- உலகை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றான காசநோயால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் நாடு இந்தியா என்னும் தகவல் வருத்தமளிக்கிறது. 2023இல் மட்டும் இந்தியாவில் 25,50,000 பேருக்குக் காசநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 70,000 பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- உலக சுகாதார அமைப்பு, 2035க்குள் காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய அரசு 2025க்குள் ஒழிக்கத் திட்டமிட்டு, 2017-2025ஆம் ஆண்டுக்கான செயல்திட்டத்தையும் வகுத்தது; காசநோயை எதிர்கொள்வதில் மத்திய, மாநில அரசு சுகாதாரத் துறைகளின் அணுகுமுறைகளும் மாறின. குடும்பத்தில் சம்பாதிக்கும் பொறுப்பில் உள்ள ஒருவர் காசநோய்க்கு இலக்காகி, அதற்குச் சரியான நேரத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்ளவில்லை எனில், அந்தக் குடும்பத்துக்கு ஏற்படும் இழப்பை யாராலும் ஈடுகட்ட இயலாது.
- வருவாய் துண்டிக்கப்படுவதுடன், அவரைக் கவனித்துக்கொள்ள வேண்டிய நிலையும் குடும்பத்தினருக்கு ஏற்படுகிறது; அவர் வழியாக மற்ற உறுப்பினர்களுக்கு நோய் பரவும் ஆபத்தும் தோன்றுகிறது. நவீன மருத்துவ வசதிகள் வளர்ச்சி அடைந்துவிட்ட இன்றைய சூழலிலும், இந்தியாவில் பெரும்பான்மைக் குடும்பங்களில் இத்தகைய நெருக்கடிகள் காணப்படுகின்றன.
- குழந்தைகள் காசநோய்க்கு உள்ளாவது, இச்சிக்கலை இன்னும் கடினமாக்குகிறது. ஆரம்ப சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தாமல் காசநோய் ஒழிப்பு சாத்தியம் இல்லை. நோய் ஒழிப்புத் திட்டத்துக்கு அரசுகளால் போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையும் உள்ளது. அரசாங்கச் செலவிலேயே காசநோய் குணப்படுத்தப்பட வேண்டும் என்கிற கொள்கை முடிவு இருப்பினும், இந்தியாவில் 32% பேர் தங்கள் பணத்திலேயே காசநோய்க்குச் சிகிச்சை பெறுகின்றனர்.
- காசநோய்க்கான பரிசோதனை, சிகிச்சைகள், மருந்துகள் ஆகியவை அதிக செலவு பிடிப்பவையாகவே உள்ளன. எனவே, இலவசப் பரிசோதனைகள், இலவச மருந்துகள் போன்றவை அரசால் அளிக்கப்படுகின்றன. ‘நிக்ஷய் போஷன் யோஜனா’ திட்டத்தின்படி, காசநோயால் பாதிக்கப்பட்டோருக்குச் சத்தான உணவு கிடைப்பதற்கு நிதியுதவி அளிக்கப்படுகிறது. காசநோய்க்கான மருந்துகளில் 80% இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.
- காசநோய் கண்டறிதலில் இந்திய மருத்துவச் சங்கம் (ஐஎம்ஏ), இந்தியக் குழந்தைகள் மருத்துவக் கழகம் போன்ற அமைப்புகள் இணைந்து செயல்படத் தொடங்கிய பின்னர், முன்பைவிட அதிகமாக நோயாளிகள் எண்ணிக்கை தெரியவந்தது. 2021இல் 4.94 லட்சம் பேர் இந்நோயால் இறந்தனர்; 2022இல் இந்த எண்ணிக்கை 3.31 லட்சம் ஆகக் குறைந்தது.
- 2015இல் ஒரு லட்சம் பேருக்கு 237 பேர் புதிதாகப் பாதிக்கப்படுகின்றனர் என்ற நிலை, 2022இல் 199ஆகக் குறைந்தது. எனினும், காசநோய்க்கு எதிரான நடவடிக்கையில் இந்தியா சாதித்துள்ளதைவிட, முறியடிக்க வேண்டிய சவால்கள் அதிகம். காசநோய்க்கு முக்கியமான காரணியாக வறுமை நீடிக்கிறது.
- மக்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. தனிநபர்களாகவும் சமூகமாகவும் தூய்மைப் பழக்கவழக்கங்கள் அலட்சியப்படுத்தப்படுகின்றன. உலகக் காசநோய் விழிப்புணர்வு நாளான மார்ச் 24 அன்று உத்தரப் பிரதேசம் வாராணசியில் ‘ஒரே உலகம்: காசநோய் உச்சி மாநாடு’ நடந்தது.
- அதைத் தொடங்கிவைத்த பிரதமர் நரேந்திர மோடி, காசநோய் இல்லாத தேசத்தை அடைவதற்கான பணிகளை விரைவுபடுத்தும்படி கூறினார். மக்களை இந்நோயிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளைத் தாயின் பரிவோடு அரசு மேம்படுத்த வேண்டும்; மக்களும் அரசுடன் கைகோக்க வேண்டும். இவை நடந்தால்தான் 2025க்குப் பிறகாவது காசநோயைக் கட்டுப்படுத்தும் இலக்கை இந்தியா அடைய முடியும்!
நன்றி: இந்து தமிழ் திசை (05 – 04 – 2024)