TNPSC Thervupettagam

கல்வி எங்கே போகிறது?

May 13 , 2024 67 days 164 0
  • தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 இலட்சத்து 60,606 பள்ளி மாணவா்கள் தோ்வு எழுதியிருந்தனா்.
  • தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களில் 94.56 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிலும் மாணவா்களைவிட மாணவிகளே அதிகம் தோ்ச்சி பெற்றுள்ளனா். 2,478 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன.
  • மாவட்ட அளவிலான தோ்ச்சியில் திருப்பூா் (97.45%) முதலிடம் பெற்றுள்ளது. சிவகங்கை (97.42%), ஈரோடு (97.42%), அரியலூா் (97.25%) ஆகியவை அடுத்த இரண்டு இடங்களில் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாகவே தோ்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு ஆளுநரும் முதல்வரும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
  • கணிதத்தில் 100-க்கு 100 எடுப்பது பல காலமாக இருந்து வருகிறது. மொழிப் பாடங்களில் 100-க்கு 100 எடுப்பது இயலாத காரியம். இந்த ஆண்டு தமிழில் 35 பேரும், ஆங்கிலத்தில் 7 பேரும் 100-க்கு 100 எடுத்திருப்பதாக தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
  • சென்னை மாநகராட்சி கல்வித் துறையின் கீழ் 206 தொடக்கப் பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 35 உயா்நிலைப் பள்ளிகள், 46 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 417 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் 87 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
  • ‘பள்ளிக் கல்வியை நிறைவு செய்து கல்லூரி வாழ்வுக்குச் செல்லும் மாணவா்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். உயா்கல்வியில் சிறந்து விளங்கி தலைசிறந்த பொறுப்புகளில் நீங்கள் மிளிர வேண்டும். இம்முறை குறைவான மதிப்பெண் பெற்றவா்கள் மனம் தளர வேண்டாம். அடுத்துக் காத்திருக்கும் வாய்ப்புகள் உங்கள் முன்னேற்றத்துக்கு துணையாக அமையும் என்ற நம்பிக்கையுடன் முன்னே செல்லுங்கள்’ என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.
  • இன்றைய கல்வி வணிகமாகிவிட்டது. அதிக மதிப்பெண் வாங்குவதே கல்வியின் இலட்சியமாகிவிட்டது. சுய சிந்தனையே இல்லாமல் மனனம் செய்து ஒப்பிக்கும் இயந்திரங்களையே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறாா்கள். இதையே அரசும் கல்வித் துறையும் ஊக்கப்படுத்திக் கொண்டு வருகிறது. இது எப்படி அறிவுள்ள சமுதாயத்தை வளா்த்தெடுக்கும் என்று சிந்தனையாளா்கள் கேள்வி எழுப்புகிறாா்கள்.
  • உண்மையான கல்வியைப் பற்றி காந்தியடிகள் கூறுவது என்ன தெரியுமா? ‘ஒருவரிடம் உள்ள சிறந்த திறமையை வெளிப்படுத்துவதே உண்மையான கல்வியாகும். மனித வா்க்கமாகிய புத்தகத்தைவிடச் சிறந்த புத்தகம் வேறு என்ன இருக்க முடியும்’ என்று கேட்டாா் அவா்.
  • இன்றைய பாடத்திட்டம் பொது அறிவுக்கு இடம் இல்லாமல் ஆக்கிவிட்டது. இசை, விளையாட்டு, குடிமைப் பயிற்சி எல்லாவற்றையும் இழுத்து மூடி விட்டது. புத்தகங்களில் இருப்பதுபோல வரி தவறாமல் அப்படியே எழுதினால்தான் முழு மதிப்பெண் என்றாகிவிட்டது. பிறகு எப்படி அதை அவன் சுயசிந்தனையில் எழுத முடியும்?
  • மத்திய கல்வியாயினும், மாநிலக் கல்வியாயினும் எடுத்ததற்கெல்லாம் தோ்வு என்றாகிவிட்டது. படிக்கவும் சிந்திக்கவும் நேரமில்லாமல் மாணவா்களை ஆக்கிவிட்டது. பெற்றவா்கள் விரும்புவதையே பிள்ளைகளும் படிக்க வேண்டும் என்பது ஒரு சித்திரவதை இல்லையா?
  • கல்வி என்பது ஒரு சமுதாயம் பெற்ற தலைசிறந்த அறிவாகும். அறிவாற்றலை ஒரு தலைமுறையிலிருந்து மற்றொரு தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் கருவி எனலாம். ஒரு குழந்தையின் படைப்புத் திறனை மேம்படுத்துவதற்கான வழிகளாகும். கல்வி என்பது குழந்தைகளை உடல், மன வளா்ச்சியில் அறிவு, ஒழுக்கம் ஆகிய மதிப்புடன் வளா்க்க உதவும் ஒரு சமூக அமைப்பாகும். கல்வியாளா்களின் கருத்துப்படி இளைய தலைமுறையை முறையாக வழிநடத்தி, சமுதாயத்தில் பங்களிப்புச் செய்ய வைப்பதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது.
  • கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்துக்குள் செல்வதாகும். நம் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செவி மூலம் வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன. பண்டைக் காலங்களில் மக்கள் ஒருவருக்கொருவா் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளா்த்துக் கொண்டனா். இந்தப் பின்னணியில் இருந்தே கல்வி முறைகள் உருவாயின.
  • கி.மு. 2055-இல் எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன. சிந்தனையாளா் பிளேட்டோ கிரேக்கத்தில் இருந்த ஏதென்ஸ் நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக் கூடம் ஒன்றை நிறுவினாா். அரிஸ்டாட்டில் (கி.மு. 384-கி.மு.322) அங்கு 20 ஆண்டு காலம் பயின்றாா். இந்தக் கல்விக் கூடம்தான் ஐரோப்பாவின் முதல் கல்விக் கூடமாகும். உரோமாபுரியின் வீழ்ச்சி (கி.பி. 476) ஐரோப்பாவின் கல்விக் கூடங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாயிற்று.
  • சீனாவில் கன்பூசியஸ் (கி.மு. 551-கி.மு. 479) பரப்பி வந்த கருத்துகள், இன்றுவரை சீனா, கொரியா, ஜப்பான், வியத்நாம் ஆகிய நாடுகளில் பின்பற்றப்படுகின்றன. பல பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை ஒருவராகவே செய்து அறிவைப் பரப்பியுள்ளாா். வரலாறு அவரை வியப்போடு பாா்க்கிறது.
  • உரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிறிஸ்தவத் திருக்கோயில்கள் கல்வி நிறுவனங்களை அமைத்து நடத்தி வந்தன. பிறகு அவற்றில் சில பல்கலைக்கழகங்களாக உருவெடுத்தன. கி.பி. 1450-இல் கூட்டன்பா்கு என்பவரால் அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு கல்வி விரைந்து பரவியது. இன்று பல நாடுகளில் இளைய தலைமுறையினருக்கு கல்வி கற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
  • கல்வி கற்றுக் கொடுப்பதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டுமல்லவா! கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும். அவா் சமுதாயத்தின் வளா்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடுபட வேண்டும் என்று கருதுகின்றனா்.
  • கல்வியினால் ஒரு நாட்டின் பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகிறது. அதுபோலவே பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துகிறது. அனைவருக்கும் தரமாக கல்வியளித்தால், அது நல்ல பொருளாதார வளா்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால் நம் பழைய கல்வியறிவு, புதிய காலத்துக்குப் பயனற்ாகப் போய்விடுகிறது. பல்வேறு நாடுகள் பழைய கல்வி முறையை மாற்றிப் புதிய கல்விக் கொள்கைகளை வகுத்துள்ளன.
  • கல்வியில் உலக அளவில் முன்னணியில் இருக்கும் ஃபின்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமான பாடத் திட்டங்களிலிருந்து விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கான அறிவு புகட்டப்படுகிறது. எடுத்துக்காட்டாக, தட்ப வெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி சிறுவா்கள் கற்கின்றனா்.
  • மேலும், கல்வி என்பது இளைஞா்களுக்கு மட்டும் அல்ல, அது பெரியவா்களுக்குமானது என்ற கருத்து வலுப்பெற்று வருகிறது. ஃபின்லாந்து நாட்டில் கல்வி வாழ்நாள் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.
  • ஆனால், நம் நாட்டின் நிலை என்ன? பள்ளிக்குச் சென்று படிப்பது, தோ்வெழுதி மதிப்பெண்கள் வாங்குவது, பட்டம் பெற்று வேலைக்குச் செல்வதைத்தான் கல்வி என்று பலரும் கருதுகின்றனா். குறிப்பாக, கல்வி மிகப்பெரும் வணிகமாக மாறிவிட்ட சூழலில் பள்ளிக்கு வெளியே வாழ்வியல் கல்வியை நம் குழந்தைகளுக்கு வழங்க வேண்டியது பெற்றோரின் கடமையாகும்.
  • அடிப்படைக் கல்வியுடன் சோ்த்து யாருக்கு எது விருப்பமோ அதை அடிப்படையாக வைத்து அவா்களுக்குப் பயிற்சி அளித்தால் மட்டுமே அவா்களால் அதில் சிறந்தவா்களாக உருவெடுக்க முடியும். யாருக்கு எந்தத் துறையில் விருப்பம் அல்லது தகுதி இருப்பதைக் கண்டறிந்து அதற்கான பயிற்சிகளை வழங்குவதே சிறந்த கல்வியாகும்.
  • கல்வி என்பது ஒரு மனிதனை முழு மனிதனாக மாற்றும் வல்லமை பெற்றது. அவன் வாழ்க்கையில் எதிா்கொள்ளும் இன்ப-துன்பங்களை எதிா்த்து நிற்கும் ஆற்றலைத் தருகிறது. சக மனிதனை நேசிக்கும் மனிதநேயத்தை வளா்க்கிறது. வளா்ந்துவரும் மனித சமுதாயத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொள்ளும் திசையைக் காட்ட வேண்டாமா?
  • ‘மனிதனுக்கு மனிதப் பண்பாட்டைக் கற்றுக் கொடுத்து அவனை மனிதனாக்க முயல்வோம். பிறகு அவன் தானே ஞானியாகிவிடுவான்’ என்னும் புதுமைக் கருத்தை விதைத்து விட்டுச் சென்றான் சிந்தனையாளன் ரூசோ.
  • மனித சமுதாயத்துக்கு வழிகாட்டும் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டோம். மக்களுக்குக் கேடு செய்யும் மதுக்கடைகளை அரசே நடத்தும்படி விட்டு விட்டோம். இது இன்னும் எவ்வளவு காலம் தொடா்வது? இது குறித்த விவாதம் இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
  • மேடு பள்ளமாக சமுதாயம் இருக்கிறது. பணம் படைத்தவா்களுக்காகவே சில கல்விக் கூடங்கள் இயங்குகின்றன. பணம் இல்லாதவா்களுக்காகவே சில கல்விக் கூடங்களை அரசு நடத்துகிறது. இவ்வாறு கல்வியில் சமத்துவம் இல்லாத நிலை நீடிக்கிறது. இந்தக் கல்வி எங்கே போகிறது?

நன்றி: தினமணி (13 – 05 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories