TNPSC Thervupettagam

கழிவுகளாலும் பரவும் கொவைட் 19!

August 4 , 2020 1631 days 1209 0
  • கொவைட் 19 கொள்ளை நோய்க்கு எதிராக மனித இனம் மேற்கொள்ளும் யுத்தத்தில், எந்த ஒரு பலவீனமும் மிகப்பெரிய பாதிப்பாக மாறிவிடக் கூடும்.
  • இன்னும்கூட ஒருபுறம், என்னவென்று தெரியாத, உறுதியான சிகிச்சை இல்லாத நிலைமை நோய்த்தொற்றைப் பரப்பிக்கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், மருத்துவர்களின் சமயோசிதமும் தீநுண்மியை எதிர்கொள்ளும் அனுபவமும் உயிரிழப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் குணமடைந்து வருகிறார்கள் என்பது ஆறுதல்.
  • அரசும், சுகாதார நிறுவனங்களும், தன்னார்வத் தொண்டர்களும் நோய்த்தொற்றைத் தடுப்பதற்கான நிலை குறித்து மக்கள் மத்தியில் புரிதல் ஏற்படுத்துவதில் முனைப்புக் காட்டி வருகின்றனர்.
  • மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு உடை, பொதுமக்கள் முகக் கவசம் அணிதல், தூய்மையைப் பேணுதல் போன்றவை பெருமளவில் உதவுகின்றன.
  • இவ்வளவெல்லாம் இருந்தாலும் இன்னும் முக்கியமான ஒரு பிரச்னையில் நாம் போதிய கவனம் செலுத்தவில்லை என்கிற உண்மையை சொல்லாமல் இருக்க முடியவில்லை.
  • மருத்துவக் கழிவுகளைப் பாதுகாப்பாக அகற்றுவதும் அழிப்பதும் முழுக்கவனத்தைப் பெறவில்லை என்பதை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மருத்துவக் கழிவுகளின் அபாயம்

  • மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கொன்று தொடரப்பட்டிருக்கிறது.
  • மருத்துவர்களும் சுகாதாரப் பணியாளர்களும் பயன்படுத்திய ஏராளமான பாதுபாப்பு உடைகள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும் பொதுக் கழிவுகளுடன் அவை அகற்றப்படுகின்றன என்றும் அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • பொதுக் கழிவுகளைக் கொட்டும் இடங்களில் கொவைட் 19 தொடர்பான மருத்துவக் கழிவுகளும் முகக் கவசங்களும் பாதுகாப்பு உடைகளும் கொட்டப்படுகின்றன என்று அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதில் உண்மை இல்லாமல் இல்லை.
  • ஆபத்தான மருத்துவக் கழிவுகளை முறையாகக் கையாளவில்லை என்கிற குற்றச்சாட்டு இந்தியா முழுவதிலுமிருந்தும் குவிந்துக் கொண்டிருக்கிறது.
  • குஜராத்தில் மட்டும் நாளொன்றுக்கு 11.7 மெட்ரிக் டன் மருத்துவக் கழிவுகள் கொவைட் 19 பாதிப்புக்குப் பிறகு உருவாகின்றன. மகாராஷ்டிரத்துக்கு அடுத்தபடியாக குஜராத் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
  • மும்பையில் மட்டும் 107 மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களில் 27 பேர் மருத்துவக் கழிவுகளை சேகரிக்கும் பணியில் தங்களது இன்னுயிரை இழந்திருக்கிறார்கள். ஏனைய மாகராட்சிகளிலும் சுகாதாரப் பணி ஊழியர்கள் மிகுந்த ஆபத்துக்கிடையில்தான் பணியாற்றுகிறார்கள்.
  • சுகாதாரப் பணி ஊழியர்களின் உயிரிழப்பு கவலையளிப்பதைப் போலவே, தெருக்களில் குப்பை சேகரிப்பவர்களை நோய்த்தொற்று பாதிக்காமல் பாதுகாப்பதும் மிகமிக அவசியமாகிறது.
  • அதுமட்டுமல்ல, அவர்கள் நோய்த்தொற்றுப் பரவலுக்கு ஆளாகிவிடக்க கூடாது என்கிற அச்சம் நிலவுவதால், முறையான பரிசோதனைகளும் அவர்களுக்கான பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
  • இப்போதிருக்கும் கழிவுகள் மேலாண்மைக்கான கட்டமைப்பு வசதிகள் போதுமானவையல்ல என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.
  • நகராட்சிகளிலும் ஊராட்சிகளிலும் சேரும் குப்பைகளை அகற்றுவதும் ஊருக்கு வெளியில் கொண்டுபோய்க் கொட்டுவதும் சுற்றுச்சூழல் பாதிக்காமல் பாதுகாப்பதும் ஏற்கெனவே மிகப் பெரிய சவாலாக இருக்கும் நிலையில், கொவைட் 19 நோய்த்தொற்றுக்குப் பிறகு மருத்துவமனைகளில் உருவாகும் மருத்துவக் கழிவுகளை கையாள்வதில் குறைகள் காணப்படுவது எதிர்பார்த்ததுதான்.
  • சாதாரண குப்பைகளையும் மருத்துவக் கழிவுகளையும் பிரிப்பது, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படாமல் எரிப்பது, ஊருக்கு வெளியே மனித நடமாட்டம் இல்லாத இடங்களில் பாதுகாப்பாகக் கொட்டி அழிப்பது உள்ளிட்ட பணிகளுக்காக கூடுதல் நிதி உடனடியாக ஒதுக்கப்பட வேண்டும்.
  • மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்குத் தனியாக வாகனங்கள் ஒதுக்கப்படுவதும், அவற்றின் மூலம் அவை எடுத்துச் செல்லப்படுவதும் மிகமிக அத்தியாவசியம்.
  • மகாராஷ்டிரம், குஜராத் போலவே ஒடிஸாவும், தமிழ்நாடும் அதிகரித்த மருத்துவக் கழிவுகளைக் கையாள்வதில் போராடிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் மருத்துவக் கழிவுகள் மேலாண்மை விதிகள் 2016 - சில வழிமுறைகளை வகுத்திருக்கிறது.
  • மருத்துவக் கழிவுகள் 48 மணி நேரத்தில் கழிவுகள் கையாளும் மையத்தில் சேர்க்கப்பட வேண்டும். 75 கி.மீ. சுற்றளவில் உள்ள மருத்துவமனைகள் அந்த மையத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த விதிகள் கடைப்பிடிக்கப்படுவதைவிட மீறப்படுவதுதான் அதிகம்.
  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் எச்சரிக்கைகள் பெரும்பாலும் மீறப்படுகின்றன. சமீபத்தில்கூட கிரிக்கெட் மைதானத்தில் கழிவுகளைக் கொட்டியதற்காக மருந்துத் தயாரிப்பு நிறுவனம் ஒன்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
  • இந்தப் பிரச்னையில் மாநில மருந்துகள் கண்காணிப்புத் துறையும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம். ஏரிக்கரைகளிலும் மனித நடமாட்டமில்லாத கடற்கரை ஓரங்களிலும் மருத்துவக் கழிவுகள் விதிகளை மீறி கொட்டப்படுகின்றன.
  • இவற்றையெல்லாம் முறைப்படுத்தவும், கட்டுப்படுத்தவும் தேவையான சட்டங்களை மாநில அரசுகள் உடனடியாக பிறப்பித்து கண்காணிக்காமல் போனால், நோய்த்தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது என்பது கானல்நீராகத்தான் இருக்கும்.
  • சர்வதேச அளவில் கொவைட் 19 பரவலைத் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் மிகப் பெரிய சுற்றுச்சூழல் அபாயமாக உருவாகும் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது. நாமும் விழித்துக்கொண்டாக வேண்டும்!

நன்றி: தினமணி (04-08-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories