TNPSC Thervupettagam

கல்வியறிவால் கிடைத்த துணிவு

September 29 , 2024 60 days 124 0

கல்வியறிவால் கிடைத்த துணிவு

  • தங்கள் வீட்டு ஆண்களின் கட்டுக்கடங்காத குடிப் பழக்கம் தங்கள் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கியதால் அமெரிக்கப் பெண்கள் பலர் ஒருங்கிணைந்து மதுவுக்கு எதிரான போராட்டங்களை 1800களின் மத்தியில் முன்னெடுத்தனர். அமெரிக்காவில் பெண்கள் கல்லூரியின் முதல் தலைவராகச் செயல்பட்ட கல்வியாளரான ஃபிரான்சஸ் விலார்டு, 1874இல் மது ஒழிப்புப் போராட்டத்தில் இணைந்தார். இவரது தலைமையில் ‘Woman’s Christian Temperance Union (WCTU)’ அமைப்பு அதே ஆண்டு தொடங்கப்பட்டது. மதுவின் தீமைகள் குறித்துப் பெண்களுக்கும் இளம் தலைமுறையினருக்கும் இந்த அமைப்பினர் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
  • அமெரிக்காவில் மது ஒழிப்புப் போராட்டங்கள் நடைபெற்று நூறு ஆண்டுகள் கழித்து இந்தியாவில் மது ஒழிப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. ஆந்திர மாநிலத்தில் 1990களில் நடைபெற்ற மது ஒழிப்புப் போராட்டம் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது. காரணம், அதை முன்னின்று நடத்தியவர்கள் கிராமப்புறப் பெண்கள்.

பெண்களின் வெற்றி

  • கல்வியறிவும் விழிப்புணர்வும் எப்படியான சமூக மாற்றத்துக்கு வித்திடும் என்பதற்கும் இந்தப் பெண்களே சான்று. 1990களில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் தேசிய எழுத்தறிவு இயக்கத்தின் சார்பில் கிராமப்புறப் பெண்களுக்கு எழுத, படிக்கக் கற்றுத்தரப்பட்டது. பெண்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடிப் பொதுவான விஷயங்களை விவாதிக்கவும் இது அடித்தளமாக அமைந்தது. வருமானத்தில் பெரும் பகுதியைக் குடிப்பதற்குச் செலவிட்டுவிட்டுக் குடும்பத்தை வறுமையில் வைத்திருக்கும் ஆண்கள் பற்றியும் பெண்கள் விவாதித்தார்கள்.
  • கணவனின் குடிப் பழக்கம் குறித்துக் கேள்விகேட்ட பெண்கள் பலரும் அடியும் உதையும் வாங்கினர். அப்போது வீடுகளுக்கே மதுவை விநியோகித்த ஆந்திர அரசின் ‘வருணா வாகினி’ (மது வெள்ளம்) திட்டம் பெண்களை மேலும் கொதிப்படையச் செய்தது. தங்கள் வாழ்க்கையைப் பலிகொடுத்து அதில் வருமானம் ஈட்டும் அரசுக்கு எதிராகப் பெண்கள் திரண்டனர். நெல்லூர் மாவட்டத்தின் தூபகுன்ட கிராமத்தில் மது குடித்து இருவர் இறந்துவிட பெண்களின் போராட்டம் முறையான வடிவத்தை அடைந்தது. மது விற்பதற்கான உரிமம் பெறுவதற்காக அரசு சார்பில் நடத்தப்படும் டெண்டர் கூட்டங்களைப் பெண்களின் போராட்டம் தடுத்து நிறுத்தியது. பெண்களின் தொடர் போராட்டத்தால் அரசு கொள்கைரீதியான முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. பெண்களின் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியாகவும் அது அமைந்தது.

இரண்டாம் அலை

  • பெண்ணியத்தின் முதல் அலை பெரும்பாலும் வெள்ளையினப் பெண்களின் உரிமைகளைப் பேசியது.சம உரிமைக்கான பெண்ணியப் போராட்டங்களில் இன, நிற பேதங்களின் அடிப்படையில் பலபெண்கள் விடுபட்டனர். அதுவே அடுத்த கட்டத்துக்குப் பெண்ணியத்தை நகர்த்தியது. 1960களில் பெண்ணியத்தின் இரண்டாம் அலைபோராட்டம் தொடங்கியது. கல்வி நிறுவனங்களிலும் தொழிற் சாலைகளிலும் பெண்களுக்குச் சம உரிமை வழங்குவதை இந்தப் போராட்டங்கள் வலியுறுத்தின. வீட்டு வேலைகளில் முடக்கப்பட்டும் பெண்களின் வாழ்க்கை குறித்தும்பெண்களின் தனிப்பட்ட உரிமைகள் குறித்தும் இவை பேசின. பெண்களுக்கென்று எழுதி வைக்கப்பட்டிருக்கும் இலக்கணங்களை இவை கேள்விக்குள்ளாக்கின. இவை எதுவுமே பெண்ணின் தனி விஷயமல்ல, ஒவ்வொன்றிலும் அரசியல் இருக்கிறது என்பதை வலியுறுத்தித் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

நன்றி: இந்து தமிழ் திசை (29 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories