இந்தியாவின் இசை நகரம்
- தமிழ்நாட்டின் நாட்டார் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் போன்றவற்றைக் கோயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பெருவணிக வளாகங்கள், நடைபாதைகள் என நகரின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சென்னைச் சங்கமம்’ என்னும் பெயரில் நிகழ்த்துவது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திராத புதுமை.
- பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் செவ்வியல் கலைகளோடு கிராமியக் கலை வடிவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நகரம் முழுவதும் பரவலாக நடைபெற்றுவருவதன் காரணமாகவே இந்தியாவின் கலாச்சார நகரங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
- இந்த அங்கீகாரத்தின் வழியாக உலக அளவில் கலாச்சாரப் பெருமைமிகு நகரங்களான வியன்னா, சால்ஸ்பர்க் போன்றவற்றுடனும் இந்தியாவின் கலாச்சார நகரங்களான ஜெய்ப்பூர், வாராணசி போன்ற நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெறுகிறது.
- மந்தைவெளி, மடிப்பாக்கம், மாமல்லபுரம், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதத்தில் ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை, நடனம், நாட்டார் கலை நிகழ்ச்சிகள் நடப்பது உலகில் வேறு எங்குமே நடக்காத அதிசயம் என்கிறார் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்.
- செவ்வியல் இசையை மேடையில் நிகழ்த்துவதற்கு இன்றைக்கு நூற்றுக் கணக்கான சபாக்கள் இருக்கின்றன. அதே நேரம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவர்களின் பொழுதுபோக்குக்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்படி 1883இல் மெட்ராஸ் ஜார்ஜ்டவுன் பகுதியில் தொடங்கப்பட்ட ‘பூணா காயன் சமாஜ்’தான் அந்நாளைய மெட்ராஸின் முதல் சபாவாகத் திகழ்ந்திருக்கிறது.
- சென்னையின் இசைப் பெருமிதமாகக் கருதப்படும் மியூசிக் அகாடமியில் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலகட்டத்திலும்கூட நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கிறார் மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி.
- இசை நிகழ்ச்சிகளை 94 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவரும் மியூசிக் அகாடமி, கர்னாடக இசையை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வழியில் இசைப் பள்ளியையும் நடத்திவருகிறது. திறமையான இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு, கலையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மேடை அமைத்துத் தருவதுடன் கலைஞர்களின் அளப்பரிய சேவையைப் பாராட்டி ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளை வழங்கியும் கலைச் சேவை புரிந்து வருகிறது.
- நம்முடைய செவ்வியல் இசை, நடன வடிவங்களைப் பேணிக்காப்பது, அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைக் கொண்டுசேர்ப்பது, இந்தியாவின் பிற மாநிலங்களின் செவ்வியல் இசைக் கலைகளுக்கும் கலைஞர்களின் திறமையையும் வெளிப்படுத்த மேடையை அமைத்துக் கொடுப்பது என இந்தியாவின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உறவுப் பாலம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.
மரபைப் பாதுகாப்பதற்கான நாள்
- உலக மரபு நாள் என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள மரபுச் சின்னங்கள் குறித்தும் பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை அதிகரிப்பது இப்படி ஒரு நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
- உலகில் உள்ள பண்பாட்டு மரபுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் (International Council on Monuments and Sites) என்னும் பிரத்யேக அமைப்பு 1965இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது.
- இந்த அமைப்பு கல்வி, அறிவியல், பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோவுக்கு உலகப் பாரம்பரியத் தலங்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது.
- ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று நினைவுச் சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் (ICOMOS) பரிந்துரைத்தது.
- 1983இல் நடைபெற்ற யுனெஸ்கோவின் 22ஆவது பொது மாநாட்டில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் ஏப்ரல் 18ஐ நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான நாளாகக் கொண்டாடுவது எனச் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரம், இது யுனெஸ்கோவால் கொண்டாடப்படும் நாள் அல்ல.
- ஐகோமோஸ் அமைப்பே ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் இந்த நாளுக்கான நிகழ்ச்சிகளை உலக அளவில் முன்னெடுக்கிறது.
- உலகில் பல வகையான மரபுச் சின்னங்களும் தலங்களும் உள்ளன. அவற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுச் சின்னங்களின் வழியாகப் பண்பாட்டு மரபையும் பன்மைத்துவத்தையும் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. மரபுச் சின்னங்கள், தலங்களுக்கு நேரில் சென்று பார்ப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
- ‘மரபு மாற்றங்கள்’ என்னும் கருப்பொருளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான உலக மரபு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவாக மரபுச் சின்னங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் கவனப்படுத்துவதற்காக இந்தக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு மரபின் வழியாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் இந்தக் கருப்பொருள் உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தோலவிரா: சிந்துவெளியின் இந்தியப் பிணைப்பு
- உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகச் சிந்துவெளி நாகரிகம் கருதப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சிந்துவெளியின் மக்கள் பரவியிருந்ததாகப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
- சிந்துவெளியின் நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் இன்றைய பாகிஸ்தானில் மட்டுமல்ல; வட இந்தியாவின் பல இடங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலவிரா (Dholavira), அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் (Lothal) ஆகியவை.
- சிந்துவெளி நாகரிகத் தொல்லியல் தலங்களில் இந்தியாவில் அமைந்துள்ள முதன்மையான தலம் தோலவிரா. சிந்துவெளி நாகரிகத்தின் எட்டு நகரங்களில் ஐந்தாவது மிகப் பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. பொ.ஆ.மு.(கி.மு) 3500 முதல் பொ.ஆ.மு. 1800 வரையிலான காலகட்டத்தில் (பிந்தைய ஹரப்பா காலகட்டத்தின் முற்பகுதி) இங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பண்டைய ஹரப்பா நகரமான தோலவிராவை உலகப் பாரம்பரியச் சின்னமாக 2021 ஜூலை 27 அன்று யுனெஸ்கோ அறிவித்தது.
- நிலநடுக்கோட்டில் அமைந்திருக்கும் தோலவிரா, தொடர்ந்து நிலநடுக்கங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இதனால், பெரும்பாலான கட்டுமானங்கள் சிதிலமடைந்துவிட்டன. எனினும், தோலவிரா நன்கு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட நகரத்துக்கான கூறுகளைக் கொண்டிருப்பதைப் எஞ்சியிருக்கும் அதன் சிதிலங்களின் வழியே அறிய முடிகிறது. நன்கு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
- 1960களில் சம்புதான் ஹாத்வி என்கிற உள்ளூர்வாசி இத்தலத்தைக் கண்டறிந்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1990இல் இந்தியத் தொல்லியல் துறை இங்கு அகழாய்வைத் தொடங்கியது. இங்கு வெளிப்பட்ட ஆச்சரியமளிக்கும் நகரக் கட்டமைப்பு, அக்காலகட்டத்துச் சமூகம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான அடித்தளத்தை வழங்கியது.
- பண்டைய மெசபடோமியா, மேற்கு ஆசியா, சிந்து, பஞ்சாப், குஜராத்தின் பகுதிகளுக்கு இங்கிருந்து வர்த்தகம் பரவியிருந்ததற்கான தடங்களைத் தொல்லியல் ஆய்வுகள் வழி அறிய முடிகிறது.
- தோலவிரா நகரத்தின் தொல்பொருள் எச்சங்களில் கோட்டைகள், நுழைவாயில்கள், நீர்த்தேக்கங்கள், சடங்கு மைதானம், குடியிருப்புப் பகுதிகள், பணிமனைப் பகுதிகள், கல்லறை வளாகம் ஆகியவை அடங்கும்.
- இவை அனைத்தும் ஹரப்பா பண்பாட்டையும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. வலுவான தடுப்பரண்கள் கொண்ட கோட்டையால் இந்நகரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. மேலும், கல் வீடுகள் நிறைந்த தோலவிரா, செங்கல் வீடுகளைக் கொண்டிருந்த பிற ஹரப்பா தலங்களிலிருந்து தனித்து நிற்கிறது.
- வறட்சியான பகுதியில் அமைந்திருந்தாலும் தோலவிராவின் மக்கள் மிகச் சிறந்த நீர் மேலாண்மைக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திருப்பிச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளனர். நிலத்துக்குக் கீழும் நீர் சேகரிப்புக் கட்டமைப்பு பிரம்மாண்டமாக இருந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
மூன்று சோழர்கள் ஆலயங்கள்
- உலகம் முழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள், அருங் கலைச் செல்வங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்து அவற்றை யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுச் சின்னங்கள் என அறிவித்துப் பாதுகாக்கிறது. அத்தகைய உலக மரபுச் சின்னங்கள் வரிசையில் சோழ நாட்டில் மூன்று கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
- தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில் எனப்பெறும் ராஜராஜேச்சரம், கங்கைகொண்டசோழபுரத்துச் சிவாலய மான கங்கை கொண்ட சோழீச்சரம், தாராசுரத்தில் உள்ள ஐராவதீசுவரர் கோயில் எனப்பெறும் ராஜராஜேச்சரம் ஆகியவைதான் அந்த மூன்று சின்னங்கள்.
- தஞ்சைப் பெரிய கோயில்: இக்கோயில் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால்[பொ.ஆ.(கி.பி) 985–1014] எடுக்கப்பெற்றதாகும். இவ்வாலயத்தி லுள்ள அம்மன்னனின் கல்வெட்டுகள் சிலவற்றில் ‘தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் இல் நாம் எடுப்பித்த கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரம்’ என்று மன்னனே எழுதிய குறிப்பு காணப்பெறுவதால் இது உறுதிபெறுகிறது. 216 அடி உயரமுடைய ஸ்ரீவிமானம், திருச்சுற்று மாளிகை, சுற்றுக் கோயில்கள் ஆகியவற்றுடன் திகழும் இக்கோயிலில் நம்மை வியக்க வைப்பது பிரம்மாண்டமான கட்டுமானமே.
- நுழைவாயிலில் முதலில் காண்பது ஐந்து அடுக்குகளுடன் திகழும் கேரளாந்தகன் திருவாயில் எனும் கோபுரமாகும். அடுத்துத் திகழ்வது மூன்று அடுக்குகளுடன் உள்ள ராஜராஜன் திருவாயில் எனும் கோபுரமே. அஸ்திவாரத்தில் தொடங்கி உச்சி வரை கருங்கற்கள் கொண்டு எடுக்கப்பெற்றதே இவ்வாலயம். ராஜராஜன் திருவாயில் எனும் கோபுர வாயிலில் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன இரண்டு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.
- திருச்சுற்று மாளிகைப் பத்தியில் முப்பத்தாறு பரிவாராலயங்கள் முன்பு இருந்துள்ளன. அவற்றில் எட்டுத் திசை நாயகர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, சோமன், ஈசானன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.
- கருவறையின் மையத்தில் 13 அடி உயரமுடைய சிவலிங்கம் உள்ளது. அவ்வறையின் சுவரின் கனம் 11 அடியாகும். கருவறையைச் சுற்றி ஆறு அடி அகலத்தில் சாந்தாரம் எனும் சுற்று அறை உள்ளது. அவ்வறையின் உள்சுவர்களில் சோழர்காலச் சுதை ஓவியங்கள் (Fresco) உள்ளன.
- மேலும், பெரிய அளவில் உள்ள அகோரமூர்த்தி, சந்தியா நிருத்தமூர்த்தி, மனோன்மணி ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் உள்ளன. சாந்தார அறையின் வெளிப்புறச் சுவர் 13 அடி கனமுடையதாகும். உள்நான்கு சுவர்களும் வெளிநான்கு சுவர்களும் இரண்டாம் தளத்தில் முப்பதடித் தளமாக ஒன்றிணைந்து மிக உயரமான ஸ்ரீவிமானத்தைத் தாங்கி நிற்கின்றன.
- அந்த விமானமோ தளம் தளமாக அமையாமல் முழுதும் உள்கூடாக அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் மேற்தளம் ஈரடுக்கு உடையதாக இருந்துள்ளது. அந்த மண்டபப் பகுதி மட்டும் பின்னாளில் சிதைவுற்றுத் தற்காலத்தில் ஒரு தளம் மட்டுமே உள்ளது. இம்மாதிரியான பிரம்மாண்ட கட்டுமான அமைப்பை இங்கும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் மட்டுமே காண இயலும்.
- இவ்வாலயத்து ஸ்ரீவிமானத்தை சிவபெருமானின் தசாயுத புருஷர்களான பத்து ஆயுத புருஷர்கள் காத்து நிற்கின்றனர். கோஷ்ட தெய்வங்களாகத் தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்கிற ஐந்து தெய்வங்கள் இருப்பதை இங்கு மட்டுமே காணலாம்.
- சாந்தார சுற்று அறையின் மேற்தளத்தில் 108 நாட்டிய கரணங்களுக்காகக் கற்கள் பதிக்கப்பெற்று அவற்றில் 80 கரணங்கள் முற்றுப் பெற்றுள்ளன. அந்த நாட்டியக் கரணங்களைச் சிவபெருமானே ஆடிக்காட்டுவதாக அமைந்துள்ளது அரிய காட்சியாகும். சோழர் கட்டிடக் கலையின் மாட்சிமையை எடுத்துக்காட்டும் பிரம்மாண்டமான ஆலயம் தஞ்சைப் பெரிய கோயிலாகும்.
கங்கைகொண்ட சோழீச்சரம்
- அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தஞ்சைக் கோயிலை ஒத்த கட்டுமான அமைப்பில் திகழும் இவ்வாலயத்தின் விமானம் மட்டும் தோற்றத்தால் சற்று மாறுபட்டது. எசாலம் எனும் இடத்தில் கிடைத்த ராஜேந்திரசோழனின் செப்பேட்டுத் தொகுதியில் கங்கைகொண்ட சோழீச்சரம் ராஜேந்திர சோழனால் (பொ.ஆ.1012 – 1044) கட்டப்பட்டது என்கிற தகவல் காணப்பெறுகிறது.
- தஞ்சை விமானத்தைப் போன்று முழுவதும் உள்கூடாகவும், சாந்தார அறையுடனும் கட்டப் பெற்றதே இவ்வாலயம். இக் கோயிலின் மகா மண்டபமும் ஈரடுக்குடன் முன்பு திகழ்ந்து பின்னாளில் அழிந்து தற்போது ஒரு தளத்துடன் மட்டும் திகழ்கிறது. இவ் வாலயத்திலும் திருச்சுற்று மாளிகை அமைந்திருந்து, தற்போது அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது.
- ஆலய வளாகத்தில் தென் கயிலாயம் என்றும் வடகயிலாயம் என்றும் இரண்டு தனித்தனிக் கோயில்கள் விமானத்திற்கு இருபுறமும் உள்ளன. வடகயிலாயத்தைப் பிற்காலத்தில் அம்மன் கோயிலாக மாற்றம் செய்துவிட்டனர்.
- இங்குள்ள கோஷ்ட தெய்வங்கள் மிகப் பிரம்மாண்டமானவை. லக்குமி, கணபதி, ஹரிஹரர், அர்த்தநாரி, நடராஜர், கங்காதரர், விஷ்ணு, முருகன், லிங்கோத்பவர், மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமான், காலகாலமூர்த்தி, கொற்றவை, இருதேவியருடன் பிரம்மன், பைரவர், காமதகனமூர்த்தி, சண்டீச அநுக்கிரகமூர்த்தி, சரஸ்வதி ஆகியவை பேரழகு வாய்ந்த சிற்பங்களாகும். இவை தவிர, பிற நாடுகளிலிருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டுவரப்பட்ட பல தெய்வ உருவங்களும் இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயம்
- குடந்தை நகரையொட்டி அமைந்த தாராசுரத்தில் உள்ள இவ்வாலயத்தை இரண்டாம் ராஜராஜசோழன் (1150–1163) எடுப்பித்தான். சோழர் சிற்பக்கலையின் நுட்பத்தை இவ்வாலயத்தில் காணலாம். சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தின்பால் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இச்சோழமன்னன் பெரியபுராணத்தில் கூறப்பெறும் 63 அடியார் தம் வரலாறு முழுவதும் இவ்வாலயச் சுவர்களில் கதை, காட்சி அமைப்புடன் இடம்பெறச் செய்துள்ளார்.
- மிகப் பரந்த வெளியில் சுவாமி கோயில் தனியாகவும், அம்மன் ஆலயம் தனியாகவும் அமைந்துள்ளன. இங்குள்ள சரபமூர்த்தி சிற்பம் மிகுந்த கலைநயம் வாய்ந்தது. ராஜகம்பீரன் திருமண்டபத்தில் நான்கு தூண்களில் நாற்பத்தெட்டுக் காட்சிகளாகக் கந்தபுராணம் முழுவதும் சித்தரிக்கப்பெற்றுள்ளது.
- இவ்வாலயத்து ஸ்ரீவிமானத்தைச் சோழமன்னன் கயிலை மலையாகவே படைத்துள்ளான். மேலே கயிலைக் காட்சி சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன. இங்கு தூண்கள், தரைகள், படிகள், விதானங்கள், பலகணிகள் ஆகிய எல்லா இடங்களிலும் சிற்பக் காட்சிகளைக் காணலாம். சுமார் ஓர் அங்குல உயரத்தில்கூட குறுஞ் சிற்பங்கள் உண்டு. பல ஆயிரக்கணக்கான சிற்பங்களைப் பெற்ற சிற்பக் களஞ்சியமே தாராசுரம் திருக்கோயிலாகும்.
வரலாற்றைச் சிதைக்கலாமா?
- பல நூற்றாண்டுப் பழமையையும் புராதனத்தையும் சுமந்திருக்கும் வரலாற்றுச் சின்னங்கள் புயல், வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கைச் சீற்றங்களால் தங்களது தொன்மைத்தன்மையை இழந்துவருகின்றன. அரசியல் காரணங்களுக்காகச் சூறையாடப்படுபவற்றில் வரலாற்றுச் சின்னங்களுக்குத்தான் முதலிடம். அதேவேளை அரசின் அக்கறையின்மை, சுற்றுச்சூழல் மாசு, மனிதர்களின் பொறுப்பற்ற நடவடிக்கை போன்றவற்றால் நம் மரபு நினைவுச் சின்னங்கள் அழிவது வேதனைக்குரியது.
- கல்வெட்டுகள், நடுகற்கள், நினைவுத் தூண்கள், குடைவரைச் சிற்பங்கள், சுவர் ஓவியங்கள், புடைப்புச் சிற்பங்கள் உள்ளிட்ட ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் நம்மைச் சுற்றியிருக்கின்றன. இவற்றில் சிலவற்றை மட்டும் தொல்லியல் துறையும் அரசும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. அவற்றின் கட்டுப்பாட்டில் இல்லாத புராதனச் சின்னங்களைப் பொதுமக்களில் சிலர் தங்கள் உடைமையாகப் பாவித்துச் சிதைக்கின்றனர். கல்வெட்டுகளை உடைப்பது, சிற்பங்களைச் சிதைப்பது, சுவர் ஓவியங்களைச் சுரண்டி அழிப்பது போன்ற செயல்களைச் செய்கின்றனர்.
- இன்னும் சிலரோ காணும் இடங்களில் எல்லாம் தங்களது பெயரையும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயரையும் அழிக்க முடியாதபடி கிறுக்கி வைக்கிறார்கள். குறிப்பாகக் கோயில் சுவர்களிலும் பாறை ஓவியங்களிலும் தங்கள் கைவண்ணத்தைப் பதித்து அதை உலகறியச் செய்கிறார்கள். தங்கள் காதலை வெளிப்படுத்த சிலர், பல நூறு ஆண்டுகள் பழமையான மரங்களைத் தேர்ந்தெடுத்து, அவற்றில் பெயர்களையும் உருவங்களையும் செதுக்குவதும் இதில் அடங்கும்.
- ஏற்கெனவே பாழடைந்துவரும் நினைவுச் சின்னங்களைச் சிலர் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக்கொண்டு அவற்றை இன்னும் சிதிலமடையவைக்கின்றனர். பெரும்பாலான நினைவுச் சின்னங்கள் சுற்றுலாத் தலங்களாக இருப்பதால், சுற்றுலாவுக்குச் செல்வோரும் தங்கள் பங்குக்குத் தங்கள் ‘கலைத் திறமை’யைக் காட்டத் தவறுவதில்லை. இவர்களில் பெரும்பாலானோர் அந்த வரலாற்றுச் சின்னங்களின் முக்கியத்துவத்தை அறியாதவர்கள். அது அவர்களது தவறு மட்டுமல்ல; அவர்களிடம் நினைவுச் சின்னங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாத அரசின் தவறும்கூட.
- உள்ளூர் நிர்வாகம் நினைத்தால் தங்கள் பகுதியில் உள்ள வரலாற்றுச் சின்னங்களை ஆவணப்படுத்திப் பொதுமக்களின் உதவியோடு அவற்றை நல்ல முறையில் பராமரிக்க முடியும். அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களைப் பராமரிப்பதில் கூடுதல் கண்காணிப்பும் கவனமும் தேவை. காரணம், வரலாற்றுச் சின்னங்களைச் சிதைப்பது என்பது வரலாற்றைச் சிதைப்பதற்கு நிகரானது.
- அதனால், நல்ல நிலையில் இருக்கும் வரலாற்றுச் சின்னங்களை அவற்றின் தொன்மை கெடாமல் பராமரிப்பது, அழிந்த அல்லது சிதைந்த சின்னங்களை மீட்டு அவற்றை மறு நிர்மாணம் செய்வது, வரலாற்றுச் சின்னங்களை மக்கள் பாழ்படுத்தாத வகையில் விழிப்புணர்வையும் பாதுகாப்பையும் அதிகரிப்பது போன்றவற்றைச் செயல்படுத்துவதன்மூலம் வரலாற்றுச் சின்னங்களை அழியாமல் பாதுகாக்கலாம்.
இந்தியாவின் பாரம்பரிய நகரங்கள்
- அஜந்தா, எல்லோரா குகைகள் தொடங்கி தெலங்கானாவின் ராமப்பா கோயில் வரை இந்தியாவைச் சேர்ந்த 40 இடங்கள் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னங்களின் பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன. இதில், அகமதாபாத், ஜெய்ப்பூர் ஆகிய இரண்டும் பாரம்பரிய நகரங்கள் என்கிற பிரிவின் கீழ் வருகின்றன.
- கலாச்சாரப் பாரம்பரியம், இயற்கைப் பாரம்பரியம், கலாச்சாரமும் இயற்கையும் கலந்த பாரம்பரியம் என மூன்று பிரிவுகளின் கீழ் யுனெஸ்கோ மரபுச் சின்னங்களையும் இடத்தையும் தேர்வு செய்கிறது. இதில் 1995ஆம் ஆண்டு முதன்முதலாக நார்வேயின் பெர்ஜன் நகர் பாரம்பரிய நகரமாகத் தேர்வுசெய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து போர்ச்சுகல், ரஷ்யா, ஸ்பெயின், மெக்சிகோ உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நகரங்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரங்களாகத் தேர்வாகின.
- இந்தியாவில் முதல் பாரம்பரிய நகரமாக 2017இல் அகமதாபாத் தேர்வு செய்யப்பட்டது. அந்த ஆண்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய நகரப் பட்டியலில் இடம்பிடிக்க இந்தியா தயாரித்து அனுப்பிய பரிந்துரைப் பட்டியலில் டெல்லி, மும்பை ஆகிய நகரங்களும் இடம்பெற்றிருந்தன.
- ஆனால், அதிக வாக்குகளைப் பெற்ற அகமதாபாத் பாரம்பரிய நகராகத் தேர்வு செய்யப்பட்டது. பொ.ஆ.(கி.பி.) 15ஆம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அகமத் ஷா அகமதாபாத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். மதில்கள் சூழ உருவாக்கப்பட்ட இந்நகரில் நூற்றாண்டுப் பழமை வாய்ந்த கட்டிடங்கள் இன்றும் புழக்கத்தில் உள்ளன என்பது அதன் தனிச்சிறப்பு.
