TNPSC Thervupettagam

கல்வி நிலையங்கள் மாணவியரின் பாதுகாப்பை உறுதிசெய்யுமா

April 16 , 2023 641 days 458 0
  • உயர்கல்வி பயில கல்லூரிகளுக்குள் நுழைதல் ஆண்களைப்போல் பெண்களுக்கு அவ்வளவு எளிதல்ல. அவர்கள் பொருளாதாரத் தடைகளோடு பல்வேறு சமூக பண்பாட்டுத் தடைகளையும் தாண்டியே கல்லூரிகளுக்குப் பயில வருகின்றனர். பெண் கல்வியில் ஆர்வம் கொண்ட பெற்றோர்கள்கூடப் பொதுவெளியில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த அச்சத்தால் பெண்களைக் கல்லூரிகளுக்கு அனுப்பத் தயங்குகின்றனர்.
  • இத்தகைய சூழலில் கல்லூரிகளுக்குள் பெண்களுக்குப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெறுகின்றன என்கிற செய்தியை யாரும் எளிதில் கடந்து செல்ல முடியாது. பல்கலைக்கழக மானியக்குழு கல்லூரி மாணவிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளைத் தந்துள்ளது. எனினும் அவலங்கள் தொடரவே செய்கின்றன.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல்கள்

  • பல்கலைக்கழக மானியக்குழு (உயர்கல்வி நிறுவனங்களில் பெண் பணியாளர்கள் மற்றும் மாணவியரைப் பாலியல் துன்புறுத்தல்களில் இருந்து தடுத்தல். தடைசெய்தல். குறைதீர்த்தல்) ஒழுங்குமுறை 2015 (University Grand Commission (Prevention, Prohibition and redressal of sexual harassment of women employees and students in higher educational institutions) Regulation 2015) மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தால் வெளியிடப்பட்டு 2016 ஆம் ஆண்டு மே 2 முதல் நடைமுறைக்கு வந்தது. அதில்
  • 1. பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன?
  • 2. பாலியல் துன்புறுத்தல்களை விசாரிப்பதற் கான உள்ளகப் புகார்க் குழு – அதன் அமைப்பு, பணிகள், கடமைகள்
  • 3. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிற பணியாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய பாலின உணர்திறன் பயிற்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
  • 4. விசாரணை முறைகள், அதற்கான காலவரையறை, அறிக்கைகள்
  • 5. ஆண்டு அறிக்கையைப் பல்கலை கழகங்களுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவுக்கும் அனுப்புதல் போன்றவை அடங்கும்.
  • உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் வன்முறைகளைத் தடுக்கவும் கையாளவும் வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால், கல்வி நிறுவனங்கள் பாலியல் வன்முறையின் தீவிரத்தன்மையை உணரவில்லை என்பதே உண்மை. 2014-2015 ஓராண்டு காலத்தில் இந்தியப் பல்கலைக்கழகங்களில் 75 பாலியல் வன்முறை வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
  • ஏப்ரல் 2018 - மார்ச் 2019 வரையிலான காலத்தில் 188 உயர் கல்வி நிறுவனங்கள் மட்டுமே பல்கலைக்கழக மானியக் குழுவுக்குப் பாலியல் வன்முறை வழக்குகள் குறித்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளன. இவற்றில் 171 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அறிக்கையைச் சமர்ப்பித்த நிறுவனங்களில் 29 உயர் கல்வி நிறுவனங்களில் இதுவரை உள்ளகப் புகார்க் குழு அமைக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ளன. 188 கல்லூரிகளில் மட்டுமே 417 விழிப்புணர்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்கள் சந்திக்கும் சவால்கள்

  • பெரும்பான்மையான வன்முறை நிகழ்வுகளில் எங்கு சென்று புகார் அளிப்பது என்கிற சிக்கலே குற்றங்கள் பதிவு செய்யப்படாமைக்கான முக்கிய காரணமாக உள்ளது. இதைக் கருத்தில் கொண்டே உள்ளகப் புகார்க் குழுவுக்கான வழிகாட்டுதல்களைப் பல்கலைக்கழக மானியக் குழு தந்துள்ளது.
  • பெரும்பான்மையான கல்லூரி வளாகங்களில் குறைந்தபட்சமாகப் பாலியல் துன்புறுத்தல் குறித்த விழிப்புணர்வுப் பயிற்சிகள், புகார் அளிப்பதற்கான வழிகாட்டுதல்கள் தரப்படு வதில்லை. கல்லூரி வளாகங்களில் அந்தச் சட்டம் குறித்த அறிவிப்புப் பலகைகள்கூட இல்லை. பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட நபர் அந்த நிகழ்வின் அல்லது தொடர் நிகழ்வுகள் இருப்பின் இறுதி நிகழ்வுக்குப் பிறகு மூன்று மாதங்களுக்குள் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளிக்க வேண்டும்.
  • ஆனால், பெரும்பான்மையான கல்லூரி வளாகங்களில் எல்லா வகையான புகார்களுக்கான பொதுப் புகார் பெட்டி மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கான தனிப் புகார் பெட்டி இல்லை. சில கல்லூரிகளில் வாட்ஸ் அப் குழு, மின்னஞ்சல் முகவரிகள் தரப்பட்டுள்ளன.
  • இருப்பினும் அவை சரியாகக் கண்காணிக்கப்படுவதில்லை. பாலியல் துன்புறுத்தல் குறித்துப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் அச்சம், வெட்கம், தயக்கம் காரணமாகப் பெரும்பான்மையான புகார்களைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் மாணவிகள் தெரிவிக்கத் தவறிவிடுகின்றனர்.
  • பெரும்பான்மையான பெற்றோர்கள் சமூகத்துக்கு அஞ்சி படிப்பையே நிறுத்திவிடும் அபாயம் இருப்பதால் அவர்களிடம்கூடப் பெண்கள் பகிர்ந்துகொள்ளத் தயங்குகின்றனர். ஆசிரியர்கள் மீது புகார் அளித்தால் ஏற்படும் பின்விளைவுகளும், அவை அவர்களின் எதிர்காலத்தையே பாதிக்கும் என்கிற அச்சமும், தனக்கு நீதி கிடைக்குமா என்கிற நம்பிக்கையின்மையும் மாணவிகளைத் தயங்க வைக்கின்றன.

உள்ளகப் புகார்க் குழுவின் சவால்கள்

  • உள்ளகப் புகார்க் குழுவின் உறுப்பினர்களில் மூவரில் இருவர் கல்லூரியில் பணியாற்றும் அனுபவம் மிக்க பெண் பேராசிரியர்களாக இருப்பர். குழுவின் நியமன உறுப்பினராக ஒரு வழக்கறிஞரோ அரசுசாரா அமைப்புகளில் இருந்து பெண்களின் பிரச்சினைகள் மீது அக்கறையும், அறிவும், பாலினப் புரிந்துணர்வும் கொண்ட ஒருவரோ இருப்பர். குழுவில் இருக்கும் நபர்களுக்குத் தேவையான பயிற்சிகள் தரப்படுவதில்லை.
  • ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ அதன் கூட்டங்கள் நடைபெறுகின்றன. பல கல்லூரிகளில் புகார்கள் வந்தால் மட்டுமே கூடி விவாதிப்பது நடைபெறுகிறது. உடன் பணியாற்றும் ஆசிரியர் மீது புகார் வரும்போது அதை விசாரிப்பதில் தயக்கம், கல்லூரியின் நற்பெயருக்குப் பங்கம் விளையுமோ என்கிற அச்சம் போன்றவை குழு சிறப்பாகச் செயல்படாமைக்குக் காரணங்களாகின்றன.
  • மேலும், உள்ளகப் புகார்க் குழுவுக்குச் சட்டப்பூர்வமான அதிகாரம் ஏதும் இல்லை. விசாரித்துப் பரிந்துரை அளிப்பதோடு அதன் பணி முடிந்து போகிறது என்பதாலும் அது நிர்வாகம் அமைத்துள்ள குழு என்பதாலும் புகார் அளிப்பதில் தயக்கம் உள்ளது. குழுவின் நியமன உறுப்பினர்களான வழக்கறிஞர்கள் நேரம் ஒதுக்கி விசாரணைக்கு வருவது, அரசுசாரா அமைப்புகளில் பெண்களின் பிரச்சினைகள் மீது அக்கறையும், அறிவும், பாலினப் புரிந்துணர்வும் கொண்டவர்களை நியமன உறுப்பினர்களாக அமர்த்தத் தேடிக் கண்டுபிடிப்பது, குறிப்பாகக் கிராமப்புறக் கல்லூரிகளுக்குச் சவாலாக உள்ளது.
  • விழிப்புணர்வு பயிற்சிகளுக்கும் அது தொடர்புடைய செயல்பாடுகளுக்கும் நிதியின்மை, உள்ளகப் புகார்க் குழுவின் பணிகளுக்கான இடவசதியின்மை, ஒலி-ஒளி பதிவு செய்யும் வசதியின்மை போன்ற பல்வேறு காரணங்கள் கல்லூரிகளில் உள்ளகப் புகார்க் குழு செவ்வனே செயல்படத் தடையாக உள்ளன.

பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்வோம்:

  • # பாலியல் துன்புறுத்தல்கள், அதற்கான தீர்வு களுக்கான வழிமுறைகள் குறித்த விளக்கப் படங்கள், தொடர்பு எண்கள் கொண்ட பதாகைகளைக் கல்லூரி வளாகத்தின் பல்வேறு இடங்களில் வைத்தல்.
  • # கல்வியாண்டின் தொடக்கத்திலும் இடையிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பயிற்சிப் பாசறைகளை ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் நடத்துதல்.
  • # பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவுறுத்தலின்படி நவம்பர் 25ஆம் நாளை ‘பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தின’மாகக் கடைப்பிடித்தல்.
  • # உள்ளகப் புகார்க் குழுவை அமைத்தல், அதற்குத் தேவையான நிதி ஒதுக்குதல், தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருதல், அதன் செயல்பாடுகளை ஒழுங்கு செய்தல்.
  • # புகார்களை எவ்விதச் சார்பும் இன்றி விசாரிப்பதை உறுதிசெய்தல்.
  • # பாதிக்கப்பட்டவரின் பாதிப்பின் தன்மைக் கேற்ப தண்டனையை உறுதிசெய்தல், காவல் துறையை நாடுவதற்கு உதவிசெய்தல்.
  • # பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று அவருக்கான நீதியைப் பெற்றுத்தருதலே கல்லூரியின் கடமை என்கிற நிலைப்பாட்டை எடுத்தல்.
  • # பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உள நல உதவியளித்தல், அவர்கள் தொடர்ந்து அச்சமின்றி பயிலுதல் அல்லது பணியாற்றுதலை உறுதிசெய்தல்.
  • # பல்கலைக்கழகத்திற்கும், பல்கலைக்கழக மானியக் குழுவிற்கும் உள்ளகப் புகார்க் குழுவின் ஆண்டு அறிக்கையைத் தவறாது அனுப்புதல். தரமான கல்வியை மட்டுமின்றிப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதும் கல்வி நிறுவனங்களின் கடமைதானே!

நன்றி: தி இந்து (16 – 04 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories