- மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு, இந்தியாவின் நிதியமைச்சராக இருந்தவர்களில் தொடர்ந்து ஆறு தடவை பட்ஜெட் தாக்கல் செய்த பெருமைக்கு உரியவராகிறார் இன்று இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கும் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் இதுவரையில் இருந்த 39 நிதியமைச்சர்களில் நிர்மலா சீதாராமனையும் சேர்த்து ஆறு பேர் மட்டுமே தொடர்ந்து ஐந்து முழுமையான பட்ஜெட்டுகளை தாக்கல் செய்திருக்கிறார்கள். நிதியமைச்சர்களாக இருந்த பெண்மணிகள் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியும், இன்றைய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மட்டுமே.
- தமிழகம்தான் மிக அதிகமாக நிதியமைச்சர்களை இந்தியாவுக்குத் தந்திருக்கிறது. இந்தியாவின் முதலாவது நிதியமைச்சராக இருந்த ஆர்.கே.ஷண்முகம் செட்டி, டி.டி.கிருஷ்ணமாச்சாரி, சி.சுப்பிரமணியம், ஆர்.வெங்கட்ராமன், ப.சிதம்பரம் ஆகியோர் வரிசையில் நிர்மலா சீதாராமனும் இணைகிறார். அவருக்கு நமது பாராட்டுகள்.
- தேர்தலுக்கு முன்னால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் என்பதால், பெரிய அளவில் கொள்கை முடிவுகளை அறிவிக்க இயலாது. அடுத்து அமைய இருக்கும் ஆட்சிக்கு கொள்கை முடிவுகளை ஒப்படைத்துவிட்டு, இடைப்பட்ட மூன்று நான்கு மாதங்களுக்கான செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவதுதான் இடைக்கால பட்ஜெட்டின் நோக்கம்.
- அதேநேரத்தில், வாக்கெடுப்புக்கு முன்னர் கிடைக்கும் கடைசி வாய்ப்பை நழுவவிட எந்த அரசும் விரும்பாது. வாக்காளர்களைக் கவர்வதற்கும், அதிருப்திகளை அகற்றுவதற்கும் இடைக்கால பட்ஜெட்டை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தும் நிதியமைச்சர்களும் உண்டு.
- தாக்கல் செய்ய இருக்கும் இடைக்கால பட்ஜெட் இளைஞர்கள், மகளிர், விவசாயிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் ஆகியோரின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் என்று தெரிவித்திருக்கிறார் நிதியமைச்சர். சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தனது அரசில் சிறப்பு கவனம் பெறுபவர்கள் என்று அந்த நான்கு பிரிவினரையும் குறிப்பிட்டிருந்த நிலையில், அதையே தனது இடைக்கால பட்ஜெட்டின் இலக்காக நிதியமைச்சர் நிர்ணயித்திருக்கிறார் என்று கருத இடமிருக்கிறது.
- பிரதமர் நரேந்திர மோடியும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் அடையாளம் காணும் நான்கு பிரிவினருமே, இன்றைய சூழலில் மிகவும் முக்கியமானவர்கள். வேலையில்லாத் திண்டாட்டமும், விலைவாசியும் அதிகரித்துவரும் நிலையில் இளைஞர்கள் குறித்து அரசு கவனம் செலுத்துவது சரியான முடிவு. திறன்சார் பயிற்சி மூலம் அவர்கள் சுய வேலைவாய்ப்புப் பெறவும், நிறுவனங்களின் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடியும்.
- விவசாயிகள் குறித்த அரசின் கவலை நியாயமானது. அதேநேரத்தில், வேளாண் சட்டங்கள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கலந்தாலோசனைகள் மூலம் மீண்டும் அமலாக்கப்படாமல் விவசாயிகளின் வாழ்க்கை மேம்படுவது சாத்தியமில்லை. அதிகரித்துவரும் மக்கள்தொகையின் வேலைவாய்ப்புத் தேவைக்கு இப்போதைய விவசாய முறையால் ஈடுகொடுக்க முடியாது. குறு, சிறுவிவசாய நிலங்கள் கூட்டுறவு முறையிலோ, கார்ப்பரேட் முறையிலோ ஒருங்கிணைக்கப்பட்டால்தான் அதிக அளவு சாகுபடியை அடைய முடியும். அரசின் மானியத்தை மட்டுமே நம்பி நடத்தப்படும் விவசாயம் சரியான வழிமுறையல்ல.
- இந்தியப் பொருளாதாரத்தின் மிக பலவீனமான பகுதி குறித்து யாரும் அதிகம் பேசுவதில்லை. இந்தியா உலகிலேயே மிக வேகமாக வளரும் பொருளாதாரம் என்று நாம் மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையக்கூடும். ஆனால் அந்த மகிழ்ச்சி நீடித்து இருப்பதற்கு மேலும் சில அம்சங்களும் தேவைப்படுகின்றன என்பதை மறந்து விடுகிறோம். மத்திய, மாநில அரசுகளின் கடன் சுமை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்பது குறித்து யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.
- 2019-20 கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்னால் தொடங்கிவிட்டது இந்த அவலம். கொள்ளை நோய்த்தொற்று வந்ததும் வந்தது, யாரும் கடன் சுமையை ஒரு பொருட்டாகக்கூட கருதுவதில்லை. 2021-22 நிதியாண்டில் மொத்த ஜிடிபியில் மத்திய, மாநில அரசுகளின் மொத்த கடன் தொகை 85.2%. 2022-23 இல் அது மேலும் உயர்ந்து 86.5% ஆனது.
- பொதுவாக ஒரு தேசத்தின் நிதிநிலைமையை நிலைதடுமாறச் செய்வது எரிசக்தித் தேவைக்கான செலவாக இருக்கும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, நிதி நிர்வாகம் தடுமாறுவது இயற்கை. நரேந்திர மோடி அரசின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும், கடந்த 10 ஆண்டுகளாக கச்சா எண்ணெயின் ஆண்டொன்றுக்கான சராசரி விலை பேரலுக்கு 100 டாலருக்கும் குறைவாகவே இருந்து வருகிறது.
- அதனால் மொத்த ஜிடிபியில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 2% க்கும் குறைவாக இருக்கிறது. ஆனால், மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த நிதிப்பற்றாக்குறை அளவு அதிகமாகக் காணப்படுகிறது. 2022-23 நிதியாண்டில் ஜிடிபியில் 9.4% என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
- அதேபோல, முதலீடுகளும் குறைந்து வருகின்றன. 2011-12 நிதியாண்டில் ஜிடிபியில் 39% ஆக இருந்த முதலீடுகள் இப்போது 32%. இவற்றின் பெரும்பகுதி அரசின் முதலீடே தவிர தனியார் முதலீடுகள் அதிகரிக்கவில்லை. வேகமாக வளரும் பொருளாதாரம் என்கிற நல்ல பெயர் கிடைத்திருப்பதைப் பயன்படுத்திக்கொண்டு தனியார் முதலீடுகளை ஈர்க்க முனைய வேண்டும்.
- என்னதான் முனைப்பும், சாதகமான சூழலும் இருந்தாலும் அரசின் கடன் சுமை குறையாமல் போனால், நமது வளர்ச்சி என்பது நீர்க்குமிழியாகிவிடும். இடைக்கால பட்ஜெட்டாகவே இருந்தாலும் அரசின் கடன் சுமையை முறைப்படுத்துவதில் கவனம் செலுத்தாவிட்டால் பொருளாதாரம் தனது வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளாது.
நன்றி: தினமணி (01 – 02 – 2024)