TNPSC Thervupettagam

கவனிக்கப்பட வேண்டிய அறிவாளுமை

January 4 , 2024 196 days 161 0
  • இருபதாம் நூற்றாண்டின் மகத்தான மானிடவியலாளர்களில் ஒருவரான ஹெர்பர்ட் ஹோப் ரிஸ்லி (Herbert Hope Risley), பிரிட்டிஷ் இந்தியாவின் நிர்வாகியாக இங்கிலாந்தில் இருந்து பொ.. (கி.பி) 1873இல் இந்தியா வந்தார். கல்கத்தாவின் மிட்னாபூரில் உதவி ஆட்சியராகப் பணியைத் தொடங்கிய ரிஸ்லி, கல்கத்தா மாகாணத்தின் மனிதர்கள், புவியியல் அமைப்பு குறித்த தரவுகளின் களஞ்சியமாகத் தம்மை மேம்படுத்திக்கொண்டிருந்தார். 1857இல் நடைபெற்ற கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியர்களையும் அவர்களின் பண்பாடுகளையும் புரிந்துகொள்ள வேண்டிய அவசியம் அன்றைய ஆட்சியாளர்களுக்கு உருவானபோது, கல்கத்தா மாகாணத்தை மையமாகக் கொண்ட பணிகளை மிகவும் நுணுக்கமாக ரிஸ்லி செய்து முடித்தார்.
  • ரிஸ்லி கல்கத்தாவுக்கு வருவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு, கல்கத்தா குறித்த புள்ளியியல் ஆய்வாகவும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புபோலவும் ஒரு தகவலை டபிள்யூ.டபிள்யூ.ஹண்டர் திரட்டியிருந்தார். மானிடவியலில் ஈடுபாடுடைய ரிஸ்லிக்கு அது உற்சாகத்தைக் கொடுத்தது. அதன் விளைவாக, ரிஸ்லி 1875இல் கல்கத்தா மாகாணத்தின் மானிடவியல் குறித்து மேலோட்டமாகத் தனது கருத்தை எழுதியிருந்தார்.
  • மானிடவியல் குறித்த ரிஸ்லியின் புரிதல் புதுவிதமாக இருப்பதைப் பாராட்டி, தனது புள்ளியியல் ஆய்வுக்கான உதவி இயக்குநராக அவரை ஹண்டர் நியமித்துக்கொண்டார். இது இந்தியாவில் ரிஸ்லி பெற்ற முதல் பதவி உயர்வு.
  • பின்னர் ஹசாரிபாக், லோஹர்டகா முதலிய மலைப்பிரதேசங்களின் புள்ளியியல் விவரங்களை ரிஸ்லி தொகுத்தார். அது, வழக்கமான புள்ளியியல் தொகுப்பிலிருந்து வேறுபட்டு பொருள்செறிவும் இலக்கியத் தன்மையும் கொண்டிருந்தது. இதற்கு வெகுமதியாகவே 1879இல் உள்துறைத் துணைச் செயலராக நியமிக்கப்பட்டார்.
  • ரிஸ்லியும் சாதியும்: சாதியைஇந்திய சமுதாயத்தின் எண்ணற்ற அலகுகளை ஒன்றாகப் பிணைத்து வைத்திருக்கும் கான்கிரீட்என மதிப்பிட்ட ரிஸ்லி, 1891இல் ‘The Study of Ethnology in India’ என்னும் கட்டுரையை லண்டனில் உள்ள ராயல் மானிடவியல் நிறுவனத்தில் (Royal Anthropological Institute) வாசித்தளித்தார். அதைப் பின்னர் அந்நிறுவனமே வெளியிட்டது.
  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப் பகுதியிலிருந்து இந்தியப் பழங்குடியினர் பற்றித் தவறாக வழங்கிவரும் தகவலை அக்கட்டுரை விமர்சனபூர்வமாக அணுகியிருந்தது. அது வெளியானதற்குப் பிறகு அவரை தாமஸ் ட்ராட்மேன் உள்ளிட்ட ஆய்வாளர்கள் மாக்ஸ் முல்லரின் ஆய்வு மரபில் இணைத்துப் பேசினர். அதே சமயம், முல்லரே மறுக்கும் விஷயங்களும் ரிஸ்லியிடம் இருந்தன.

1891இல்தான் ரிஸ்லியின் வங்காளத்தின் பழங்குடிகள்

  • சாதிகள் குறித்த நூல் நான்கு தொகுதிகளாகவும் இனவியல் பற்றிய சொற்களஞ்சியம் இரண்டு தொகுதிகளாகவும் வெளிவந்திருந்தன. இது, அன்றைய இந்திய நிர்வாகிகள் மத்தியிலும் இங்கிலாந்திலும் அவர் மீது கவனம் குவியக் காரணமாக அமைந்தது. எனினும், அதில் திருப்தி அடையாத அவர், தம்மை மேம்படுத்திக்கொள்ள வில்லியம் ஹென்றி பிளவர், எடின்பர்க், வில்லியம் டர்னர் ஆகியோரிடம் ஆலோசனைகளைப் பெற்றார்.
  • நாளடைவில் இந்தியாஇனங்களைப் பற்றி ஆராய்வதற்கு ஏற்றதொரு ஆய்வகம்என்ற எண்ணமுடையவராக மாறினார் ரிஸ்லி. சாதிக்கும் இனத்துக்குமான ஒப்புமை, பகுப்பாய்வு மானிடவியல் ஆகியன குறித்து விளக்கிக்கொண்டே இருந்தார். மானிடவியலுக்கு இலக்கியத்தைத் துணையாகக் கொள்ளலாம் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்த ரிஸ்லி, தமது ஆய்வுகளுக்கு ரிக் வேதத்தைப் பயன்படுத்தினார்.
  •  ‘ஒவ்வொரு சாதியினரின் திருமண முறைகள் அச்சாதியினரின் புறவயமான அமைப்பை ஒழுங்குபடுத்தும் வேலையைச் செய்கின்றன. இந்தியாவில் சாதியைவிட வர்ணம் பழமையானது. அதைக் கொண்டு மக்களை வகைப்படுத்துவது சரியாக இருக்கும்என்று கல்கத்தா மாகாணத்தின் அனைத்து மக்களையும் நான்கு வர்ணத்துக்குள் வகைப்படுத்தினார்.
  • ரிஸ்லி தன்னுடைய இந்திய இனவியல் குறித்த கட்டுரையில் சாதி பற்றிச் சொல்லும்போது, ‘சாதி போன்ற ஒரு நிறுவனம் தனது இலக்கை நோக்கித் தொடர்ச்சியாக வெற்றியுடன் செயல்படுகிறது. திருமணத்தின் மீதான கட்டுப்பாடுகள் முதலில் நடைமுறைக்கு வரத் தொடங்கியபோது, எந்த வகையான கட்டுப்பாடுகள் இருந்தனவோ அவற்றைச் சிதைக்காமல் மறுஉற்பத்தி செய்து பாதுகாக்கும் வேலையைத் தமக்குத் தாமே செய்துகொள்கிறதுஎன்கிறார்.
  • சாதியைநிறுவனமாகக் கருதிய பார்வை, ஒரு நிறுவனம் தம்மை லாபம் சார்ந்து நிலைநிறுத்திக்கொள்ள என்னவெல்லாம் செய்யுமோ அதைப் போலவே சாதியும் செய்துகொள்ளும் என்ற புரிதல் அக்கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. மானிடவியலில் ஆர்வமுள்ள ஒரு நிர்வாக அதிகாரியிடமிருந்து வெளிப்பட்ட இக்கூற்று, அன்றைய காலத்தில் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ரிஸ்லியின் காலத்தில் சாதி குறித்து ஆராய்ந்த எந்த ஐரோப்பியரிடமும் அத்தகையநிறுவனம்என்கிற பார்வை இல்லை.
  • இருபத்தோராம் நூற்றாண்டில் சாதி அமைப்பின் ஏற்ற இறக்கத்துக்கும் லாப நட்டத்துக்கும் தொடக்கப்புள்ளியாக ரிஸ்லியின் ஆவணமயமாக்கலைக் குறிப்பிடலாம். 1901 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அதிகாரியாக அவர் இருந்தபோது, சாதியை வகைப்படுத்தியது, வர்ணத்தில் அடக்கியது ஆகியன காலனிய காலத்தில் நிலவிய சூழலுக்குத் தக்கவாறு சாதி தம்மைத் தகவமைத்துக்கொள்ள உதவின.
  • புள்ளிவிவரங்கள் அடிப்படையில் முதன்முதலில் வடகிழக்கு இந்தியர்களை நான்கு வர்ணத்துக்குள் அடைத்தவரும் அதையொட்டி இந்தியாவின் பிற பகுதிகளின் பல நூறு மில்லியன் மக்களை வர்ணத்தின்படி வகைமை செய்யக் காரணமானவரும் ரிஸ்லிதான்என்கிற அமெரிக்க அரசியல் அறிவியலாளரான எல்..ருடால்ஃபின் கூற்று குறிப்பிடத்தக்கது.

நாசோ மலர் ஆராய்ச்சி

  • ரிஸ்லியின் ஆய்வு ஆர்வத்துக்குத் தொடக்கப் புள்ளியாக இருந்தவர், பிரெஞ்சு இயற்பியல் மானிடவியலாளரான பால் டோபினார்ட். அவருடைய Elements d'anthropologie generale நூல்தான் ரிஸ்லிக்குள் வாழ்நாள் முழுவதும் தாக்கம் செலுத்தியபடியே இருந்தது.
  • உதாரணமாக, மூக்கின் அமைப்பைக் கொண்டு இந்தியர்களை வகைப்படுத்திய ரிஸ்லியின் அணுகுமுறையானது டோபினார்டிடம் இருந்து எடுக்கப்பட்டதாகும்.
  • கன்னம், கன்ன எலும்பு, மூக்கு ஆகியவற்றின் உருவம், அளவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மனிதர்களைப் பகுத்து ஆராயும் முறைக்குநாசோ மலர் ஆராய்ச்சிஎன்று பெயர். இந்த முறையை ஃபிளவர், ஒல்ட்ஃபீல்ட் தாமஸ் ஆகிய இருவரும் உருவாக்கினார்கள்.
  • இருவரது முறையும் வேறுபாடு கொண்டதாக இருந்தாலும் தம்முடைய ஆராய்ச்சியில் இருவரது முறையையுமே ரிஸ்லி பயன்படுத்தினார். இந்த முறையின் அடிப்படையில்தான் திராவிட - மங்கோலிய இனங்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை வெளியிட்டார்.
  • கர்சன் வங்கத்தைப் பிரித்தபோது ஏற்பட்ட கொந்தளிப்பைச் சமாளிக்க ரிஸ்லி உதவியதற்காக அவருக்கு ஓய்வுபெறும் வயதைத் தாண்டியும் இரண்டு ஆண்டுகள் பணி நீட்டிக்கப்பட்டது. கர்சனுக்குப் பிறகு பொறுப்புக்கு வந்த மிண்டோ காலத்தில் ஏற்பட்ட குழப்பங்களைப் பேச்சுவார்த்தை வழியாகத் தீர்ப்பதற்கும் தமக்குச் சாதகமான வெற்றியைப் பெறுவதற்கும் ரிஸ்லியின் ஆய்வுகள் உதவின.
  • அந்த வகையில் பிரிட்டிஷ் இந்தியாவின் ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் வரிசையில் ரிஸ்லியும் கவனிக்கப்பட வேண்டியவராவார். அவரது ஆய்வுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் பெருகுமானால் பல புதிய திறப்புகளைப் பெறமுடியும்.
  • ஜனவரி 4: ஹெர்பர்ட் ஹோப் ரிஸ்லியின் பிறந்தநாள்

நன்றி: இந்து தமிழ் திசை (04 – 01 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories