- ஆற்றல் மிக்க இலக்கிய வடிவம் கவிதை; புறப்பார்வையில் அணுகுபவர்களுக்கு வெறும் வார்த்தைகளின் அணிவகுப்பாக மட்டுமே அது தெரியலாம். ஆனால், உள்ளமெனும் கருத்துக் கொள்ளிடத்தில் அடக்கி வைக்கப்பட்டுள்ள எண்ணங்களின் வெளிப்பாடே கவிதை.
- சிலர் தன் வாழ்நாளின் முற்பகுதியில் தீமை பயக்கும் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பின்னர் அந்தச் செயல்கள் குறித்து வருந்தும்போது மனதில் தேங்கியிருந்த மாசு நீங்கி, தூய்மையடைந்து வாய்மை மிக்க வார்த்தைகளால் வனையப்பட்ட இலக்கியங்கள் படைக்கப்படுகின்றன.
இதற்கென ஓர் எடுத்துக்காட்டாக வால்மீகி ராமாயணத்தைக் குறிப்பிடலாம்.
இமயமலைக் காடுகளில்….
- இமயமலைக் காடுகளில் வழிப்பறி செய்தும், பொருள் வேண்டி மனிதர்களைக் கொன்றும் இரக்கமற்ற முரடனாக திரிந்த இளைஞர்தான் ரத்னாகரா. தன் வாழ்வின் பிற்பகுதியில் தான் செய்த குற்றத்தை உணர்ந்து மனம் வருந்தி ஞானம் தேடி சென்றடைந்தவராய் வால்மீகி முனிவரானார். தீய எண்ணங்கள் மறைந்து தான் செய்த குற்றச்செயல்களுக்கு வருந்திய அந்த மாமனிதர் மாபெரும் முனிவரானார். வால்மீகி ராமாயணத்தை உலகுக்கு கொடையாக அவர் அளித்தார்.
- ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உணர்ச்சிவசப்பட்டோ, பிறர் தூண்டுதல் அல்லது தீய எண்ணங்களின் உந்துதல் காரணமாகவோ கொடுமையான குற்றச் செயல்களைப் புரிகிறான். அதற்கென வழங்கப்படும் தண்டனை, அந்தக் குற்றத்தினால் மற்றவர்களுக்கு ஏற்பட்ட வலியையும் வேதனையையும் உணரச் செய்கிறது. அத்துடன் சிறை வாழ்க்கையில் அனுபவிக்கும் உறவிற்கும் பிரிவிற்கும் இடைப்பட்ட தனிமை என்னும் நிலை மனதை தூய்மைப்படுத்தி, நல்வழிப்படுத்தவும் செய்கிறது.
உதாரணம்
- அந்த வகையில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வு, அண்மையில் நீதிமன்றத்தின் பார்வைக்கு வந்தது. மகாராஷ்டிர மாநிலம் எரவாடா சிறைச்சாலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஞானேஷ்வர் சுரேஷ், மரணத்தின் விளிம்பிற்குச் சென்று திரும்பியுள்ளார். பெற்றோரை மிரட்டிப் பணம் பறிக்கும் கெட்ட நோக்கத்துக்காக ரிஷிகேஷ் என்ற குழந்தையைக் கடத்திக் கொலை செய்து, அந்தக் கொலை வழக்கின் சாட்சியங்களை அழிக்க முயற்சித்த குற்றத்துக்காக விசாரணை நீதிமன்றத்தால் 2001-ஆம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மேல்முறையீடு
- அவரது மேல்முறையீட்டை விசாரித்த அலாகாபாத் உயர்நீதிமன்றம், பணத்துக்காக குழந்தையைக் கடத்தி, துன்புறுத்திக் கொன்றது கொடூரமான குற்றம். எனவே, கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர் என்று தீர்மானித்து தூக்கு தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்தது.
- நீதிமன்றத்தில் போராடுவது என்ற தனது முடிவில் பின்வாங்காத ஞானேஷ்வர் சுரேஷ், உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், இந்த முறை அவருடைய வழக்குரைஞர் சட்ட நுட்பங்களை எடுத்துக் கூறி வாதாடவில்லை; சாட்சியங்கள் நம்பகத்தன்மையை இழந்து விட்டன; எனவே, அவற்றை ஏற்கக் கூடாது என்று சாட்டுரைக்கவில்லை; ஞானேஷ்வர் சுரேஷுக்கு எதிராக பொய் வழக்கு புனையப்பட்டுள்ளது என்று கூறவில்லை. மேலும், முன்பகை, பிற்சேர்க்கை, பழி வாங்கும் நடவடிக்கை போன்ற குற்ற வழக்குகளில் கையாளப்படும் சொற்றொடர்களை கூறியது கூறல் என்ற வகையில் எடுத்துரைக்கவில்லை.
- மாறாக, தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஞானேஷ்வர் சுரேஷ் எழுதிய கவிதைகளை அவரது வழக்குரைஞர் நீதிமன்றத்தில் வாசித்துக் காட்டி கவனத்தைக் கவர்ந்தார்.
- வழக்கின் இறுதி விசாரணை இந்த ஆண்டு (2019) பிப்ரவரி மாதம் நடைபெற்றபோது தூக்கு தண்டனைக் கைதியின் கவிதைகளை கவனமாகப் பரிசீலனை செய்தது உச்சநீதிமன்றம். பதினெட்டு ஆண்டுகால சிறைவாசியாக நீதிமன்றத்தால் மரணம் நிச்சயிக்கப்பட்ட கைதியாக வாழ்வைக் கழித்து வந்துள்ளார் ஞானேஷ்வர் சுரேஷ் என்பதைக் கருத்தில் கொண்டு அவரது நன்னடத்தை குறித்தும் கேட்டுத் தெரிந்து கொண்டனர். சிறைவாழ்வில் எந்தச் சட்ட மீறல்களிலும் ஈடுபடவில்லை, சிறை நூலக அறைகளில் வாசம் செய்தபடியே, வாசிக்கவும் செய்து பட்டப்படிப்பை முடித்ததோடு மட்டுமின்றி கவிதைகள் எழுதும் மனநிலையையும், மொழிப்புலமையையும் அவர் பெற்றுள்ளார் என்பதை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக்கொண்டது.
- மேலும், அந்த கவிதைகளைப் படித்தறிந்த உச்சநீதிமன்ற மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு, கைதி எழுதியுள்ள சிறைக்கால கவிதைகள் அவரது மனம் சிறைவாழ்வில் பண்பட்ட பாங்கினைப் பிரதிபலிக்கின்றன என்று ஒருமனதாக முடிவெடுத்தனர். அவர் 22 வயது வயது இளைஞராக இருந்தபோது செய்த குற்றச் செயலை எண்ணி அதன் கொடுமையை உணர்ந்து வருந்தி வார்த்தைகளில் பதிவு செய்யப்பட்டுள்ள கவிதைகள் கைதியின் திருந்திய மன நிலையைப் படம் பிடித்துக் காட்டுவதாக தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத் தீர்ப்பு
- எனவே, ஆயுதம் தாங்கி கொலை செய்த வன்மையான கைகள், இன்று எழுதுகோல் எடுத்து கவிதைகள் எழுதும் நிலைக்குப் பண்பட்டு மானுடத்தன்மை அடைந்திருப்பதை அங்கீகரித்து ஏற்ற உச்ச நீதிமன்றம், கவிஞராகப் பரிணமித்த அந்தக் கைதியின் தூக்கு தண்டனையை ரத்து செய்து ஆயுள் தண்டனையாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
- பொருளுணர்ந்து படிப்பவர்களை கசிந்துருகச் செய்யும் உன்னதமான தன்மையைத் தன்னகத்தே கொண்டது கவிதை. கற்போரை, களிப்பூட்டியும் கருத்தூட்டியும் வசப்படுத்தும் வல்லமை மிக்க கவிதை, ஒரு வியப்பூட்டும் விந்தை என்பதை மகாகவி பாரதியார், ஆசை தரும் கோடி அதிசயங்கள் வைத்ததிலே
ஓசை தரும் இன்பம் உவமையிலா இன்பமன்றோ காட்டு நெடுவானம் கடலெலாம் விந்தையெனில் பாட்டினைப் போல் ஆச்சர்யம் பாரின் மிசை இல்லையடா!
என்று பாடியுள்ளார்.
- மகாகவியின் வரிகளுக்கு மெருகேற்றுவதுபோல உச்சநீதிமன்றம் (குற்ற மேல்முறையீடு எண் 1411-2018; 20.2.2019) வழங்கியுள்ள தீர்ப்பு அமைந்துள்ளது. கவிதையை அதன் ஆற்றலறிந்து, மனிதநேயத்துக்காக உச்சநீதிமன்றம் அங்கீகரித்து ஏற்றுக் கொண்டிருப்பது, இலக்கியப் படைப்புகள், படைப்பாளிகள் மீது வைத்துள்ள நன்னம்பிக்கை சான்றாகும்.
நன்றி: தினமணி(03-09-2019)