TNPSC Thervupettagam

காகங்கள் எப்படிப் பேசிக்கொள்கின்றன?

January 26 , 2025 6 hrs 0 min 13 0

காகங்கள் எப்படிப் பேசிக்கொள்கின்றன?

  • நாம் தினமும் பார்க்கக்கூடிய பறவைகளில் ஒன்று காகம். புத்திசாலியான பறவை. மனிதர்களைப் போலவே சமூக வாழ்க்கை வாழும் இயல்புடையது. ஆண் காகமும் பெண் காகமும் எப்போதும் சேர்ந்தே இருக்கும். உணவைத் தேடுவது முதல் தங்கள் மொழியான, ’கா... கா...’ என்று கரைவதைக் குஞ்சுகளுக்குச் சொல்லிக் கொடுப்பது வரை அனைத்தையும் செய்கின்றன.
  • ’கா... கா… கா...’ என்று காகம் அழைப்பதற்குப் பின் ஏராளமான அர்த்தங்கள் இருக்கின்றன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காகங்களின் ஒலியைப் பிரித்து, அர்த்தங்களைக் கண்டறிந்துள்ளார்கள்.
  • குறைந்த அலைவரிசை (100-150 Hz) ’கா... கா...’ என்கிற ஒலி அமைதியான சூழ்நிலையை உணர்த்தும். இது மென்மையாக இருக்கும். ’கா… கா..., கா… கா...’ என்பதற்குக் குடும்பத்துக்குள் அல்லது பக்கத்தில் இருக்கும் காகத்திடம், ’இங்கே பார், உணவு இருக்கிறது’ என்பதாக இருக்கலாம். அல்லது அக்கம்பக்கம் இருக்கும் காகங்களிடம், இரை கிடைத்துவிட்டதை அறிவிப்பதாக இருக்கலாம்.
  • நடுத்தர அலைவரிசை 150-200 Hz இருந்தால் இப்படி இருக்கும். ’காகாகா… காகாகா…’ என்று நீண்ட, அதே நேரம் ஒரு சிறிய இடைவெளியுடன் இருக்கும். கரகரப்பும் அதிகமாக இருக்கும். இந்த மாதிரியான ஒலி எச்சரிக்கையாக இருக்கலாம். ’நாய் இருக்கிறது, அல்லது கழுகு வட்டமிடுகிறது’ என்பதுபோல.
  • ’காகாகாகா…’ எனத் தொடர்ந்து உச்சஸ்தாயியில் வரும் ஒலியின் அலைவரிசை 200-250 Hz இருக்கும். இந்த ஒலி அவசர நிலையைச் சொல்கிறது. ’ஒரு காகம் செத்துக் கிடக்கிறது என்றோ ஏதோ அபாயம்’ என்றோ உணர்த்தும் ஒலியாக இருக்கும்.
  • ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் நடந்த ஆய்வில், ’கா... கா...’ என்பதற்குப் பின்னால் இருக்கும் ரகசியங்கள் தெரியவந்திருக்கின்றன. இதன்படி ஒவ்வொரு காக்கைக் குடும்பமும் தனித்துவமான 12 முதல் 15 ஒலி வடிவங்களைக் கொண்டுள்ளன. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் ரகசிய ஒலிகள் அவை. அதாவது, நூறு காகங்கள் ஓர் இடத்தில் கூடி இருந்தாலும் தன் குடும்பத்தை இந்த ஒலியை வைத்துக் கண்டறிந்துவிடும்.
  • இன்னொரு சுவாரசியமான விஷயம், கோவைத் தமிழ், சென்னைத் தமிழ், மதுரைத் தமிழ் என்று நம் பேச்சில் வித்தியாசம் இருப்பது போல், ’கா…கா...’விலும் இருக்கிறது. ஆம், ஒவ்வொரு பகுதியிலும் வாழும் காகங்கள் வெவ்வேறு உச்சரிப்புகளைக் கொண்டுள்ளன. இதை ஆஸ்திரேலியாவில் நடந்த ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்கள். உதாரணத்துக்கு நகரங்களில் உள்ள காகங்கள், வாகன ஒலியை மீறி அதிக டெசிபலில் ’கா... கா...’ என்று ஒலி எழுப்புகின்றன. இதுவே கிராமப்புறங்களில் உள்ள காகங்கள் மென்மையாகவே ஒலி எழுப்புகின்றன.
  • பலவிதமான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு ஆய்வாளர்கள் மனிதர்களைப் போலவே காகங்களுக்கும் குடும்பப் பாசம், நட்பு, உதவி போன்ற பண்புகளும் இருக்கின்றன என்கிறார்கள்.
  • காகங்கள் தங்களுக்கு உதவிய அல்லது தீங்கு செய்த மனிதர்களின் முகங்களை நினைவில் வைத்திருக்கும் திறன் கொண்டவை. இந்த நினைவாற்றல் பல ஆண்டுகள் நீடிக்கும். ஒரு மனிதர் காகத்துக்குத் தீங்கு செய்திருந்தால், அந்தக் காகம் மட்டுமல்லாமல் மற்ற காகங்களும் அந்த மனிதரை அடையாளம் கண்டுகொள்ளும். இதற்குக் காரணம், காகங்கள் தங்களுக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதே. உணவு கொடுக்கும் மனிதர்களிடமும் அவற்றுக்குப் பரிவுணர்வு ஏற்பட்டு விடுகிறது.
  • காகங்களின் மூளை அறிவாற்றலில் மிகவும் மேம்பட்டது. குறிப்பாகப் புதிய சூழல்களுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்ளும் திறன், கருவிகளைப் பயன்படுத்தும் திறன், சிக்கல்களைத் தீர்க்கும் திறன் ஆகியவற்றில் காகங்கள் சிறந்து விளங்குகின்றன.
  • 2022-2024 ஆம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் காகங்களின் தகவல் பரிமாற்றம் குறித்து நடத்திய ஆய்வுகளில் புதிய தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அவற்றில், இருநூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட தனித்துவமான ஒலி வடிவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஒவ்வோர் ஒலி வடிவமும் ஒரு குறிப்பிட்ட சூழல் அல்லது செய்தியை வெளிப்படுத்துவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. ஒலிகளின் கால அளவு 0.1 முதல் 2.5 வினாடிகள் வரை மாறுபடுகிறது. மேலும் இவை மற்ற காகங்களிடம் இருந்தும் புதிய ஒலிகளைக் கற்றுக்கொள்கின்றன. இந்த ஒலிகளை வைத்து, காக்கைக் குழுக்களில் முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

நன்றி: இந்து தமிழ் திசை (26 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories