- தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் வருகைப்பதிவு அதிகரித்திருப்பதோடு, அவர்களின் கற்றல் திறனும் மேம்பட்டிருப்பதாக மாநிலத் திட்டக் குழு வெளியிட்டிருக்கும் தகவல் மகிழ்ச்சியளிக்கிறது. மார்ச் 1ஆம் தேதி மாணவர் சேர்க்கை தொடங்கியதையடுத்து, ஒரே வாரத்தில் 80,076 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில், அண்மையில் வெளிவந்துள்ள இந்தப் புள்ளிவிவரம் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
- வறுமையும் பட்டினியும் மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்குத் தடையாக இருக்கக் கூடாது என்கிற நோக்கத்தில் தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. காலை உணவுக்கும் அதை நீட்டித்து, இந்தியாவின் முன்னோடித் திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக 2022-2023இல் 36 அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- பிறகு, 2023-2024இல் 1,50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் 1,649 பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டது. 97.2% தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தத் திட்டத்தால் பலனடைந்துவருகின்றனர். வரும் கல்வியாண்டில் இந்தத் திட்டம் கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
- தொடக்கப் பள்ளிகளில் மாணவர் வருகையையும் மாணவர் சேர்க்கையையும் அதிகரிப்பது, சிறார்களிடம் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் களைவது, கற்றல் திறனை மேம்படுத்துவது, தாய்மார்களின் சமையல் சுமையைக் குறைப்பது போன்றவற்றை இந்தத் திட்டத்தின் நோக்கங்களாக அரசு அறிவித்தது. திட்டம் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்தத் திட்டத்தின் நோக்கங்கள் நிறைவேறினவா என்பதைக் கண்டறியும் பொருட்டும் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
- இத்திட்டத்தால் 60.3% கிராமப்புற மாணவர்கள் பள்ளி நேரத்துக்கு அரை மணி நேரம் முன்னதாகவே பள்ளிக்கு வந்துவிடுகிறார்கள். இதனால், அவர்கள் சகமாணவர்களுடன் கலந்துரையாடுவதுடன், அவர்களது விளையாட்டுத் திறனும் அதிகரித்துள்ளதாகவும் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.
- இந்தியக் குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு தொடர்பாகத் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வெளியாகும் புள்ளிவிவரங்கள் மிகுந்த கவலையளிக்கின்றன. மூன்று வேளையும் போதுமான உணவு கிடைக்காததுதான் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குக் காரணம். இந்தப் பின்னணியில், தமிழகத் தொடக்கப் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டுவரும் காலை உணவுத் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம்.
- தமிழகத்தின் கிராமப்புறங்களில் பெரும்பாலான பெண்கள் கூலி வேலைக்குச் செல்கின்றனர். நகர்ப்புறங்களில் வசிக்கும் கீழ்நடுத்தர வர்க்கக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேலைக்காகப் புறநகர்ப் பகுதிகளுக்குக் காலையிலேயே பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
- இதுபோன்ற வறுமைச் சூழலில், தங்கள் குழந்தைகளுக்குக் காலை உணவைச் சரிவரச் சமைத்துத் தர பலரால் முடியாத நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு நல்வாய்ப்பாக இத்திட்டம் அமைந்துள்ளதாகவும் கணக்கெடுப்பு குறிப்பிட்டுள்ளது.
- இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இதன் நோக்கத்தை விமர்சித்த தோடு, தேவையில்லாத திட்டம் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. தற்போது இந்தத் திட்டத்தால் இளம் மாணவர்கள் அடைந்திருக்கும் பலன்கள் அந்த விமர் சனங்களுக்கு விடைபோல் அமைந்துள்ளன. அதேவேளையில், இத்திட்டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் கூடுதல் பணிச்சுமை ஏற்படாமலும் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்.
- அப்படி ஒரு சூழல் உருவானால், கூடுதல் பணியிடங்களை ஏற்படுத்தி இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும். கல்வி பயிலும் மாணவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்துகிற எந்தவொரு திட்டமும் வளமான எதிர்காலத்துக்கான அடிக்கல். அதில் எவ்விதக் குறைபாடும் நேர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்வது அவசியம்!
நன்றி: இந்து தமிழ் திசை (20 – 03 – 2024)