TNPSC Thervupettagam

கல்வியில் பாலின இடைவெளி

August 5 , 2024 117 days 163 0
  • உலகப் பொருளாதாரக் கூட்டமைப்பு (WEF - The World Economic Forum) 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேசப் பாலின இடைவெளி அறிக்கையை வெளியிட்​டுள்ளது. அதில் இடம்பெற்ற 146 நாடுகளில் இந்தியா​வுக்கு 129ஆவது இடம் கிடைத்​துள்ளது. 2022இல் பாலின இடைவெளியில் 135ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2023இல் 8 இடங்கள் முன்னேறி 127ஆவது இடத்தைப் பிடித்தது. இந்நிலை​யில், இந்த ஆண்டு பாலின இடைவெளியில் இரண்டு இடங்கள் பின்தங்கி இருக்​கிறது.
  • அரசியல், சமூகம், கல்வி, அதிகாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்பில் ஆண்களுக்கு நிகரான வாய்ப்பு பெண்களுக்குக் கிடைப்​ப​தில்லை. இதன் காரணமாக ஆண் - பெண் சமூக-பொருளாதார வளர்ச்​சியில் மிகப் பெரிய ஏற்றத்​தாழ்வு நிலவு​கிறது. இதையே பாலின இடைவெளி என அழைக்​கிறோம். பாலின இடைவெளிக்குப் பல்வேறு காரணங்கள் கூறப்​பட்​டாலும் கல்வி இதில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்து​கிறது.

சமத்து​வ​மின்மை:

  • சமூகத்தில் கல்வியைப் பெறுவதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே நிலவும் சமத்து​வமற்ற நிலையே கல்வியில் பாலின இடைவெளி உருவாகக் காரணமாகிறது. இந்தியாவில் ஆண்களின் கல்வியறிவு 80%ஆக உள்ள நிலையில், பெண்களின் கல்வியறிவு 62.3%ஆகப் பின்தங்​கி​யுள்ளது. இந்திய அரசின் தேசியப் புள்ளி​யியல் தரவின்படி, பெண்கள் கல்வி பெற்ற மாநிலங்​களின் பட்டியலில் கேரளம் (95.2%) முதலிடத்​திலும், மிசோரம் (89.4%) இரண்டாம் இடத்திலும் உள்ளன.
  • ராஜஸ்தான், ஆந்திரப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், பிஹார், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் பெண் கல்வியில் மிகவும் பின்தங்கி உள்ளன. மத்தியக் கல்வி அமைச்சகம் பள்ளி, கல்லூரி மாணவர் சேர்க்கைத் தரவுகளை இரண்டு அமைப்பு​களின் மூலம் கண்காணித்து​வரு​கிறது. அவை, கல்விக்கான ஒருங்​கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு (UDISE- Unified District Information System for Education), உயர் கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (AISHE - All India Survey on Higher Education).
  • கல்விக்கான ஒருங்​கிணைந்த மாவட்டத் தகவல் அமைப்பு 2021-22ஆம் ஆண்டுக்கான கல்வி அறிக்கையை வெளியிட்​டிருந்தது. அதில், மழலையர் பள்ளியில் பதிவுசெய்​யப்பட்ட குழந்தை​களில், பெண் குழந்தை​களின் விகிதம் 46.8%ஆக இருந்தது. தொடக்கப் பள்ளியில் (1 முதல் 5 ஆம் வகுப்பு) பெண்களின் விகிதம் 47.8%ஆக உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, நடுநிலைப் பள்ளியில் (6 முதல் 8ஆம் வகுப்பு) மாணவிகள் சேர்க்கை எண்ணிக்கை சற்றே அதிகரித்து 48.3%ஆகப் பதிவாகியது.
  • எட்டாம் வகுப்புக்குப் பிறகு மாணவி​களின் சேர்க்​கையில் சரிவு ஏற்படத் தொடங்​கு​கிறது. இதனால் உயர்நிலைப் பள்ளியில் (9,10 வகுப்புகள்) மாணவி​களின் சேர்க்கை எண்ணிக்கை 47.9%ஆகக் குறைந்தது. கல்வி உரிமைச் சட்டத்​தின்படி, இலவசக் கல்வி உரிமை இந்த வயதுடன் நிறைவடைகிறது என்பதும் குறிப்​பிடத்​தக்கது. இந்தச் சரிவுதான் கல்வியில் பாலின இடைவெளியை ஏற்படுத்தும் முதன்​மையான காரணி.
  • இதுவே, 9 - 10 வகுப்பு​களில் கல்வியைத் தொடரும் வாய்ப்பைப் பெற்ற மாணவிகள், பெரும்​பாலும் பள்ளிக் கல்வியை முழுமையாக நிறைவுசெய்யும் வாய்ப்​பையும் பெறுகிறார்கள். மேல்நிலைப் பள்ளியில் (11, 12ஆம் வகுப்பு) மாணவர்​களுக்கும் மாணவி​களுக்கும் இடையிலான பாலின இடைவெளி 48.3%. பள்ளிக் கல்வியின் பல்வேறு நிலைகளில் குறைந்த பாலின இடைவெளி நிலவுவது மேல்நிலைப் பள்ளி​யில்​தான்.
  • மேலும், உயர்நிலைப் பள்ளியில் மாணவி​களின் சேர்க்கை விகிதம் அதிகரிக்​கும்​போது, அவை கல்லூரிச் சேர்க்​கை​யிலும் எதிரொலிப்பதாக 2021-22ஆம் ஆண்டுக்கான உயர் கல்விக்கான அகில இந்திய ஆய்வு (AISHE) அறிக்கை கூறுகிறது. இந்தியாவில் 18 முதல் 23 வயது வரை உள்ளவர்​களில் கல்லூரி​களிலும் பல்கலைக்​கழகங்​களிலும் சேர்க்​கப்​பட்​டுள்ள பெண்களின் விகிதம் 28.5%. இது ஆண்களைவிட (28.3) சற்று அதிகம். குறிப்பாக, 2014-15இலிருந்து உயர் கல்வி நிறுவனங்​களில் மாணவிகள் சேர்க்கை 32% அதிகரித்​துள்ளது.

இடைநிற்றல் ஏன்?

  • குடும்ப அழுத்தம், வறுமை​யினால் குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர் முறை போன்றவற்றால் பாதிக்​கப்​படும் பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத சூழல் நிலவு​கிறது. ஒரு நிமிடத்துக்கு மூன்று பெண் குழந்தைகள் திருமணத்தில் தள்ளப்​படும் அவல நிலை இந்தியாவில் இருப்பதாகக் குடிமைச் சமூக அமைப்புகள் நிகழ்த்திய ஆய்வில் தெரிய​வந்துள்ளது.
  • இவை தவிர்த்து, பள்ளியில் இடைநிற்றல் ஏற்பட மூன்று முக்கியக் காரணங்கள் கூறப்​படு​கின்றன. முதலாவது, பள்ளி​களின் அமைவிடம். தொடக்கப் பள்ளிகள் 1 கி.மீ. முதல் 2 கி.மீ. தொலைவுக்குள் அமைந்​துள்​ளதால் பெண் குழந்தைகளைப் பெற்றோர் அச்சமின்றிப் பள்ளிக்கு அனுப்பு​கின்​றனர்.
  • ஆனால், தொலைதூரக் கிராமப் பகுதிகள், மலைப் பகுதி​களைச் சேர்ந்த சிறார்கள் தமது வசிப்​பிடத்​திலிருந்து இடைநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி​களுக்கு நெடுந்​தூரம் பயணிக்க வேண்டி​யுள்ளது. இதனால் பெண் குழந்தை​களைப் பள்ளிக்கு அனுப்​புவதில் பெற்றோரிடம் தயக்கம் உள்ளது. ஆண் ஆசிரியர் மட்டுமே இருக்கும் ஓராசிரியர் பள்ளி​களுக்கு மாணவிகளை அனுப்​புவதற்குப் பெற்றோர் விரும்​புவதில்லை.
  • இரண்டாவது சுகாதார வசதி. மத்திய, மாநில அரசுகளின் திட்டங்​களின் மூலம் பல பள்ளி​களில் கழிப்​பறைகள் கட்டப்​பட்​டு​விட்​டாலும், அவற்றைப் பராமரிப்​ப​தற்குப் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லை. பள்ளி​களில் போதிய சுகாதார வசதிகள் இல்லாத சூழலில், பூப்பெய்திய சிறுமிகள் பள்ளிக்குச் செல்வதைத் தவிர்ப்பது கிராமப்​புறங்​களில் இன்றும் தொடர்​கிறது. மூன்றாவது உடல்நலப் பாதிப்பு. பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதி​களில் ஊட்டச்​சத்துக் குறைபாட்டினால் பாதிப்புக்​குள்​ளாகும் பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர்​வதில் சவால்கள் உள்ளன.

தீர்வுகள்:

  • இடைநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளி​களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். அனைத்துப் பகுதி​களுக்கும் அரசுப் போக்கு​வரத்து சேவைகள் நீட்டிக்​கப்பட வேண்டும். இலவச பஸ் பாஸ், சைக்கிள், சத்துணவுத் திட்டம் உள்ளிட்​ட​வற்றைச் செயல்​படுத்திய மாநிலங்​களில், பெண் கல்வி விகிதம் அதிகரித்​துள்ளது. பிற மாநிலங்​களும் இதைப் பின்​பற்​றலாம். இறுதியாக, பள்​ளி​களின் சுகாதார நலனில் அரசு உறுதி​யாகச் செயல்​படு​வதுடன் பாலின இடைவெளியைக் குறைப்​ப​திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நன்றி: இந்து தமிழ் திசை (05 – 08 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories