- தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களை வெளிப்படுத்தும் விதமாக சென்னையின் பல்வேறு இடங்களில் கரகாட்டம், பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து, சிலம்பம், பஞ்சமுக வாத்தியம், ரிஷபகுஞ்சரம் உள்பட 13 சிற்பங்கள் நுண்கலையறிஞர் சந்ருவின் கைவண்ணத்தில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தின் முகப்பில் 10 அடி உயரத்தில் பாம்படம் சிலை ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து சந்ருவிடம் பேசினோம்.
- “நாம் பார்க்கிற எந்தப் பொருளும் அடிப்படையில் முக்கோணம், சதுரம், வட்டம் ஆகிய மூன்று வடிவங்களின் கூட்டமைப்புதான் என்கிறார் அரிஸ்டாட்டில். ஆகையால் இயற்கையாகவே வடிவங்கள் ஏதோ ஒரு தோற்றத்தில்தான் அமைந்திருக்கின்றன. நாம்தான் நம் வசதிக்கேற்ப ஒரு பெயரைச் சூட்டிக்கொள்கிறோம். அப்படித்தான் ‘கணவடிவ’ உருவமும் (கியூபிசம்).
- “கியூபிசக் கலையின் நாயகர்களாகச் சில மேலைநாட்டுக் கலைஞர்களைச் சந்தைப்படுத்தியதன் விளைவாக நடராஜர், பிள்ளையார், எருமை போன்றவற்றை கியூபிசத்தில் செய்துவிட்டேன் என்று விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாளில் பாம்படம் இந்தத் தோற்றத்திற்கு வந்துவிடவில்லை.
- வளையம், குனுக்கு, பூச்சுக்கூடு, தண்டட்டி, பாம்படம் என்று ஒவ்வொரு நுாற்றாண்டாகத் தொழில்நுட்பத்திலும் வடிவமைப்பிலும் பல மாற்றங்களைச் சந்தித்து, 19ஆம் நுாற்றாண்டில்தான் பாம்படம் என்கிற அசலான கணவடிவத் தோற்றத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறது. ஒரு வடிவம் பல நூற்றாண்டுகளைக் கடந்து ஒரு புது வடிவத்திற்கு வந்திருக்கிறது என்பதையும், கலைத்துறையில் சொல்லப்படும் கோட்பாட்டு ரகசியத்தையும் பாம்படம் தன்னுள் பொதிந்து வைத்துள்ளது.
- “கணவடிவத்தில் உருவம் என்று மரப்பாச்சியைச் சொல்வது போல, பாம்படத்தைக் கணவடிவத்தில் உருவ மில்லாதது என்றுதான் சொல்ல வேண்டும். அது உருவம், இது வடிவம். ஆனால், அடிப்படையில் இரண்டுமே கணவடிவம்தான். கைவினைப் பொருள்கள், பயன்பாட்டுப் பொருள்கள் போன்று மருவிய அழகியல் கோட்பாடுகளோடு பாம்படத்தைச் சேர்க்கக் கூடாது. நவீன கலையியலான அரூபக்கலை, நிர்மாணக்கலை போன்று பாம்படமும் கியூபிசக் கலையியலில் உன்னதமானது.
- 200 ஆண்டுகளுக்கு முன்பு பாம்படம் இந்தியாவில் எந்த ஓவியத்திலும் சிற்பத்திலும் இடம்பெறவில்லை. ஆனால், வளையம், குனுக்கு, பூச்சுக்கூடு, தண்டட்டி போன்ற ஆபரணங்களைச் சிற்பங்களில், ஓவியங்களில் இன்றும் காணலாம். தமிழகப் பெண்கள் அணிந்திருந்த பாம்படத்தை ஆபரணமாகப் பார்க்காமல், சிற்பமாகப் பார்க்க வேண்டும்.
- “இதுவரை சர்வதேச கலைச்சந்தைகளில் கணவடிவத்திற்கு வரையறுத்த கோட்பாட்டுக்கு நிகராக, இரண்டு நுாற்றாண்டுகளுக்கு முன்பே உருவான பாம்படம் இன்றும் கிராமங்களில் நம் பாட்டிகளின் காதுகளில் சாட்சியாக ஆடிக் கொண்டிருக்கிறது” என்கிறார் சந்ரு.
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 07 – 2023)