- அண்மையில் குடும்பத்துடன் கன்னியாகுமரிக்கு சுற்றுலா சென்றிருந்தோம். நெடுஞ்சாலையில் ஒரு பெரிய உணவகம் இருந்தது. அதன் வாயிலில் "இங்கு சுகாதாரமான கழிப்பறை வசதி உள்ளது' என்று ஒரு பலகையில் கொட்டை எழுத்தில் எழுதி வைத்திருந்தனர். அதைப் பார்த்துவிட்டு நாங்கள் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி உணவகத்தினுள் சென்றோம்.
- ஆனால், அறிவிப்புப் பலகையில் குறிப்பிடப்பட்டிருந்ததற்கு மாறாக இருந்தது. அங்கே நாங்கள் கண்ட காட்சி. உணவருந்தும் இடத்தை விஸ்தாரமாக அமைத்திருந்த அந்த உணவகம் கழிப்பறைகளை ஆணுக்கும் பெண்ணுக்குமாக இரண்டே இரண்டை அதிலும் மிக மிக சிறிய அளவு ஹாலின் ஒதுக்குப்புறமாக அமைத்திருந்தனர்.
- அந்த உணவகமோ மிக நவீனமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் கழிப்பறைக்குச் செல்லும் பாதையே கடினமானதாக, மிக நீண்டதாக, பூச்சிகள் தாக்குமோ என அச்சம் ஏற்படுத்துவதாக இருந்தது. ஒருவித பயத்துடன்தான் கழிப்பறைக்குச் செல்ல வேண்டியிருந்தது. வரிசையில் நின்று ஒரு வழியாக முன்னேறினாலும், கதவை முழுதாகத் திறக்க முடியாதபடி உள்ளே போட்டு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் இடித்தன.
- உள்ளேயோ மின்விளக்கு எரியவில்லை. ஜன்னல் வழியாக கசிந்த ஒளியால் கொஞ்சம் வெளிச்சம் வந்தது. கழிப்பறையில் இருந்த குழாய் அடைத்துக்கொண்டு தண்ணீர் மெலிதாக ஒழுகியது. ஒரு குவளை நீர் நிரம்பவே மூன்று நிமிடம் தேவைப்பட்டது. சரி, தப்பித்தோம் பிழைத்தோம் என கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தால் எதிரே இருக்கும் சுவரில் மோதிக்கொள்வோமோ என அச்சப்படும் அளவுக்கு மிகக் குறுகிய ஒத்தையடிப் பாதையிலான இணைப்பு நடைபாதை.
- தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்பார்களே அப்படி ஒரு நிகழ்வு. வெளியே வந்தவர்கள் அனைவரும் "இப்படிப்பட்ட கழிப்பறைக்கா அப்படி ஒரு அறிவிப்புப் பலகை வைத்தார்கள்' என்று கோபப்பட்டார்கள். ஒரு சிலர் அந்த உணவக மேலாளருடன் வாய் தகராறிலும் ஈடுபட்டனர்.
- வெளியிடங்களில் கழிப்பறைக்கு செல்ல வேண்டும் என நினைக்கும் போதே நம் நிம்மதி பறிபோகிறது. அதிலும், பெண்களின் நிலை மிகவும் கொடுமை. இப்போது ஓரளவு பரவாயில்லை, உணவகத்தின் பக்கவாட்டில் கழிப்பறைகளை அமைத்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்வரை "கழிப்பறை எங்கே உள்ளது' என்று நாம் கேட்டால், "நான்காவது மாடியில் மூன்றாவது அறைக்குப் பக்கத்தில் உள்ளது' என்று கூறுவார்கள்.
- அப்போதெல்லாம் மின்தூக்கியும் இருக்காது. நான்காவது மாடிக்கு ஏறி இறங்குவதற்குள் அந்த உணவகத்தில் சாப்பிட்டது முழுவதும் செரித்துப் போய்விடும். அதிக மக்கள் தங்கள் உணவகத்திற்கு வர வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்கான குறைந்தபட்ச வசதிகளைக்கூட செய்து கொடுக்கத் தயங்குவது முறையா?
- ஒரு மாதம் முன்பு நாங்கள் சிங்கப்பூர், மலேசியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தோம். அங்கெல்லாம் கழிப்பறை வசதி குறித்தோ அதன் சுகாதாரம் குறித்தோ நாங்கள் சிறிதும் அச்சப்படவில்லை. மலேசிய விமான நிலையத்தில் 300 அடிக்கு ஒரு கழிப்பறை இருந்தது. ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் பயன்படுத்த ஏதுவாக ஐந்து அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
- அது மட்டுமல்ல, கழிப்பறைகளுக்கு வெளியே விசாலமான ஒரு புழங்கிடமும் உள்ளது. கழிப்பறை ஒவ்வொன்றிலும் கை கழுவ, முகம் கழுவ என நல்ல தண்ணீர் வசதியுடன் கூடிய சிறிய தொட்டிகள் இருந்தன. மேற்கத்திய நாடுகளில் குறிப்பிடும் "ரெஸ்ட் ரூம்' என்ற வார்த்தைக்கு உண்மையான பொருள் அங்கு சென்று வந்த பிறகுதான் எனக்குப் புரிந்தது. தேவைப்பட்டால் அங்கு சற்று நேரம் ஓய்வு எடுத்து விட்டு கூட வரலாம் என்று கூறும்படி அவை இருந்தன.
- அதே "ரெஸ்ட் ரூம்' என்ற வார்த்தையை நம் நாட்டில் பயன்படுத்தும் போது அர்த்தம் வேறுபட்டு சிரிப்பு வருகிறது. "ஷல் ஐ கோ டு ரெஸ்ட் ரூம் மேம்' என்று என்னிடம் கழிப்பறைக்குச் செல்ல அனுமதி கேட்கும் மாணவியிடம் அதை "வாஷ் ரூம்' என சொல்ல வேண்டும்' என்று திருத்தி இருக்கிறேன். இடத்திற்கு தகுந்தாற்போல் சொல்லாடல் இருக்க வேண்டும் அல்லவா?
- மேலும், மேற்கத்திய நாடுகளில் கழிப்பறை வசதி என்பது பெரும்பாலும் இலவசம். இங்கே பணம் செலுத்தி பயன்படுத்தினாலும் குறைந்தபட்ச வசதியைக்கூட எதிர்பார்க்க முடியவில்லை. கழிப்பறையில் பயன்படுத்தும் பொருட்கள் நம் சகிப்புத்தன்மைக்கு சவால் விடும் வகையில் உள்ளன. வாளி இருந்தால் குவளை இருப்பதில்லை, தண்ணீர் வந்தால் அழுத்தும் பொத்தான் இருப்பதில்லை, கதவு இருந்தால் தாழ்ப்பாள் இருப்பதில்லை, அவ்வளவு ஏன் காற்று வசதி என்று சொல்லி பல இடங்களில் மேற்கூரைகூட இருப்பதில்லை.
- சில இடங்களில் ஆண்கள், பெண்களுக்கென்று தனியாக இருக்கும் கழிப்பறைகளுக்குச் செல்லும் பாதை ஒன்றாக இருக்கும். ஆண்கள் கழிப்பறையிலிருந்து பார்த்தால் பெண்கள் கழிப்பறையின் வெளிப்புறம் தெரியும். அங்கே ஒரு தடுப்போ மறைப்போ இருக்காது. பெண்கள் வெளியே வந்து உடையை சரி செய்து கொள்ள தர்மசங்கடமாய் இருக்கும்.
- கட்டண கழிப்பிட வசதிகள் இருந்தாலும் காசு கொடுத்து கழிப்பறைக்கு செல்ல வேண்டுமா என எண்ணி, பொதுவெளியையே கழிப்பிடமாகப் பயன்படுத்துபவர்களும் இருக்கிறார்கள். கழிப்பறைக்குச் செல்வதோ அதை பற்றி பேசுவதோ அருவருக்கத்தக்க செயல் அல்ல. அதன் சுத்தம், சுகாதாரம் சார்ந்து, அறையின் அளவு குறித்து, பயன்பாடு பற்றி விழிப்புணர்வு இல்லாது இருப்பதுதான் வெட்கப்பட வேண்டியது. அதை முதலில் களைவோம்.
- மேலைநாடுகளில் கழிப்பறை பயன்பாடு இலவசம் என்று சொல்லும் அதே வேளையில், நம் நாட்டு மக்களின் மனநிலையை பற்றியும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். குறைந்தபட்ச பொறுப்புணர்வு கூட இல்லாமல் நடந்து கொள்கின்றனர்.
- ஆங்காங்கே குப்பைக் கூடைகளை வைத்திருந்தாலும் அதை திறந்து குப்பைகளைப் போட சோம்பேறித்தனம்! இருந்த இடத்திலிருந்து வீசி எறிந்து விட்டுச் செல்கிறார்கள். தனிமனித ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. இது என்ன நம் வீடா, குப்பையை எங்கே போட்டு விட்டுப் போனால் என்ன என்று நினைக்கிறார்கள்.
- இந்த மோசமான செயல்முறைகளால்தான் அங்கே கூடுதலாக உழைக்க ஒரு நபர் தேவைப்படுகிறார். புகழ் பெற்ற வழிபாட்டுத் தலங்களிலும் சுற்றுலாத் தலங்களிலும் கழிப்பறை வசதிகளை அதிகப்படுத்தினால் நன்றாக இருக்கும். வயதானவர்களும் நடக்க சிரமப்படுபவர்களும் பயன் பெறுவர்.
- ஆதிகாலத்தில் இருந்த திறந்தவெளி கழிப்பறையை நவீனம் ஆக்குவதற்கு பலரும் சிந்தித்து இருக்கிறார்கள். துருக்கி நாட்டைச் சேர்ந்த முஸல்மான்தான் கி.பி.1100- ஆம் ஆண்டு இறுதியில் இதற்கு ஒரு இறுதி வடிவம் கொடுத்தார். அவரின் புத்தகமான "தி புக் ஆப் இன்ஜினியஸ் மெக்கானிக்கல் டிவைசஸ்' மிகவும் புகழ்பெற்றது. அவர் கண்டுபிடித்த 100-க்கும் மேற்பட்ட இயந்திர சாதனங்களில் ஒன்றுதான் "பிளஷ் டாய்லெட்'.
- தண்ணீரின் அழுத்தத்தால் சுத்தமாகும் கழிப்பறை எப்போதோ கண்டுபிடிக்கப்பட்டாலும் முழுமையாக அது நடைமுறைக்கு வர கிட்டத்தட்ட 500 வருடம் தேவைப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் கி.பி.1800-க்கு பிறகுதான் அது பரவலாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
- நம் நாட்டு பொது இடங்களில் எல்லாம் தற்போது அதிக அளவில் மேற்கத்திய கழிப்பறை சாதனங்களையே நிறுவுகின்றனர். இதனைப் பராமரிப்பது சிரமம்; தண்ணீர் செலவும் அதிகம். நம் மரபு வழி கழிப்பறை சாதனங்களை சுத்தப்படுத்துவதும் பராமரிப்பதும் எளிது. பொது இடங்களில் புதிதாக கழிப்பறை வசதி ஏற்படுத்தும் போது இரண்டுக்கும் சமமாக ஒதுக்கீடு இருக்க வேண்டும் என்பதுதான் அனைவர் எதிர்பார்ப்பும்.
- கழிப்பறை என்பது இன்று நேற்றல்ல. பழந்தமிழர்கள் கூட நனி நாகரிகம் உடையவர்களாக இருந்தனர் என்பதற்கு பல இலக்கிய பதிவுகள் உள்ளன. மணிமேகலை தன் தாயாகிய மாதவியையும் தோழியாகிய சுதமதியையும் ஆசிரியராகிய அறவண அடிகளையும் காண கச்சி மாநகர் புகுந்து நடக்கின்றாள். அவள் செல்லும் வழி எப்படி இருந்தது என சொல்லும் பாடல் இது –
சுருங்கை தூம்பின் மனைவளர் தோகையர்
கருங்குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியல் இளைஞரும் மகளிரும்
தந்தமில் ஆடிய சாந்துகழி நீரும்
- நீர் மறைவாக செல்லும் வகையிலான அமைப்பு அக்கால நகரங்களில் இருந்தமையை இப்பாடல் மூலம் அறிந்து கொள்கிறோம். அது மட்டுமல்ல, கல்லால் அடைக்கப்பட்ட இது போன்ற வழிகள் இருந்தமையை "பாருடைத்த குண்டக்கழி' (புறம். 14. 5) "கல்லகழ் கிடங்கு' (மலை. 91) "கல்லிடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கு' (மதுரை 730) போன்ற தொடர்களும் நமக்கு எடுத்துச் சொல்கின்றன.
- சமூக ஆர்வலர் டாக்டர் பிந்தேஸ்வர் பதக் என்பவர் 1992-ஆம் ஆண்டு தில்லியில் "சுலப்' சர்வதேச கழிப்பறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார். சுகாதார வரலாற்றுக்கு அர்ப்பணிக்கப் பட்ட இந்த அருங்காட்சியகம் கி.மு. 3000 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரை கழிப்பறையின் பரிணாம வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
- சமீப காலங்களில் தானியங்கி கழிப்பறைகளின் வரவு அதிகரித்திருப்பதும் ஆரோக்கியமானது. இவற்றை பொது இடங்களில் மக்கள் பயன்பாட்டுக்காக அதிகமாக நிறுவினால் பெரும் வரவேற்பு கிட்டும். பெட்ரோல் நிலையங்களில் இருக்கும் கழிப்பறைகளை வாடிக்கையாளர்கள் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற விதியே இருக்கிறது. இது பலருக்கும் தெரிவதில்லை. அதையும் பரவலாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
- இன்று கழிப்பறை சுத்தப்படுத்தும் தொழில் பெருநிறுவனங்களின் கைகளுக்குள் சென்று கொண்டிருக்கிறது. அது மிக மிக லாபம் தரக்கூடிய தொழிலாக தற்போது மாறி வருகிறது. இன்று பெரும்பாலான வீடுகளில் மக்கள் தாங்களே தங்கள் வீட்டு கழிப்பறைகளை சுத்தம் செய்து கொள்கிறார்கள். வீடுகளில் வரவேற்பறைக்கும் படுக்கை அறைக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை கழிப்பறைக்கும் கொடுக்கும்போது அனைவரின் மன ஆரோக்கியமும் உடல் ஆரோக்கியமும் மேம்படும் என்து உறுதி.
நன்றி: தினமணி (09 – 08 – 2023)