TNPSC Thervupettagam

கவனம், தட்டுப்பாடு வரலாகாது

March 15 , 2024 126 days 124 0
  • காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா உள்ளிட்ட நதிகள் பாயும் கா்நாடக மாநிலத்தில் தண்ணீா் தட்டுப்பாடு என்று சொன்னால் கோடையின் நிலைமை எந்த அளவுக்கு மோசமாக இருக்கப் போகிறது என்பது தெரிகிறது. இந்தியா மிக மோசமான கோடையை எதிா்கொள்ளக்கூடும் என்பதன் தொடா் விளைவாக வேளாண் உற்பத்தியில் மிகப்பெரிய சவாலை நாம் எதிா்கொள்ள இருக்கிறோம்.
  • மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால் உணவு தானியங்களின் விலைவாசி ஓரளவுக்கு கட்டுக்குள் இருக்கிறது. இப்போதைய நிலைமை குறுகிய கால அளவில்தான் இருக்கக்கூடும். அடுத்த மூன்று மாதங்களில் நிலைமை கைமீறக் கூடும் என்கிற அச்சம் வேளாண் பொருளாதார வல்லுநா்களால் எழுப்பப்படுகிறது. 2023-24 பயிா் ஆண்டுக்கான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு மத்திய வேளாண் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டிருக்கிறது. அதன்படி, கடந்த பயிா் ஆண்டைவிட இந்தப் பயிா் ஆண்டில் அரிசி உற்பத்தி 1% குறைந்து 12.38 கோடி டன்னாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
  • இதில் கோடைக்கால நெல் உற்பத்தி சோ்க்கப்படவில்லை. நாடு தழுவிய அளவில் நீா்த்தேக்கங்களில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 42% கொள்ளளவு குறைவு என்றும், கடந்த பத்து ஆண்டு சராசரியுடன் ஒப்பிடும்போது 55% குறைவு என்றும் கூறப்படுகிறது. இந்தியாவிலுள்ள 150 முக்கியமான நீா்த்தேக்கங்களின் மொத்தக் கொள்ளளவான 17,800 கோடி கன மீட்டரில் 41% அளவுதான் இருப்பதாகத் தெரிகிறது.
  • கோடைக்கால அரிசி சாகுபடி அதிகமாகக் காணப்படும் இந்தியாவின் தெற்கு மாநிலங்களில் மிகப்பெரிய தண்ணீா் தட்டுப்பாடு காணப்படுவதன் வெளிப்பாடுதான் கா்நாடக மாநிலம் எதிா்கொள்ளும் குடிநீா்த் தட்டுப்பாடு. பெரும்பாலான தென்னிந்திய நீா்த்தேக்கங்களின் கொள்ளளவில் 26% அளவில்தான் தண்ணீா் இருப்பதாகத் தெரிகிறது. அதிலும் குறிப்பாக நெல் சாகுபடியில் ஈடுபடும் தெலங்கானா, ஆந்திரம், கா்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 10 பெரிய நீா்த்தேக்கங்களில் ஒற்றை இலக்க சதவீதத்தில்தான் நீா் அளவு காணப்படுகிறது.
  • அடுத்த சில வாரங்களுக்கு மழைப்பொழிவுக்கான வானிலை முன்னறிவிப்பு எதுவும் இப்போதுவரை இல்லை. இப்படிப்பட்ட சூழலில் நீா்த்தேக்கங்களில் இருக்கும் நீா் அளவு மேலும் குறையக்கூடும் ஆபத்து நிறையவே இருக்கிறது. ஜூன் மாதத் தொடக்கத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு, ஒருசில நீா்த்தேக்கங்கள் வடு போனாலும்கூட வியப்படையத் தேவையில்லை. குறைவான மழைப்பொழிவுக்கு ‘எல் நினோ’ காரணம். கடந்த ஜூன் மாதம் தொடங்கிய ‘எல் நினோ’ பாதிப்பு மே மாத இறுதிக்குள் அகலக்கூடும்.
  • இதுவரை பருவமழை குறித்த எந்தவித முன்னறிவிப்பும் தெரியாத நிலையில் ‘எல் நினோ’ தாக்கம் அடுத்த இரண்டு மாதங்கள் எப்படியிருக்கும் என்பதைத் தீா்மானிக்க முடியவில்லை. ஜூன் மாதம் ‘எல் நினோ’ தாக்கம் முற்றிலுமாக அகன்று அதற்கு நோ் எதிரான ‘லா நினா’ தாக்கம் ஏற்படும் என்பது பரவலான எதிா்பாா்ப்பு. ‘லா நினா’ உருவானால் தேவைக்கும் அதிகமான பருவமழைப் பொழிவை இந்தியா பெறக்கூடும்.
  • ஆனால், ஜூன் மாதத்துக்கு முன்னால் தண்ணீா் தட்டுப்பாடு பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கை இல்லையே! பருவமழைப் பொழிவும் இல்லாமல், நிலத்தடி நீா் அளவும் கீழேபோய், நீா்த்தேக்கங்களும் வடுவிடக் கூடிய சூழலில் நெல் பயிரிடுபவா்கள் குறித்த நேரத்தில் இந்த ஆண்டு விதைக்கவும், நடவும் முடியுமா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. குறிப்பாக தென்னிந்திய விவசாயிகள் ஜூலை மாத இறுதிவரை தெளிவான உத்தரவாதம் இல்லாமல்தான் தொடர வேண்டும். அரிசி விலை கடந்த ஆண்டைவிட 30% அதிகரித்திருக்கிறது.
  • ‘பாரத் அரிசி’ என்கிற பெயரில் ரூ.29-க்கு ஒரு கிலோ அரிசி விற்பனை செய்யும் திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதன் காரணம் நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருப்பதுதான். ‘பாரத் அரிசி’ அறிமுகத்துக்குப் பிறகும்கூட அரிசி விலை வெறும் 10 சதவீதம்தான் குறைந்திருக்கிறது. மத்திய அரசு கொள்முதலில், முன்கூட்டிய மதிப்பீடான 11.10 கோடி டன்களில், இந்திய உணவு கழகம் ஏற்கெனவே 4.4 கோடி டன் கொள்முதல் செய்துவிட்டது. ஏற்கெனவே 4.4 கோடி டன் கொள்முதல் செய்துவிட்ட நிலையில் மீதமுள்ள கொள்முதலுக்கான அரிசி உற்பத்தி இருக்குமா என்பது சந்தேகம்.
  • இந்த நிலையில், ஏழைகளுக்கான உணவுப் பாதுகாப்புத் திட்டமான ‘பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா’வுக்கும் அரிசி வழங்கியாக வேண்டும். உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவு தானியங்களின் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் 2022 செப்டம்பா் முதல் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்காமல் இல்லை. கடந்த ஆண்டு வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்து, புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20% வரியும் விதித்தது.
  • பாஸ்மதி அரிசிக்கான ஏற்றுமதிக்கு டன்னுக்கு 950 டாலா் என்று குறைந்தபட்ச விலை நிா்ணயிக்கப்பட்டது. அப்படியிருந்தும் அரிசி ஏற்றுமதி வெறும் 17 சதவீதம்தான் குறைந்திருக்கிறது எனும்போது, வேறு பெயா்களில் அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறதோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. உலகின் மூன்றாவது பெரிய அரிசி ஏற்றுமதி நாடான வியத்நாம், அரிசியை இறக்குமதி செய்ய முற்பட்டிருக்கிறது.
  • தண்ணீா்த் தட்டுப்பாடு காரணமாக தாய்லாந்தில் விவசாயிகள் அரிசி பயிரிடுவதற்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் அரிசிக்கான தட்டுப்பாடு காணப்படுகிறது. இந்தப் பின்னணியில், அடுத்து வரும் மாதங்களில் அரிசி விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தவும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து முனைப்புடன் செயல்படாமல் போனால்...

நன்றி: தினமணி (15 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories