TNPSC Thervupettagam

கல்விக் கொள்கையில் முரண்பாடுகள்

September 26 , 2024 62 days 77 0

கல்விக் கொள்கையில் முரண்பாடுகள்

  • கல்விக்கான நிதியை இந்திய அரசு ஒதுக்காததால் தமிழ்நாட்டு மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழிக் கொள்கை விதிகளை ஏற்கவில்லை என்பதற்காக மத்திய கல்வி அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
  • பள்ளிக் கல்வித் துறைக்கு கடந்த ஜூன் மாதம் வரவேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு வழங்கவில்லை. அது மட்டுமல்ல, கடந்த ஆண்டு இறுதித் தவணையாக வரவேண்டிய ரூ.249 கோடியையும் மத்திய அரசு வழங்கவில்லை. புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது'' என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
  • தேசிய கல்விக் கொள்கை விதிகளை ஏற்காத காரணத்தால் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட "சமக்ர சிக்ஷô அபியான்' (எஸ்எஸ்ஏ) திட்டத்தின்கீழ் நிதியை விடுவிக்காத மத்திய கல்வி அமைச்சகத்தின் ஜனநாயக விரோத மற்றும் சர்வாதிகார நடவடிக்கையை கண்டிப்பதாக அகில இந்திய கல்வி பாதுகாப்புக் குழுவின் பொதுச் செயலாளர் தருண் காந்தி நஸ்கர் அறிக்கை விடுத்துள்ளார்.
  • இந்தியா கல்வியில் சிறந்த நாடு, உலகிலேயே மனிதவளம் அதிகம் உள்ள நாடு. இந்த நாட்டில் தங்கள் கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனிதவளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போது மத்திய அரசு ஈடுபட்டிருக்கிறது.
  • மத்திய அரசு ஒரு தேசிய கல்விக் கொள்கையை 2020-ஆம் ஆண்டில் கொண்டுவந்தது. பாஜக ஆளும் மாநிலங்களிலும், மத்திய அரசு நிறுவனங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாடு அரசு அதனை முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளவில்லை.
  • மாநிலத்துக்கான கல்விக் கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஒரு குழுவை நியமித்தது. ஓய்வு பெற்ற நீதிபதி த.முருகேசன் தலைமையில் 2022-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் 14 பேர் இடம்பெற்றனர். முன்னாள் துணைவேந்தர் ஜவஹர்நேசன், பேராசிரியர் இராமானுசம், திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், இராம.சீனிவாசன், பேராசிரியர் க.மாடசாமி, முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், அகரம் அறக்கட்டளை ஜெயஸ்ரீ தாமோதரன், அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பாலு ஆகியோர் இடம்பெற்றனர்.
  • இந்தக் குழு பல்வேறு கட்டங்களில் கல்வியாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களைச் சந்தித்து கருத்து கேட்டது. இப்போது அந்தக் குழு இரண்டாண்டுகள் கழித்து கடந்த ஜூலை மாதம் முதல் நாள் முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 600 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல அம்சங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
  • கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்பது இந்தக் குழு வழங்கியுள்ள முதன்மையான பரிந்துரையாகும். தமிழகத்தில் இருமொழிக் கொள்கையே தொடர வேண்டும். தொடக்கப் பள்ளி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாய்மொழிவழிக் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும். உயரிய நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட தமிழ்ப் பல்கலைக்கழகம் மிகவும் நலிவடைந்து வருகிறது. பல துறைகள் மூடப்பட்டு விட்டன. அந்தப் பல்கலைக்கழகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • ஆறு வயது நிரம்பிய பிள்ளைகளை மட்டுமே ஒன்றாம் வகுப்பில் சேர்க்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை கூறுகிறது; ஆனால், ஜூலை 31 அன்று 5 வயது நிரம்பிய பிள்ளைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம் என்ற நடைமுறையே தொடர வேண்டும்.
  • எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்தும் உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு நிதியுதவி செய்யக்கூடாது. ஐந்தாண்டு தொடக்கக் கல்வி, மூன்றாண்டு நடுநிலைக் கல்வி, இரண்டாண்டு உயர்நிலைக் கல்வி, இரண்டாண்டு மேல்நிலைக் கல்வி (5+3+2+2) என தற்போது நடைமுறையில் இருக்கும் கல்விமுறையே தொடரவேண்டும்.
  • பாடத்திட்டங்கள் பற்றியும் இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. ஜாதி ஒழிப்பை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். அதன்மூலம் ஜாதி ஒழிப்பு விவாதமாக்கப்பட வேண்டும். பாலின சமத்துவம், கிராமப்புற வாழ்க்கைமுறை பற்றியும் பாடங்களில் சேர்க்கப்பட வேண்டும்.
  • மனப்பாடத் தேர்வு முறையை மாற்றி, மாணவர்களின் சுய சிந்தனையைத் தூண்டும் வகையில் தேர்வு முறை மாற்றப்பட வேண்டும். மேலும், 10-ஆம் வகுப்பு வரை பொதுத் தேர்வுகள் கூடாது. பிளஸ்-1, பிளஸ்-2 இரண்டையும் சமமாகப் பாவிக்க வேண்டும்.
  • பள்ளி, கல்லூரிகளுக்கு இணையாக தனி நபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் பயிற்சி மையங்கள் அரசின் கட்டுப்பாட்டில் வரவில்லை. எனவே, உரிய அதிகாரம் கொண்ட ஒழுங்குமுறைக் குழுவை உருவாக்க வேண்டும். இவ்வாறு நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் தடை செய்ய வேண்டும்.
  • உயர் கல்வியில் அரசின் பங்களிப்பு குறைவாக உள்ளது. பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. எனவே, உயர்கல்வியில் அரசு அதிக முதலீடு செய்து, கல்வி நிறுவனங்களை நிறுவ வேண்டும்.
  • எந்தவோர் உயர் கல்வி படிப்புக்கான சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது. கல்வி வளாகங்களில் போதைப் பொருள் பயன்பாட்டை ஒழிக்க மாவட்டந்தோறும் ஆட்சியர் தலைமையில் மனநல ஆலோசகர், சுகாதார அதிகாரி, காவல் அதிகாரி, தன்னார்வத் தொண்டு நிறுவன உறுப்பினர் என 5 பேர் கொண்ட குழு அமைக்கலாம்.
  • கிராமப்புற மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு அதிக விளையாட்டு வசதிகள், முறையான பயிற்சி, மைதானங்கள் வழங்கப்பட வேண்டும். திறமையான மாணவர்களுக்கு நிதியுதவியை உறுதிசெய்ய வேண்டும்.
  • 40 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித உரிமையும் அற்று ஒடுங்கி வாழ்கிற இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கான கல்விக்கு அரசே பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • மாணவர்களை மையப்படுத்திய வகுப்பறையை உருவாக்க வேண்டும். "ஸ்போக்கன் இங்கிலீஷ்' போன்று "பேச்சுத் தமிழ்' பயிற்சியை வகுப்பறைகளில் வழங்க வேண்டும். பள்ளிகளில் குழந்தைகள் பேசுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கின்றன. நிறைய எழுத வைக்கிறோம்; தமிழில் பேசுவதற்கான பயிற்சி இல்லை; தமிழ் பேச்சுப் பயிற்சிக்கு பாட வேளை ஒதுக்க வேண்டும் என்பது மற்றொரு பரிந்துரை.
  • மாணவர்களை கடுமையாகக் கட்டுப்படுத்துவது வகுப்பறையை மெüனமாக்கிவிடும். வகுப்பறையில் ஜனநாயகம் தேவை. கேள்வி கேட்கும் திறன், விமர்சன சிந்தனை, தைரியம், பங்கேற்பு, சமூக விழிப்புணர்வை மாணவர்களிடம் வளர்த்தெடுக்க வேண்டும். அதே நேரம் மாணவர்களின் ஒழுக்கமின்மை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • மாணவர்கள், ஆசிரியர்கள் இடையே வாசிப்புப் பழக்கத்தை உருவாக்க வேண்டும். நூலகப் பயன்பாடு பாடவேளையில் சேர்க்கப்பட வேண்டும். இசைப் பள்ளிகளில் மட்டுமல்லாமல் எல்லாப் பள்ளிகளிலும், இசையை ஒரு பாடவேளையாகக் கொண்டுவர வேண்டும். அது குழந்தைகளின் சிந்தனையை விரிவுபடுத்தும்.
  • அரசு உதவி பெறும் பள்ளிகள் மீது அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. "அவற்றை அரசுப் பள்ளிகளுக்கு இணையாகக் கருத வேண்டும். நிர்வாக ரீதியாக புகாருக்கு உள்ளாகும் பள்ளிகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. கோச்சிங் மாபியா, தனியார் பள்ளி விளம்பரங்கள், மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து சுட்டிக் காட்டியுள்ளது.
  • பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கை பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட வேண்டும். நுழைவுத் தேர்வுகள் கூடாது. தேசியக் கல்விக் கொள்கையில் சொல்வது போன்று, இளநிலை பட்டப்படிப்புகளை 4 ஆண்டுகளாக மாற்றக் கூடாது. இளநிலை மூன்றாண்டு, முதுநிலை இரண்டாண்டு என்ற நடைமுறையே தொடர வேண்டும்.
  • பட்டப்படிப்பைப் பாதியிலே விட்டால் சான்றிதழ், டிப்ளமா வழங்கும் தேசியக் கல்விக் கொள்கையின் திட்டம் அநீதியானது; மூன்றாண்டுப் படிப்பை முடித்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
  • தேசிய கல்விக் கொள்கையை வேறு வேறு பெயர்களில் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்ற குற்றச்சாட்டு ஏற்கெனவே உள்ளது. இந்த அறிக்கையை தமிழக அரசு எவ்விதம் கையாளப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
  • மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களைப் பொருத்தவரை கல்வி பொதுப் பட்டியலில் உள்ளது. மத்திய அரசு மாநில உரிமைகளையும், மக்களின் மொழி வழி பண்பாட்டையும் மதிப்பதில்லை. இது அரசியல் சட்டத்துக்கு எதிரானது. இதனால் தமிழக அரசு மத்திய அரசின் கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய மாநிலக் கல்விக் கொள்கையைக் கொண்டுவர முனைந்துள்ளது.
  • கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், ஒரு மாநிலம் தமக்கென கல்விக் கொள்கையை வகுத்துச் செயல்படுவதைத் தவறு என்று சொல்ல முடியாது; அதுவே சரியான வழிகாட்டியாகும். உயர்தனிச் செம்மொழியும், உயர்ந்த பண்பாடும் கொண்ட தமிழ்நாட்டுக்கு ஒரு கல்விக் கொள்கை இருப்பது காலத்தின் கட்டாயம். அதை ஏற்று வழிநடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

நன்றி: தினமணி (26 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories