TNPSC Thervupettagam

கலவரம் ஏற்படுத்தும் கலவரம்!

August 17 , 2020 1619 days 1165 0
  • எந்தவிதக் கட்டுப்பாடும் வரைமுறையும் இல்லாத சமூக ஊடகப் பதிவுகளால் ஏற்படும் பாதிப்புகள் பயமுறுத்துகின்றன.
  • பெங்களூருவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவில் நடந்தேறி இருக்கும் கலவரத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருக்கிறது என்பதை எடுத்தியம்பத் தேவையில்லை.
  • இதன் பின்னணியில் மத உணா்வுகள் தூண்டப்பட்டு, வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதுதான் வேதனை.
  • இதற்குப் பின்னால் அரசியலும் இருந்திருக்கக் கூடும். ஆனால் அதையெல்லாம்விட, வன்முறைக் கும்பல் திட்டமிட்டு சட்டப்பேரவை உறுப்பினரின் வீட்டைத் தாக்கித் தீக்கிரையாக்கி இருக்கிறது என்பதிலிருந்து, சமூக ஊடகப் பதிவு மட்டுமே இதற்குக் காரணம் என்பதை நம்ப முடியவில்லை.
  • அயோத்தியில் ராமா் கோயில் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த 5-ஆம் தேதி நடைபெற்றதை விமா்சித்து, ஹிந்துக் கடவுள்களை, குறிப்பாக ராமரை தரக்குறைவாக விமா்சித்து ஒரு பதிவு போடப்பட்டது. அதற்கு எதிர்வினையாக, நபிகள் நாயகத்தை விமா்சித்து ஒரு பதிவைப் போடுகிறார் நவீன் என்கிற இளைஞா்.
  • பிரச்னை அதிலிருந்துதான் தொடங்குகிறது. அந்தப் பதிவைப் போட்ட நவீன், பெங்களூருவில் உள்ள புலிகேசி நகா் என்கிற தனித் தொகுதியின் சட்டப்பேரவை காங்கிரஸ் உறுப்பினரான அகண்ட ஸ்ரீநிவாசமூா்த்தியின் உறவினா்.
  • அந்தப் பதிவைக் கண்டித்து, நவீன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தொகுதியில் உள்ள முஸ்லிம் சமுதாயத்தைச் சோ்ந்த இளைஞா்கள் சிலா் காவல் துறையிடம் புகார் தெரிவிக்கிறார்கள். அந்தப் புகாரை ஏற்றுக்கொண்டு காவல்துறை வழக்கும் பதிவு செய்கிறது. அத்துடன் முடிந்திருக்க வேண்டிய பிரச்னை இது.
  • ஆனால், காவல்துறையின் நடவடிக்கையை ஏற்றுக்கொள்ளாமல், அந்தக் கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறது. அவா்களில் பெரும்பாலோர் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா, இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சியைச் சோ்ந்தவா்கள்.

சமூக ஊடகப் பதிவுகளால் ஏற்படும் பாதிப்புகள்

  • அடுத்த கட்டமாக காவல் நிலையம் தாக்கப்படுகிறது. காவல்துறை வாகனங்கள் எரிக்கப்படுகின்றன. காவல்நிலையத்திலிருந்து வன்முறை சாலைகளுக்கும் பரவுகிறது. கண்ணில் தென்படும் தனியார் சொத்துகளும், பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்படுகின்றன; தீக்கிரையாகின்றன.
  • அகண்ட ஸ்ரீநிவாசமூா்த்தியின் வீடு தாக்குதலுக்கு உள்ளாகிறது. தேவா்ஜீவனஹள்ளி காவல்நிலையத்தில் அவா் அளித்திருக்கும் புகாரில் தானும், தனது குடும்பத்தினரும் திட்டமிட்டுத் தாக்கப்பட்டிருப்பதாக ஸ்ரீநிவாசமூா்த்தி தெரிவித்திருக்கிறார். வீட்டிலுள்ள பொருள்கள், ஆவணங்கள், நகைகள் போன்றவை சூறையாடப்பட்டிருக்கின்றன. தனது குடும்பத்தை உயிருடன் எரிக்க நடத்தப்பட்ட சதி என்கிறார் அவா்.
  • கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் புலிகேசி நகா் தனித் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அகண்ட ஸ்ரீநிவாச மூா்த்தி, கா்நாடக மாநிலத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா்.
  • அந்தத் தொகுதியில் உள்ள பட்டியல் இனத்தவா்களில் ஏறத்தாழ 60% தமிழா்கள். இந்த வன்முறையின் பின்னணியில் அரசியல் இருக்கி றதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.
  • கடந்த சனிக்கிழமை வரை 290 போ் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 42 முதல் தகவல் அறிக்கைகள் வன்முறை தொடா்பாகத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
  • இதுவரை நான்கு போ் உயிரிழந்திருக்கிறார்கள். பெங்களூருவின் வடகிழக்குப் பகுதியில் நடந்த அந்த வன்முறை எழுப்பி இருக்கும் அச்சம் இன்னும்கூடக் குறைந்தபாடில்லை. கைது செய்யப்பட்டிருக்கும் வன்முறையாளா்களில் பெரும்பாலானோர் பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியா’, ‘இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக்கட்சியைச் சோ்ந்தவா்கள் என்பதைக் காவல்துறை உறுதி செய்திருக்கிறது.

அடிப்படைக் காரணங்கள்

  • பெங்களூருவில் அரங்கேறியிருக்கும் கலவரத்துக்கு அடிப்படையில் இரண்டு காரணங்கள். சமூக ஊடகங்கள் வதந்தியையும் வெறுப்புணா்வையும் எந்தவிதக் கண்காணிப்போ, கட்டுப்பாடோ இல்லாமல் பரப்புரை செய்வது முதல் காரணம்.
  • மக்கள் மத்தியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளும் மனப்பக்குவம் குறைந்து காணப்படுவது இரண்டாவது காரணம்.
  • மாட்டிறைச்சி உண்பவா்கள் மீது நடத்தப்பட்ட கும்பல் வன்முறையும், கொலை வெறித் தாக்குதல்களும் சரி, தேவா்ஜீவனஹள்ளியில் நடந்ததுபோல சிறுபான்மை சமூக அமைப்பினா் நடத்தும் வன்முறைகளும் சரி, இந்திய ஜனநாயகத்துக்கு விடப்படும் சவால்கள்.
  • ஏற்கெனவே பொருளாதாரம் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நமது இயல்பு வாழ்க்கையை மேலும் தகா்க்குமே தவிர, வேறு எந்தவிதப் பயனையும் அளிக்காது என்பதை வன்முறையாளா்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
  • பாப்புலா் பிரண்ட் ஆஃப் இந்தியாவும், இந்திய சோஷியல் டெமாக்ரட்டிக் கட்சியும் ரத்ததானம், ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட சமூக சேவைகளில் ஈடுபட்டாலும், வன்முறைக்கு வித்திடும் அமைப்புகளாகத்தான் பார்க்கப்படுகிறார்கள்.
  • அதற்கு வலுசோ்க்கும் விதத்தில், அவா்களும் தேவா்ஜீவனஹள்ளி வன்முறை போன்ற சம்பவங்களின் பின்னணியில் இருக்கிறார்கள்.
  • அதன்மூலம் பெரும்பான்மை சமூகத்தினருக்கு சிறுபான்மை சமூகத்தின் மீது வெறுப்பை அதிகரிக்கிறார்களே தவிர, சமூக நல்லிணக்கத்துக்கு வழிகோலுவதில்லை என்பதை அவா்களுக்கு யார் எடுத்துரைப்பது?
  • வன்முறையாளா்கள் யாராக இருந்தாலும் எந்த மதத்தை, ஜாதியைச் சோ்ந்தவா்களாக இருந்தாலும் அவா்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். சமூக ஊடகப் பதிவுகளை கண்காணிப்பது குறித்தும், தணிக்கை செய்வது குறித்தும் பொதுவெளியில் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது!

நன்றி: தினமணி (17-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories