TNPSC Thervupettagam

கவனம், இது விரிந்த இதயம்

September 21 , 2024 117 days 120 0

கவனம், இது விரிந்த இதயம்

  • இதயம், நம் உடல் முழுக்க ரத்தத்தை விநியோகிக்கும் ஓர் உயிர் இயந்திரம். நாம் உறங்கினாலும் விழித்திருந்தாலும் இடைவிடாது இயங்கும் ஓர் ஆச்சரிய உடலுறுப்பு இதயம் மட்டுமே.
  • லப்..டப்..லப்..டப்… இது இதயத் துடிப்பின் அற்புத ஒலி. இதயம் தினமும் ஒரு லட்சம் முறை துடித்து, பம்ப் செய்து 7,000 லிட்டர் ரத்தத்தை உடலுக்குள் அனுப்பிவைக்கிறது. இந்த ரத்தம் பயணம் செய்யும் ரத்தக் குழாய்களின் மொத்த நீளம் சுமார் ஒரு லட்சம் கிலோ மீட்டர்.
  • இது சென்னையில் இருந்து நியூயார்க் போகும் தொலைவின் எட்டு மடங்கு. இந்தத் தொலைவைக் கடக்க ரத்தம் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒரே ஒரு நிமிடம்தான். இதயம் செய்யும் இந்த மகத்தான பணியால்தான் நாம் உயிர் வாழ்கிறோம். அப்படி நம் உயிர் காக்கும் இதயத்தை நாம் எப்படிப் பாதுகாக்கிறோம்?
  • சாலையில் ஓடும் காருக்கு முறையாக சர்வீஸ் செய்கிறோம்; காப்பீடு செலுத்துகிறோம். வாகனங் களின் தகுதி குறித்துக் கவலைப்படும் நாம், நம் இதயத்தின் தகுதி (Fitness) குறித்து அக்கறை காட்டுகிறோமா?
  • ‘இந்தியாவில் வசிப்பவர்களில் பாதிப் பேர்தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை இல்லாமலும் உடல் தகுதி இல்லாமலும் இருக்கிறார்கள் என்று ‘லான்செட்’ எனும் பிரபல மருத்துவ ஆய்விதழ் ஓர் அதிர்ச்சித் தகவலைத் தந்திருக்கிறது. ஆகவேதான், இந்த விழிப்புணர்வுத் தொடர்.
  • இதய ஆரோக் கியம் பேணுவதற்கான அவ்வளவு விஷயங்களையும் அலசப் போகும் தொடர். இதயம் காக்க உங்களுக்கு உதவப் போகும் ஆரோக்கியத் தொடர். செப்டம்பர் 29இல் ‘உலக இதய நல நாள்’ கொண்டாடப்பட இருக்கும் வேளையில் இந்தத் தொடரைத் தொடங்குவது பொருத்தமாகவும் இருக்கும்.

துன்பப்படும் இள வயது இதயம்:

  • தற்போதைய மோசமான வாழ்க்கை முறை காரணமாகத் தொற்றாநோய்களின் நோய்ச் சுமை நாட்டில் அதிகரித்துவருகிறது. முக்கியமாக, இதய நோய் வந்து இளம் வயதிலேயே அகால மரணம் அடைவோர் இப்போது அதிகரித்து வருகின்றனர்.
  • வருடந்தோறும் இளம் வயதில் இதய நோய் ஏற்படுவோரின் எண்ணிக்கை இரண்டு சதவீதம் அதிகரித்து வருவதாக உலகச் சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. வாழ வேண்டிய வயதில் மரணம் அடைவதை யாரால் ஏற்றுக்கொள்ள முடியும்? மானுட வாழ்வில் இந்த அகால மரணம் தரும் வலியைவிட வேறு பெரிய வலி இல்லை.

நாற்பதில் செயலிழந்த இதயம்:

  • சமீபத்தில் நிகழ்ந்த நிகழ்வு இது. அவர் 40 வயதான தொழிலதிபர். அன்றைய தினம் வீட்டில் கழிப் பறைக்குச் சென்றபோது, திடீரென்று நெஞ்சுவலி வந்து மயங்கிவிட்டார். அருகில் இருந்த மருத்துவமனையின் அவசரப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ‘இசிஜி’ எடுக்கப்பட்டது. இதயத் துடிப்பில் குறைபாடு இருப்பதாக மருத்துவர் சொன்னதும், அவசரமாக அவருக்கு ‘எக்கோ’ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
  • அவரது இதயத்தின் தசைகள் ஒல்லியாகி, விரிந்து இருப்பது அதில் தெரிந்தது. உடலுக்கு ரத்தம் செலுத்த அவை சிரமப்பட்டதால் அவருக்கு ‘இதயச் செயலிழப்பு’ (Heart Failure) ஏற்பட்டிருப்பது புரிந்தது. இதுதான் அவரை மரணத்தின் வாசலுக்குக் கொண்டுசென்றுள்ளது. மூன்று மாத மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, ‘பேஸ்மேக்கர்’ (CRT-D) பொருத்தப்பட்டது. இப்போது அவர் தினமும் பூப்பந்து ஆடும் அளவுக்கு மீண்டுவிட்டார்.
  • இதை இங்கு சொல்வதற்குக் காரணம், அந்தத் தொழிலதிபருக்கு ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, கொலஸ்டிரால் என இதயத்துக்கு மோசம் செய்யும் பிரச்சினைகள் எதுவுமில்லை. அவர் வாழ்நாளில் புகைபிடித்ததில்லை; மது அருந்திய தில்லை. சோம்பேறி வாழ்க்கைமுறை இல்லை. எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குபவர். அவருக்கு ஏன் இதய நோய் வந்தது?

நோயைக் கடத்தும் மரபு:

  • காரணம், மரபுக் கோளாறு! ‘டிடிஎன்’ (TTN) என்னும் மரபணு, தன்னமைப்பில் மாற்றம் அடையும்போது, தசையை வளர்க்கும் ‘டைட்டின்’ (Titin) என்னும் புரதமும் மாறிவிடுகிறது. பாதை மாறினால் பயணமும் மாறுகிறது அல்லவா? அதுபோன்றுதான் புரதம் மாறினால் இதயமும் மாறிவிடுகிறது; பழசாகிப்போன சல்லடைபோன்று விசாலமாகிவிடுகிறது. அப்போது இயல்பாகத் துடிப்பதற்கு அது சிரமப் படுகிறது. ‘விரிந்த இதயத் தசைநோய்’ (Dilated Cardiomyopathy - DCM) எனப்படும் இந்தக் கோளாறு திடீர் மரணத்தை வரவேற்கிறது.

சரி, இந்தக் கோளாறு வெளியில் தெரியாதா?

  • தெரியும். அதை உணராதவர்களே அதிகம். உதாரணமாக, நாம் பார்த்த தொழிலதிபரின் பெற்றோர் இருவரும் இதய நோயால்தான் இறந்திருக்கின்றனர். வம்சாவளியில் அவருக்கும் இதய நோய் ஏற்படலாம் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அதுமட்டுமல்ல, இருமுறை மாடிப்படிகளில் ஏறும்போது உடல் வியர்த்து, படபடப்பு வந்து சுவாசிக்கச் சிரமப்பட்டிருக்கிறார்.
  • இரவுகளில் படுக்க விடாமல் இருமல் படுத்தியிருக்கிறது. மூச்சிளைப்பு வந்து உறக்கம் குறைந்த இரவுகளைக் கடந்திருக்கிறார். அவை எல்லாமே இதய நோய் எழுப்பும் அலாரங்கள் என அவருக்குத் தெரிந்திருக்கவில்லை. தொழில் மேலிருந்த கவனத்தில் தன்னைக் கவனிக்கவில்லை. ஆனாலும், தடுக்கி விழும் முன்னர் அடுத்தவர் கையைப் பிடித்துக்கொண்ட மாதிரி சரியான நேரத்தில் அதைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றதால் அவர் உயிர் பிழைத்தார்.
  • இதய நோய்க்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் மரபுத் தன்மைக்கு முக்கிய இடம் இருக்கிறது. மழைக்காலத்தில் குடையை எடுத்துச்செல்ல மறந்துவிடுகிற மாதிரி அநேகரும் அதை மறந்துவிடுகிறார்கள். அதனால்தான், கண்டிப்பாகத் தெரிந் திருக்க வேண்டிய அந்த விஷயத்தை முதலில் இங்கு பதிவு செய்கிறேன். மாரடைப்புதான் என்றல்ல, இதயச் செயலிழப்பும் திடீர் உயிரிழப்புக்கு வழி சொல்லும் என்பதை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories