TNPSC Thervupettagam

கலையும் கருணாநிதியின் கனவு

September 27 , 2021 1040 days 637 0
  • சென்னை நகரத்தின் வளர்ச்சிக்காகக் கிராமப்புறங்களிலிருந்து உழைக்கும் மக்களை நகரத்திற்கு வரவழைத்து, நகரக் கட்டமைப்பை வளர்த்தெடுக்க 1947இல் நகர்ப்புற மேம்பாட்டு அறக்கட்டளை (Chennai Improvement Trust) உருவாக்கப்பட்டது.
  • 1956இல் The National Slum Areas (Improvement and Cleanance) Act என்ற சட்டம், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் வளர்ந்துவரும் வீட்டுவசதித் தேவையைப் பூர்த்திசெய்வதற்காக 1961ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் உருவாக்கப்பட்டது.
  • குடிசைப்பகுதி மக்களின் வாழ்வாதார உரிமைகளைக் கருத்தில்கொண்டு, 1971இல் அன்றைய தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி ‘தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம்’ என்ற அமைப்பை உருவாக்கினார்.
  • சென்னை மாநகரத்தில் குடிசைப்பகுதிகள் அடையாளப்படுத்தப்பட்டு, அவ்விடங்களிலேயே வாரியத்தின் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களுக்கு வாழ்விட உரிமைகள் உத்தரவாதப்படுத்தப்பட்டன.
  • தமிழ்நாடு அரசின் முழு நிதியுதவியோடு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றிய அரசின் வீட்டுவசதி - நகர்ப்புற மேம்பாட்டுக் கழகத்தின் (HUDCO) நிதியுதவி பெற்றும் குடிசைப்பகுதி மாற்று வாரியக் குடியிருப்புகள் கட்டப்பட்டன.

உலக வங்கியின் தலையீடு

  • சென்னை மாநகரத்தின் வடிவமைப்பு - வாழ்வுரிமை சார்ந்த செயல்பாடுகளில் தலையிடுவதற்கு 1973ஆம் ஆண்டிலிருந்து உலக வங்கி முயற்சி எடுத்து வந்தது.
  • மக்களின் வாழிடத் தேவையை உறுதிசெய்வதற்குப் பதிலாக, நகரத்தின் வளங்களைச் சந்தைமயப்படுத்தி முதலீடுகளை ஈர்ப்பதற்குத் தமிழ்நாடு அரசிற்கு நிதியுதவி செய்வதற்கு, ஆலோசனை சொல்வதற்கு உலக வங்கி அதிகாரிகளை அனுப்பிக்கொண்டே இருந்தது.
  • இத்தகு நிதி ஆலோசகர்கள் மேற்கொண்ட திரைமறைவு சதி வேலைகள் சார்ந்த தனது சுய அனுபவங்களை ஜான் பெர்கின்ஸ் எழுதிய ‘ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்’ (தமிழில் இரா. முருகவேள்) நூலின் வழி ஒப்புதல் வாக்குமூலமாக அறிய முடியும்.
  • 1977ஆம் ஆண்டு 62 மில்லியன் டாலரில் உருவாக்கப்பட்ட ‘முதலாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்ட’த்திற்கு (Madras Urban Development Project) உலக வங்கி 24 மில்லியன் டாலர் கடன் அளித்தது.
  • 1980-1988 ஆண்டுகளை உள்ளடக்கிய ‘இரண்டாவது சென்னை நகர்ப்புற வளர்ச்சித் திட்ட’த்திற்கு 42 மில்லியன் டாலர் கடன் கொடுத்தது. முதல் இரண்டு திட்டங்களைவிட, அதிகளவில் மூன்றாவது திட்டத்திற்கு 1988-1997 வரையிலான காலகட்டத்திற்கு 255 மில்லியன் டாலர் உலக வங்கி கடனாக அள்ளிக்கொடுத்திருக்கிறது.
  • இத்தகைய கடன்களுக்காக குடியிருப்புக் கொள்கைகளில் தமிழ்நாடு அரசைப் பல மாற்றங்களைச் செய்ய வைத்தது. முதலாவதாக, எந்தப் பகுதிகளில் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்களோ அந்த இடத்திலேயே வாரியக் குடியிருப்புகள் கட்டப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டது.
  • இரண்டாவதாக, புதிய குடியிருப்புகளை வாரியம் கட்டுவதற்கு மாறாக, ஏற்கெனவே இருந்த குடியிருப்புகளைப் பராமரிப்பு - மேம்படுத்தும் பணிகளில் மட்டுமே ஈடுபட வைத்தது.
  • மூன்றாவதாக, அரசின் குடியிருப்பு சார்ந்த கொள்கைகளில் ஒருங்கிணைப்பை உருவாக்குகின்றோம் என்ற பெயரில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை உள்ளடக்கிய அமைப்புகளுக்குப் பதிலாகக் கூடுதலான அதிகாரத்தை மெட்ராஸ் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு (எம்.எம்.டி.ஏ.) மடைமாற்றியது.
  • வாரியத்தின் கொள்கை - செயல்திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் தலையீட்டை முழுமையாக நீக்கி, அதிகார வர்க்கம் முடிவெடுக்கக்கூடிய மையமாக மாற்றியது.

அதிரடி மாற்றங்கள்

  • உலக வங்கி நிர்ப்பந்தித்த நிர்வாக மாற்றங்கள் இரண்டாவது மெட்ராஸ் நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குடியிருப்புகள் கட்டப்படுவதற்கு முன்பாகவே நடைமுறைக்கு வரத் தொடங்கி விட்டன.
  • 1980களில் ‘நகர் அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ்’ (City Beautification Scheme) குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்தும் செயல்பாட்டை, அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். மேற்கொள்ள ஆரம்பித்தார்.
  • மெரினா கடற்கரையில் மீனவர்களின் குடியிருப்புகளுக்கு அருகிலிருந்த மீன்பிடி வலைகள், படகுகள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டன. போராடிய மீனவர்கள் மீது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தி, ஒரு பெண் உள்ளிட்ட 6 பேர் கொல்லப்பட்டனர்.
  • தமிழ்நாடு அரசின் குடியிருப்புக் கொள்கையில் படிப்படியாகத் தனது திட்டத்தை நிறைவேற்றுவதில் உலக வங்கி முன்னேறியது.
  • மக்கள் நலன் சார்ந்த வாழிடத் திட்டங்களிலிருந்து அரசாங்கம் பின்வாங்கத் தொடங்கியது. உலக வங்கியின் நிர்ப்பந்தங்கள், வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப வாரிய அதிகாரிகள் குடியிருப்புத் திட்டங்களைத் தீட்ட ஆரம்பித்தனர்.
  • சென்னை மாநகரத்திற்கு வெளியே பல கிலோ மீட்டருக்கு அப்பால் கண்ணகி நகர், செம்மஞ்சேரி போன்ற குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாகப் பெருமளவு மக்கள் குடியமர்த்தப்பட்டனர்.
  • தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’, மக்களின் வாழ்விட உரிமையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.
  • உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து கடன் பெறுவதற்கு ஏற்ற வகையில், ஒன்றிய அரசின் நவீன தாராளமயக் கொள்கையை முழுமையாக அமல்படுத்துவதே இலக்காக வரையறுத்துக்கொண்டுள்ளது.
  • தமிழ்நாடு அரசின் குடியிருப்புக் கொள்கைகளை நிறைவேற்றும் நிறுவனமாக இருந்த தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், இனி ஒன்றிய அரசின் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின் பணிகளை ஒருங்கிணைக்கும் முகமை நிறுவனமாக மாற்றப் பட்டுள்ளது.

வாழ்விட உரிமை உறுதிசெய்யப்படுமா?

  • விளைவாக, வாரியக் குடியிருப்புகள் ஒன்றுக்கு ஒன்றிய அரசு ரூபாய் ஒன்றரை லட்சம் மட்டுமே வழங்க, மாநில அரசு ரூ. 7 லட்சமும், குடியேறும் மக்கள் பங்களிப்புத் தொகையாக அதிகபட்சம் ரூ. 7.25 தரவேண்டுமென நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மக்களிடமிருந்து இந்தப் பணத்தை வசூலிப்பதற்காகத் தனியார் வங்கி - நிதி நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட வேண்டியிருக்கிறது. அதிகபட்சம் 18 சதவிகித வட்டி.
  • குடிசை மாற்று வாரியக் குடியிருப்புகள் வறுமையிலுள்ள மக்களிடமிருந்து பறிபோகாமலிருக்கவும் வாழிட உரிமையை உறுதிசெய்யவும் தொலைநோக்குடன் வாரியக் குடியிருப்புகளின் விற்பனைப் பத்திரத்தை வாரியத்தின் வசமே வைத்துக் கொண்டு, மாதந்தோறும் குறைந்தபட்ச வாடகையை வசூலிக்கும் முற்போக்குத் திட்டத்தை கலைஞர் உருவாக்கினார்.
  • இதற்கு மாறாக, கடன் கொடுக்கும் வங்கி - நிதி நிறுவனங்களிடம் விற்பனைப் பத்திரத்தை அடகுவைக்கும் திட்டத்துக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தமிழ்நாடு அரசிற்கு வழிகாட்டியுள்ளது.
  • இதன்மூலம் முற்போக்கு வாழ்விட உரிமைத் திட்டம் பறிபோய்விடும். இதைத் தடுக்க உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கிகளிடம் கடன் பெறுவதற்காக ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிடுவதும், மாநில அரசின் நிதி வருவாயை உருவாக்குவதற்கான வழிவகைகளை அடையாளம் காண்பதும், அதற்கான உரையாடல்களை முன்னெடுப்பதுமே அவசியத் தேவை.
  • ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற உன்னத நோக்கத்தோடு அனைவருக்கும் வீட்டு வசதி வழங்கச் செயலாற்றிய கலைஞர் கருணாநிதியின் கனவு மெய்ப்படுவதும் மேம்படுவதும், இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினின் கையிலேயே உள்ளது.

நன்றி: இந்து தமிழ் திசை (27 - 09 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories