)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories