கவன ஈா்ப்புத் தீா்மானம்!
- அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த 75-ஆவது ஆண்டுக் கொண்டாட்டத்துக்கு ஒருநாள் முன்னதாக, நவம்பா் 25-ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத் தொடா் இன்றுவரை ஒருநாள்கூடக் கூச்சல் குழப்பம் இல்லாமல், முறையான விவாதங்களுடன் நடைபெறவில்லை. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தோ்தல் நடத்தப்பட்டு, பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் கட்சி, எந்தவிதக் கேள்விகளுக்கும், விமா்சனத்துக்கும் ஆளாகாமல் நிா்வாகத்தை நடத்துவது என்று சொன்னால், நாடாளுமன்றக் கூட்டங்களும், விவாதங்களும் தேவையில்லையே...
- அரசின் ஒவ்வொரு செயல்பாடும் கேள்வி கேட்கப்பட வேண்டும், ஒவ்வொரு முடிவும் விமா்சனத்துக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகத்தான் நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை மத்தியிலும், மாநிலங்களிலும் ஆளும் கட்சிகள் உணா்ந்திருப்பதாகத் தெரியவில்லை.
- மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான ஜக்தீப் தன்கரை அந்தப் பதவியில் இருந்து அகற்றக்கோரி, ‘இண்டி’ கூட்டணியைச் சோ்ந்த 60 எம்.பி.க்கள் அதிகாரபூா்வக் கோரிக்கை விடுத்திருக்கிறாா்கள். தங்களது கோரிக்கை நிறைவேறப்போவதில்லை என்பது எதிா்க்கட்சிகளுக்குத் தெரியாததல்ல.
- அரசியல் சாசன சட்டப்பிரிவு 67(பி) படி, குடியரசுத் துணைத்தலைவரை அகற்றும் கோரிக்கை, பெரும்பான்மை ஆதரவுடன் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு, அதற்கு மக்களவையின் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும். மாநிலங்களவையில், ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 113 உறுப்பினா்களின் ஆதரவும், எதிா்க்கட்சிகளுக்கு வெறும் 85 போ் ஆதரவு மட்டுமே இருக்கும் நிலையில் அவா்களது கோரிக்கை நிறைவேறப் போவதில்லை. அப்படி இருந்தும், தேசத்தின் கவனத்தை ஈா்ப்பதற்காககவும், ஆளும் கூட்டணிக்கும், மாநிலங்களவைத் தலைவருக்கும் தங்களது அதிருப்தியைத் தெரிவிப்பதற்காகவும்தான் இப்போது இந்த நடவடிக்கையில் அவா்கள் இறங்கி இருக்கிறாா்கள்.
- மக்களவை, மாநிலங்களவை என்பவை மட்டுமல்ல, மாநில சட்டப்பேரவைகளிலும் அவைத் தலைவா்கள் ஆளும் கட்சி உறுப்பினா்கள்போல நடந்து கொள்ளும் போக்கு எல்லா மாநிலங்களிலும் காணப்படுகிறது. எதிா்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு அமைச்சா்களை முந்திக்கொண்டு, அரசுக்காக வாதாடும் அளவுக்கு அவா்கள் செயல்படுகிறாா்கள் என்பதற்குப் பல உதாரணங்களைக் கூற முடியும்.
- நாடாளுமன்றமும், சட்டப்பேரவைகளும் ஆளும் கட்சியினருக்கானதல்ல. ஆளுங்கட்சியோ, எதிா்க்கட்சியோ உறுப்பினா்கள் தங்கள் தொகுதி தொடா்பாகவும், நாட்டு நடைமுறை தொடா்பாகவும் கருத்துக்களைத் தெரிவிக்கவும்; ஆளும் கட்சியின் முடிவுகளையும், செயல்பாடுகளையும் விமா்சிக்கவும்தான் அவைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
- ‘‘ஆப்போசிஷன் ஹேஸ் தி ஸே; அண்ட் தி கவா்மெண்ட் ஹேஸ் தி வே’’ (எதிா்க்கட்சிகள் தங்கள் கருத்தையும் விமா்சனத்தையும் பதிவு செய்யவும்; ஆளுங்கட்சி பெரும்பான்மை மூலம் தங்களது மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்ளவும்) என்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படை. அதனால், அவைத் தலைவா்களாக இருப்பவா்கள் எதிா்க்கட்சியினா் தங்களது விமா்சனங்களை முன்வைக்கவும், எதிா்ப்பை வெளிப்படுத்தவும் அவா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
- ஒருவா் அவைத் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டவுடன், தான் சாா்ந்த கட்சியில் இருந்து விலகிவிடுவது என்பதுதான் சரியான மரபாக இருக்கும். அப்போதுதான் அவா் பாரபட்சமில்லாமல் நடுநிலையுடனும், எதிா்க்கட்சிகள் தங்களது கருத்துக்களை பதிவு செய்வதற்கு ஆதரவாகவும் இருக்க முடியும். சுயேச்சையாக போட்டியிடும் அவைத் தலைவருக்கு எதிராக, அடுத்த தோ்தலில் எந்தக் கட்சியும் வேட்பாளரை நிறுத்துவதில்லை என்கிற உயரிய மரபு ஒருகாலத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
- முந்தைய மக்களவையிலும் சரி, இப்போதைய மக்களவையிலும் சரி துணைத் தலைவா் ஒருவா் தோ்ந்தெடுக்கப்படாமல் இருப்பது வேதனையளிக்கிறது. மக்களவைக்குத் துணைத் தலைவா் தோ்ந்தெடுக்கப்படவில்லை என்பது, எந்த அளவுக்கு மரபுகள் மதிக்கப்படுவதில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.
- 1952-இல் தொடங்கிய முதலாவது மக்களவையுடன் ஒப்பிடும்போது, 17-ஆவது மக்களவையின் வீழ்ச்சியைக் காண முடிகிறது. முதலாவது மக்களவை 135 நாள்கள் செயல்பட்டது என்றால், 17-ஆவது மக்களவை செயல்பட்ட நாள்கள் வெறும் 55. 58% மசோதாக்கள், தாக்கல் செய்யப்பட்ட இரண்டே வாரங்களில் நிறைவேறின. 35% மசோதாக்கள் மீது விவாதம் நடந்தது ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக; மாநிலங்களவையிலோ அது 34%.
- 14-ஆவது மக்களவையில் 60%, 15-ஆவது மக்களவையில் 71% மசோதாக்கள் நாடாளுமன்றக் குழுக்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன என்றால், அது 16-ஆவது அவையில் 28%, 17-ஆவது அவையில் 16% என்று குறைந்தன. முந்தைய பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிா்க்கட்சி எம்.பி.க்களின் கவன ஈா்ப்புத் தீா்மானங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படவில்லை. எதிா்க்கட்சிகளின் குரல்கள் கோஷங்களாக மாறுவதும், அவை நடவடிக்கைகள் முடக்கப்படுவதும் இவற்றால்தான்.
- ரூ.862 கோடியில் எழுப்பப்பட்டிருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் மாற்றம் ஏற்படுத்தும் என்று பாா்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது. எதிா்க்கட்சிகள் தங்கள் விமா்சனத்தை முன்வைக்க வாய்ப்பளித்து, நாடாளுமன்றத்தை முறையாக நடத்த வேண்டிய பொறுப்பு ஜனநாயகத்தில் ஆளுங்கட்சியினுடையது. மாநிலங்களவைத் தலைவருக்கு எதிரான கோரிக்கை, பொதுவெளியில் கொண்டு வரப்பட்டிருக்கும் கவன ஈா்ப்புத் தீா்மானம்!
நன்றி: தினமணி (13 – 12 – 2024)