TNPSC Thervupettagam

கலை - அறிவியல் வல்லுநர்கள் துணைவேந்தர்களாக முடியாதா

February 20 , 2024 188 days 221 0
  • இந்தியப் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனம் தற்போது சர்ச்சைக்குரியதாக ஆகிவிட்டது. பல்கலைக்கழக மானியக் குழு (UGC), மாநில ஆளுநர்கள், மாநில அரசுகள் தங்களுக்கான அதிகாரங்களை வலியுறுத்தி வருகின்றன.
  • அத்தோடு, மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியில் இருக்கும் கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் துணை வேந்தர்கள் நியமனத்தைப் பேசுபொருளாக்கி விட்டன. இதற்கிடையில், அந்தந்தப் பல்கலைக் கழகங்களின் சட்டங்கள் (Acts and Statutes) புறந்தள்ளப்பட்டுவிடுமோ என்ற அச்சம் கல்வி யாளர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

துணைவேந்தர் நியமனங்கள்

  • இந்தியா முழுவதும் 56 மத்தியப் பல்கலைக்கழகங்கள், 482 மாநிலப் பல்கலைக்கழகங்கள், 465 தனியார் பல்கலைக்கழகங்கள், 124 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், 165 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் உள்ள 56 பல்கலைக்கழகங்களில், 22 அரசு, 28 நிகர்நிலை, 4 தனியார், 2 தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் (பல்கலைக்கழக அந்தஸ்துடன்), 2 மத்தியப் பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன.
  • இவற்றுள், தொழிற்கல்விக்காக அண்ணா பல்கலைக்கழகமும், வேளாண்மைக் கல்விக்காகத் தமிழ்நாடு விவசாயப் பல்கலைக்கழகமும், சட்டக் கல்விக்காக அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகமும், மருத்துவக் கல்விக்காக டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகமும், பிற துறைகளுக்காகத் துறைசார் பல்கலைக்கழகங்களும் உள்ளன.
  • 22 அரசு பல்கலைக்கழகங்களில் 13 கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களும் பொறியியல், மருத்துவம், சட்டம், கல்வியியல் விளையாட்டு, மீன்வளம், கால்நடை, நுண்கலை, திறந்தநிலை போன்ற பிரிவுகளில் தலா ஒரு பல்கலைக்கழகமும் இருக்கின்றன. 5 செப்டம்பர் 1857இல் இந்தியாவின் முதல் மூன்று பல்கலைக்கழகங்கள் சென்னை, பம்பாய், கல்கத்தாவில் தொடங்கப்பட்டன.
  • 1966இல் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தொடங்கப்படும் வரை, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆளுகையில்தான் தமிழ்நாட்டில் இருந்த அனைத்து கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விவசாயம், கால்நடை மற்றும் பிற படிப்புகளும், பட்டங்களும் வழங்கப்பட்டன. அக்காலங்களில் பல துறைகளைச் சேர்ந்த மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், பல்வேறு துறைகளில் கல்வித் தகுதி உடையோர் துணைவேந்தர்களாகப் பணியாற்றினார்கள்.
  • தமிழ் மொழிக்கு கௌரவம் அளிக்கும் பொருட்டு, முற்காலங்களில் கலை, இலக்கியம், அறிவியல் பல்கலைக்கழகங்களுக்குத் தமிழறிஞர்கள் மு.வரதராசன், தெ.பொ.மீனாட்சிசுந்தரம், .சுப.மாணிக்கம் ஆகியோரைத் துணைவேந்தர்களாக முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி நியமித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் குளறுபடிகள்

  • பல்கலைக்கழக மானியக் குழு, துணைவேந்தர் நியமனத்துக்கான தகுதிகள், தேடுதல் குழு அமைத்தல், பதவிக்கான கால வரையறை பற்றி இதுநாள் வரை அறிவிக்கப்பட்டுள்ள சட்ட வரைமுறைகளில் சரியான விளக்கம் இல்லாததால்தான், தற்போது துணைவேந்தர்கள் நியமனங்களில் பல குழப்பங்கள்.
  • துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 ஆண்டுகள் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றியிருக்க வேண்டும் அல்லது அதற்குச் சமமாக உயர் கல்வி நிலையங்களில் நிர்வாகம் அல்லது ஆராய்ச்சியில் அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • இத்தோடு, கல்வித் துறையில் மிகவும் மதிக்கப் படுபவராக இருக்க வேண்டும். இதனை ஒட்டுமொத்த வழிமுறைகளாக எடுத்துக்கொண்டு, இந்தியப் பல்கலைக்கழகங்களில் குறிப்பாக, அரசுப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவிக்காலம் சில மாநிலங்களில் ஐந்து ஆண்டுகளாகவும், சில மாநிலங்களில் நான்கு ஆண்டுகளாகவும் பிற மாநிலங்களில் மூன்று ஆண்டுகளாகவும் இருக்கிறது.
  • அந்தந்தத் துறை சார்ந்த கல்வியாளர்கள்தான் அந்தந்தப் பல்கலைக்கழகங்களுக்குத் துணை வேந்தர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு குறிப்பிடாததால், துணைவேந்தர்கள் நியமனத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் பாகுபாடுகளைப் பார்க்க முடிகின்றது. இதனால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் கலை, அறிவியல் கல்லூரிகளில் படித்த - பணிபுரிகின்ற கல்வியாளர்கள்தான்.