- 2019இல் இந்தியாவின் இரண்டாவது பாரம்பரிய நகராக ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்ப்பூர் ‘இளஞ்சிவப்பு நகரம்’ என்கிற சிறப்பைப் பெற்றது. பிரம்மாண்ட அரண்மனை, கோட்டை, தனித்துவமான நகரக் கட்டமைப்புக்கு இது புகழ்பெற்றது. இந்தியாவில் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலங்களில் ஜெய்ப்பூருக்குத் தனி இடம் உண்டு.
- அசர்பைஜான் நாட்டில் நடைபெற்ற யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய கமிட்டியின் 43ஆவது மாநாட்டில் 35 நகரங்கள் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டன. இதில் பரிசீலனை செய்யப்பட்டு, இறுதியாக ஜெய்ப்பூர் தேர்வு செய்யப்பட்டது. ஹவா மஹால், ஜெய் மஹால், ஜொஹ்ரி பஜார், பபு பஜார் போன்ற வரலாற்றுத் தலங்களும் சுவையான ராஜஸ்தான் உணவும் ஜெய்ப்பூரின் சிறப்பு.
தோல்வியடைந்த ஓவியனின் கலைக் கொள்ளை
- ஓர் ஓவியராக அங்கீகரிக்கப்படாத ஏமாற்றம் ஹிட்ல ருக்கு எப்போதும் இருந்தது. வியன்னா கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்ற அவர், அதில் தேர்ச்சியடையவில்லை. அவர் தலையெடுத்த காலத்தில் நவீன ஓவியங்களை ஏனோ முற்றிலும் வெறுத்தார். நவீன ஓவியங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அளவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தார். ஏன் கலைப்பொருள்களைக் களவாடுவதிலும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டினார்?
இனவெறியின் தேடல்
- ஆரிய இனம்தான் உலகின் உயர்ந்த இனம் என நம்பியவர் ஹிட்லர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே அந்த இனம் ஆளுமை செலுத்திவந்தது என்பதை நிறுவ நாஸிக்களுக்குச் ‘சான்றுகள்’ தேவைப்பட்டன. எனவேதான் ஐரோப்பா தொடங்கி ஆஸ்திரேலியா வரை கலைப்பொருள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பல ஓவியங்கள், சிற்பங்கள் திருடப்பட்டன. உலகின் மிகப் பெரிய கலைக் கொள்ளை அது!
- புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் நாஸிக்களால் கவரப் பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், தன்பாலின உறவாளர்கள், ஜிப்ஸிக்கள் என எல்லாரைப் பற்றியும் துல்லியமாகக் கணக்கு வைத்திருந்த நாஸிக்கள், அந்த ஓவியத்தை எந்தப் பட்டியலிலும் சேர்க்காமல் வைத்திருந்ததாகவும் தகவல் உண்டு.
- ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையில், போர் தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, பாரிஸ் அருங்காட்சியகத்தின் இயக்கு நர் ஜாக்குயிஸ் ஜோஜா தன் சொந்த முயற்சியில் மோனலிசா ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருள்களைப் பத்திரமாகக் காப்பாற்றி மறைத்துவைத்ததாக ஆதாரபூர்வமான தகவல்கள் உண்டு.
பிரத்யேகக் குழு
- எனினும், நாஸிக்களிடமிருந்து கலைப் பொருள்களை மீட்டெடுக்கப் பிரத்யேகமாக ஒரு குழு 1943இல் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டது, வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.
- ‘Monuments Men’ எனப் பெயரிடப்பட்டிருந் தாலும் அக்குழுவில் பெண்களும் இருந்தனர். 14 நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர்கள், கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் என மொத்தம் 345 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.
- நேச நாடுகளின் படைகள் மீட்டெடுக்கும் நகரங்களின் கலைப்பொருள்களை இக்குழுவினர் சேகரித்தனர். கலைப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மீது நேச நாடுகள் குண்டுவீசிவிடக் கூடாது என அந்த இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து சொல்லியும் வந்தனர். சேதமடைந்த கலைப் பொருள்களைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்றன. ஏறத்தாழ 50 லட்சம் கலைப்பொருள்கள் மீட்டெடுக்கப்பட்டன.
- 2014இல் ஜார்ஜ் க்ளூனி, மேட் டாமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘தி மான்யுமென்ட்ஸ் மென்’ திரைப்படம், இக்குழுவின் சாகசப் பணியைப் பதிவுசெய்திருந்தது. அதில் ஒரு காட்சியில் இக்குழுவினருக்கு ஹிட்லர் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படும். ஹிட்லர் வரைந்த ஓவியம் அதில் காட்டப்படும்.
- அப்போது ஒருவர், “ஓவியம் அப்படி ஒன்றும் மோசமில்லை” என்று சொல்வார். ஒருவேளை ஓவியக் கலையில் ஹிட்லர் வெற்றிபெற்றிருந்தால் உலகப் போரே நடந்திருக்காது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவது உண்டு. அதில் வலுவான தர்க்கம் இல்லாமல் இல்லை.
மாமல்லை: மாறா வியப்பும் தீராப் புதிரும்
- வட தமிழகத்தை பொ.ஆ.(கி.பி) 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்திலிருந்து கிழக்கே 67 கி.மீ. தொலைவில் இருந்தது மல்லைத் துறைமுகம். உலக நாடுகளுடன் கொண்ட தொடர்பால் செல்வத்தில் மட்டுமல்ல, கலை வேட்கை கொண்ட பல்லவர்களால் கலையிலும் இந்த ஊர் செழித்திருந்தது.
- ஏராளமான கலைச் சின்னங்களை ஒரே இடத்தில் உருவாக்கும் முயற்சியை பாதாமி, பட்டடக்கல், அய்ஹொளே, விதிஷா ஆகிய இடங்களில் காண்பதுபோல் மல்லையும் கலைச் சின்னங்களின் கருவூலம். ஆயினும் ஏனைய இடங்களில் இல்லாத புதுமைகளும் புதிர்களும் ஒவ்வொரு நாளும் உலகை இங்கே ஈர்த்துவருகின்றன.
- மல்லைச் சின்னங்களைப் பொறுத்தமட்டில் இவற்றை உருவாக்கிய புரவலர்களும் புதிர்தான். முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன், ராஜசிம்மன் ஆகிய நான்கு அரசர்களின் காலங்களில் இவை உருவாக்கப்பட்டன எனவும் அனைத்துச் சின்னங்களும் ராஜசிம்மனால் மட்டுமே உருவாக்கப்பட்டன எனவும் அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் உண்டு.
- அதுபோலவே படைத்த கலைஞர்கள் குறித்தும் உறுதியான சான்றுகள் இல்லை. பூஞ்சேரி கிராமத்தில் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கேவாத பெருந்தச்சன், சாதமுக்கியன், குணமல்லன், திருவொற்றியூர் ஆபாஜன் ஆகிய பெயர்களே சிற்பிகளின் பெயர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
- பல்லவர் காலத்தில் இங்கு சின்னங்கள் எழுப்பப்படுவதற்கு முன்பே, சங்க காலத்திலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதை பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த,அண்மைய அகழாய்வில் கண்டறியப்பட்ட சாளுவன் குப்பத்து முருகன் கோயில் உணர்த்துகிறது.
நால்வகைச் சின்னங்கள்
- மல்லையின் நடுவே நீண்டு கிடக்கும் பாறைக் குன்றிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலுமே பல்லவர் காலச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை குடைவரைகள், ஒற்றைக் கற்றளிகள், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள் என நான்கு வகைப்படுபவை.
- பாறையைக் குடைந்து தூண்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், கருவறைகள், சிற்பங்கள் என உருவாக்கப்படும் குடைவரைகள் இங்கே பத்துக்கும் மேல் உண்டு. இவற்றுள் வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி குடைவரை ஆகியவை புகழ்பூத்த சிற்பங்களைக் கொண்டுள்ளன.
- வராக அவதாரம், திரிவிக்கிரம அவதாரம், கஜலட்சுமி, துர்க்கை, துர்க்கை - மகிஷன் போர், பள்ளிகொண்ட பெருமாளை அழிக்க முற்படும் மது கைடமர் சிற்பத் தொகுதிகள் உயிர்த்துடிப்புடன் இயங்குவன. ஆதிவராகர் குடைவரையில் சிம்ம விஷ்ணுவும் மகேந்திரவர்மனும் தத்தம் துணைவியருடன் காட்சியளிக்கின்றனர்.
- ஒரே கல்லில் உச்சி முதல் பாதம் வரை எந்த இணைப்பும் இல்லாமல் வடிக்கப்பெறும் ஒற்றைக் கற்றளி எனும் கோயில்கள் ஒன்பது இங்குள்ளன. ஒன்றினைப் போல் மற்றொன்று இல்லாமல் ஒவ்வொன்றும் வேறுபட்டதாகப் படைக்கப்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இவற்றுள் காலத்தால் முந்தையதான கணேசரதம் இந்தியாவின் முதல் ஒற்றைக் கற்றளியாகும்.
இமயமலைக் காட்சி
- கூர்ச்சரபாணி எனப்படும் குடிசை வடிவிலான திரௌபதி ரதம், இரு தளங்களைக் கொண்ட அர்ச்சுன ரதம், சாலை விமானம் கொண்ட பீம ரதம், மூன்று தளங்களைக் கொண்ட தர்மராச ரதம், தூங்கானை வடிவிலான நகுல சகாதேவ ரதம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுமை முயற்சியாகும்.
- அர்ச்சுன ரதமும் தர்மராச ரதமும் இணையற்ற சிற்பங்களைக் கொண்டவை. தர்மராச ரதமே காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் ஆகியனவற்றுக்கு முன்னோடியாகும். திறந்தவெளிப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் எனப்படும் அரிய கலையாக்க முயற்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறெங்கும் இல்லாததாகும்.
- ‘அர்ச்சுனன் தபசு’ என அழைக்கப்படும் சிற்பத் தொகுதி இருபெரும் பாறைகளை ஒருங்கிணைத்து, இடைப் பிளவையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மாபெரும் முயற்சியாகும். 12 மீட்டர் உயரமும் 40 மீட்டர் அகலமும் கொண்ட இத்தொகுதி, நான்கில் ஒரு பங்கு நிறைவடையாத நிலையிலேயே 152 சிற்பங்களைக் கொண்டுள்ளது.
- மகாபாரத வனபர்வ வருணனையை அடிப்படையாகக்கொண்டு தெய்வ உருவங்கள், பதினெண் கணங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் என முழுமையான இமயமலைக் காட்சியாக விளங்குகிறது.
- இதுபோலவே கிருஷ்ண மண்டபம் என்னும் கோவர்த்தன மலைக் காட்சியும் திறந்தவெளிப் புடைப்புச் சிற்பக் காட்சியே ஆகும். அங்கு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தை மறந்துவிட்டுப் பார்த்தால், மல்லைக் குன்றே கோவர்த்தனமாகப் படைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
- அர்ச்சுனன் தபசிலும் கோவர்த்தனக் காட்சியிலும் மேலிருந்து மழைநீர் கொட்டுமானால், அவை உயிர் பெற்ற இயங்கு சிற்பங்களாக மாறுகின்றன. இமயத்தில் கங்கை பாய்வதையும் மழைக்குக் கோவர்த்தனத்தைக் குடையாக்கி ஆயர்கள், ஆநிரைகளை கண்ணன் காப்பதையும் நேரில் காணலாம்.
சிற்பிகளின் கற்பனை உச்சம்
- கடற்கரைக் கோயில் எனப்படும் கட்டுமானக் கோயில் அலைகளால் சூழப்படும் கடலோரத்தில் வழக்கத்தைவிடவும் கோயில் குன்றின் உச்சியிலும் முகுந்த நாயனார் கோயில் சமதளத்திலும் கட்டப்பட்டுள்ளன. இந்த இடத் தேர்வுகள் மாறுபட்ட ரசனைக்குக் காரணங்கள் ஆகின்றன. கடலை ஒட்டி அலைகள் மோத படகுத் துறை சூழ எடுக்கப்பட்டுள்ள கடற்கரைக் கோயில் ஒரு பொறியியல் அதிசயம்.
- அங்குள்ள உருளை வடிவச் சிவன் கோயிலும் துர்க்கையின் சிம்ம வாகனக் கோயிலும் வடப்புறம் கடல் நீர் சூழ உள்ள துர்க்கைக் கோயிலும் தென்புறம் கடற்கரையில் உள்ள யாளி கோயிலும் புதுமையான கோயில் வடிவங்களாகும். சாளுவன் குப்பத்தில் 11 யாளித் தலைகளும் அம்பாரிகளுடன் இரண்டு யானைகளும் பல்லவச் சிற்பிகளின் கற்பனை உச்சம் தொட்ட படைப்புகளாகும்.
- ஒற்றைக் கல்லாலான யானை, சிங்கம், எருது, சிம்மக் கட்டில்கள், தொட்டிகள் எனச் செயற்கையாக வடித்த புதுமைகள் ஒருபுறமெனில், பாறைச் சரிவில் உருண்டு விழாமல் நிற்கும் ‘கிருஷ்ணர் வெண்ணெய் உருண்டை’ மற்றொரு இயற்கை அதிசயம். கட்டிடம், சிற்பம், ஓவியம் எனும் கலைகளில் பொன்னேடுகளைப் படைத்த பல்லவர்களின் எல்லையற்ற மன விழைவுகளின் வெளிப்பாடுகளே மல்லைச் சின்னங்கள்.
காலத்தை உறைய வைத்த அற்புதங்கள்
- கடந்த காலம் தந்த கொடை, இன்று நாம் எதனுடன் வாழ்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எதை நாம் கையளிக்கிறோம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததே நமது மரபு. நமது வாழ்க்கைக்கும் நாம் அடையும் உத்வேகத்துக்கும் ஆதாரமாகத் திகழும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்கள் எவையும் பதிலீடு செய்ய முடியாதவை.
- உலகெங்கும் மனிதகுலத்துக்குத் தலைசிறந்த மதிப்பைக் கொண்டுவந்து சேர்க்கும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்களை அடையாளம் காணுதல், பேணுதல், பாதுகாப்பதை ஊக்குவிக்கிறோம். இதற்கான சர்வதேச உடன்பாடு 1972இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
- உலக மரபுச் சின்னங்கள் எனும் கருத்தாக்கத்தைத் தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குவது அதன் உலகளாவிய தன்மைதான். உலக மரபுத் தலங்கள்-சின்னங்கள் உலகின் அனைத்து மக்களுக்கும் உரியவை, எந்த நிலப்பகுதியில் அவை அமைந்திருக்கின்றன என்பது ஒரு பொருட்டில்லை.
நன்றி: தி இந்து (16 – 04 – 2023)