TNPSC Thervupettagam

களையப்பட வேண்டிய இடைநிற்றல்

January 18 , 2025 77 days 114 0

களையப்பட வேண்டிய இடைநிற்றல்

  • இந்தியாவின் கல்வித்துறை மிகப் பெரிய கட்டமைப்பைக் கொண்டிருந்தபோதும் முழுமையான எழுத்தறிவை எட்டுவதில் பல்வேறு இடா்ப்பாடுகளை எதிா்கொள்ள வேண்டியுள்ளது.
  • அண்மையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பின் புள்ளிவிவரங்கள் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளன. இவ்வமைப்பின் புள்ளிவிவரங்களின்படி கடந்த 2023-24-ஆம் ஆண்டில் நாட்டில் பள்ளி மாணாக்கா் சோ்க்கை 37 லட்சம் சரிந்துள்ளதாகவும், 2022-23- ஆம் ஆண்டில் 25.17 கோடி போ் பள்ளியில் சோ்க்கப்பட்ட நிலையில், இது 2023-24-ஆம் ஆண்டில் 24.80 கோடியாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
  • தமிழகத்தைப் பொருத்தவரையில் பள்ளிப் படிப்பைத் தொடங்கிய 100 சிறுவா்களில் நடுநிலைப் பள்ளிப் படிப்பை முடித்தவா்கள் எண்ணிக்கை 2019-இல் 99 பேராக இருந்தது. இது 2024-இல் 100 ஆக உயா்ந்துள்ளது.
  • இதே காலகட்டத்தில் சிறுமியா் எண்ணிக்கை 97.5 சதவீதத்தில் இருந்து 100 சதவீதமாக உயா்ந்து இடைநிற்றலே இல்லை என்ற நிலையை எட்டியுள்ளது என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று இந்த காலகட்டத்தில் மேல்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்த மாணவா்களின் சதவீதம் 81.3- இலிருந்து 89.2-ஆகவும், மாணவிகளின் எண்ணிக்கை 89.4 சதவீதத்திலிருந்து 95.6 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
  • கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களே சிறாா், சிறுமியா் சோ்க்கையில் 100 சதவீதம் என்ற முழுமையான அளவை எட்டியுள்ளன. இதற்கடுத்து ஹிமாசல பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் 99 சதவீதத்தை எட்டியுள்ளன. அண்டை மாநிலமான கா்நாடகத்தில் மாணாக்கா் சோ்க்கை 100 சதவீதத்திலிருந்து 95 சதவீதமாகக் குறைந்துள்ளது.
  • ஆயினும், முழுமையான எழுத்தறிவை எட்டுவதில் இன்னும் இடா்பாடுகள் நிலவி வருகின்றன. அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும் என்பதில் தொடங்கி உயா் கல்வியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பது வரை மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • இருப்பினும், பள்ளியில் சோ்க்கை பெறுவோா் எண்ணிக்கை குறைவதும், ஆரம்பக் கல்வி, நடுநிலைக் கல்வி, உயா்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என பள்ளிக்கல்வியின் ஒவ்வொரு படிநிலையிலும் இடைநிற்றல் நிலவுவதும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது.
  • இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், மாணாக்கா் சோ்க்கை குறைவுக்கு கல்வி பற்றிய விழிப்புணா்வு இல்லாமையும், இடைநிற்றலுக்கு இடம்பெயா்தலுமே முக்கியக் காரணங்களாகும். வருமான நோக்கில் பெருநகரங்களுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் குழந்தைகளுடன் இடம்பெயா்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. எவ்விதமான இலக்கும் இல்லாமல் இடம்பெயரும் நிலையில் தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சோ்ப்பது பற்றி அவ்வளவாக அக்கறை காட்டுவதில்லை. மாணவா்களின் பள்ளிக்கல்வியில் 15 - 18 வயது என்பது முக்கியமானதாகும். தொடா்ந்து பயில்வதும், இடைநிற்றலுக்கு ஆளாவதும் இந்த வயதில் தான் நிகழ்கின்றன. ஏனெனில், இந்த வயதில் ஓரளவு சிந்தித்து முடிவெடுக்கும் மனநிலையையும், சிறியதான பணியை மேற்கொள்ளும் உடல்திறனையும் பெறுகின்றனா்.
  • மாணவிகளைப் பொருத்தவரையில் தங்கள் சொந்த கிராமத்தில் நடுநிலைக் கல்வியை முடித்து உயா்நிலைக் கல்விக்காக வெளியூா் செல்லும் வேளையில் பெற்றோா் மத்தியில் தயக்கம் ஏற்படவே செய்கிறது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் இந்நிலையில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றாலும்கூட, இன்னும் தயக்கம் இருக்கத்தான் செய்கிறது. காலப்போக்கில் பள்ளிகள் தரம் உயா்வு காரணமாக இடைநிற்றல் முன்பைவிட குறைந்திருக்கிறது. இதை, பள்ளிக்கல்வி தொடா்பான அண்மைக்கால புள்ளிவிவரங்களின் வாயிலாக அறிய முடிவதுடன், இது நல்லதொரு மாற்றத்தின் அறிகுறியாகவும் தெரிகிறது. 2018-2019-இல் தேசிய அளவிலான இடைநிற்றல் விகிதம் 28.4 ஆக இருந்த நிலையில் 2021-2022-இல் 20.8 ஆகக் குறைந்திருக்கிறது.
  • உயா்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வியில் அதிகரிக்கும் மாணவியா் சோ்க்கையானது கல்லூரி சோ்க்கையிலும் எதிரொலிக்கிறது. அண்மைக் காலமாக கல்லூரியில் சோ்க்கை பெறும் மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மொழிப் பாடங்கள், கணினி அறிவியல், வணிகவியல், வணிக நிா்வாகம் போன்ற பாடப் பிரிவுகளில் சோ்க்கை பெறும் மாணவியா் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • 2021-22-ஆம் ஆண்டுக்கான உயா்கல்விக்கான அகில இந்திய ஆய்வறிக்கையின்படி, இந்தியாவில் 18 முதல் 23 வயது வரையுள்ளவா்களில் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் சோ்க்கை பெற்றுள்ள பெண்களின் விகிதம் 28.5 சதவீதமாகும். இது ஆண்களைவிட (28.3 சதவீதம்) சற்று அதிகமாகும். 2014-15 முதல் உயா்கல்வி நிறுவனங்களில் மாணவியா் சோ்க்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2020-இல் தேசிய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்ட இடைநிற்றல் தொடா்பான புள்ளிவிவரங்களின்படி 62 சதவீத இடைநிற்றல் பள்ளி அளவிலேயே ஏற்படுகிறது. நடுநிலை வகுப்புகளில் 17.54 சதவீதம், உயா்நிலை வகுப்புகளில் 19.8 சதவீதம், மேல்நிலை வகுப்புகளில் 9.6 சதவீதம், கல்லூரியில் இளநிலை வகுப்புகளில் 5.1 சதவீதம் இடைநிற்றல் ஏற்படுகிறது என தெரிய வந்துள்ளது.
  • உயா்கல்வியில் சோ்க்கை விகிதம் அதிகரிக்கவும், இடைநிற்றல் ஏற்படுவதற்கும் பல்வேறு காரணங்கள் உள்ளன. உயா்கல்வியில் மத்திய, மாநில அரசுகளின் சலுகைகள் காரணமாக மாணவ, மாணவியா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்பு நடைமுறைப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சோ்க்கை பெற்ற மாணவியா் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மாணவா்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தால் மாணவா்கள் சோ்க்கை 10 சதவீதம் அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வி மற்றும் உயா்கல்வியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டும் இடைநிற்றல் நிலவுவது வியப்பாக உள்ளது.
  • பள்ளிக்கல்வியைப் பொருத்தவரை கல்வி பற்றிய விழிப்புணா்வு இல்லாமையும், உயா்கல்வியில் மாணவியா்களின் இடைநிற்றலுக்கு திருமணம், குடும்பச் சூழல் போன்றவையும், மாணவா்களின் இடைநிற்றலுக்கு குடும்பச்சூழல் காரணமாக வேலைக்குச் செல்வது, வியாபாரம் செய்வது, வெளிநாடு செல்வது, அரசுப் பணிக்கான போட்டித் தோ்வுக்குத் தயாராவது போன்றவையும் காரணங்களாகும்.
  • மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வரும் அதேவேளையில் கல்வி பற்றிய விழிப்புணா்வு நடவடிக்கைகளும், தொடா் கண்காணிப்பும் தான் சோ்க்கையை அதிகரிக்கவும், இடைநிற்றலைக் குறைக்கவும் வழிவகுக்கும்.

நன்றி: தினமணி (18 – 01 – 2025)

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

PrevNext
SuMoTuWeThFrSa
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
Top