மாறிவரும் போக்கு

  • தொழிற்கல்விக்கான அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழிற்கல்வியில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே துணைவேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர். அதைப் போல மருத்துவம், சட்டம், விவசாயம், கால்நடை, மின்துறை, நுண் கலைகள் ஆகிய பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்தத் துறையின் கல்வித் தகுதி கொண்டவர்களே துணை வேந்தர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
  • ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் போன்ற பொதுவான கலை, இலக்கியம், அறிவியல், மேலாண்மை தொடர்பான பல்கலைக்கழகங்களில், அங்கே பயிற்றுவிக்கப்படாத பொறியியல், வேளாண்மை போன்ற பிரிவுகளில் இருந்தும்கூட வல்லுநர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.
  • பொதுவான கலை, இலக்கியம், அறிவியல் படித்த வர்களில் துணைவேந்தர் பதவிக்குத் தகுதியானவர்கள், ஆராய்ச்சியாளர்கள், வல்லுநர்கள் தமிழ்நாட்டில் இல்லையா? அல்லது பல்கலைக்கழகங்களை நிர்வகிப்பதற்குக் கலை, இலக்கியம், அறிவியல் கல்வித் தகுதியுடையவர்கள், திறமையற்றவர்கள் என்னும் எண்ணமா? தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை, அறிவியல் பல்கலைக்கழகங்களில் இந்நாள் வரை பெரும்பான்மையும் பொறியியல், விவசாயம், மருத்துவம், சட்டம் ஆகிய கல்வித் தகுதி உடையவர்களே துணைவேந்தர்களாகப் பணியாற்றினர்; பணியாற்றி வருகின்றனர்.

கவனம் கொள்ள வேண்டியவை

  • கலை, இலக்கியம், அறிவியல் துறைகளில் படித்து, பணியாற்றி, ஆராய்ச்சி செய்து கட்டுரைகள், நூல்கள் வெளியிட்டு அனுபவம் பெற்ற ஒருவர்தான், கலை, இலக்கிய, அறிவியல் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டக் குழு (Board of Studies), கல்விப் பேரவை (Academic Council), ஆட்சிப் பேரவை (Senate), ஆட்சிக் குழு (Syndicate) ஆகியவற்றைத் திறம்பட நடத்த முடியும். ஏனெனில், அவரால்தான் அவர் பயின்ற, பணியாற்றிய அனுபவத்தில் பல்கலைக்கழகத் துறைகளையும், பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கல்லூரிகளின் பிரச்சினைகளையும் புரிந்துகொண்டு, செயல்பட முடியும்.
  • பிற கல்விப்புலங்களில் இருந்து வருகின்ற துணைவேந்தர்கள், கலை, இலக்கியம், அறிவியல் பல்கலைக்கழகப் படிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் புரிந்துகொள்வதற்கே சில ஆண்டுகள் ஆகிவிடும். அவ்வப்போது எழும் பிரச்சினைகளை அந்தந்தத் துறையின் வல்லுநர்களைக் கேட்டுக் கேட்டுத்தான் முடிவெடுக்க முடியும். இது நிறைய நடைமுறைச் சிக்கல்களுக்கு இட்டுச்செல்லும்.
  • கடந்த பல ஆண்டுகளாகக் கலை, இலக்கியம், அறிவியல் பல்கலைக்கழகங்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம், விவசாயப் பல்கலைக்கழகம், மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவது வழக்க மாகிவிட்டது. பல்கலைக்கழக மானியக் குழு நிர்ணயித்துள்ள துணைவேந்தர்கள் நியமனத்துக்கான கல்வித் தகுதியில், அந்தந்தத் துறையைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்லப்படவில்லை எனச் சமாதானம் சொல்லலாம்.
  • அப்படியானால், அண்ணா பல்கலைக்கழகத்துக்குக் கலை, இலக்கியம், அறிவியல் துறையின் வல்லுநர் ஒருவரைத் துணைவேந்தராக ஏன் நியமிக்கக் கூடாது என்ற கேள்வியும் தர்க்க பூர்வமானதுதானே!
  • அந்தந்தத் துறைப் பல்கலைக்கழகங்களுக்கு அந்தந்தத் துறை வல்லுநர்களையே துணைவேந்தர் களாக நியமிப்பது, நிச்சயம் பல்கலைக்கழகங்களின் உலகளாவிய தரத்திலான மேம்பாட்டுக்கு உறுதுணையாக அமையும். இவற்றைக் கருத்தில் கொண்டு வரும் காலங்களில் துணைவேந்தர் நியமனங்களை மேற்கொள்வது உயர் கல்வியின் உயர்வுக்கு வழிவகுக்கும் என்பது திண்ணம்.

நன்றி: இந்து தமிழ் திசை (20 – 02 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories