- இந்தியாவில் 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிப்பதுதான் தேசிய அளவில் நம் குறிக்கோள். அதன்படி, இந்த ஆண்டு மத்திய சுகாதாரத் துறை, ‘ஆம்! காசநோயை நம்மால் வெல்ல முடியும்’ எனும் கருப்பொருளைக் கையில் எடுத்துள்ளது. இதன் நீட்சியாக, மார்ச் 24 அன்று வாராணசியில் நடந்த உலகக் காசநோய் தின விழாவில், காசநோய் ஒழிப்பில் பின்பற்ற வேண்டிய ‘புதிய குறுகிய காலக் காசநோய்த் தடுப்புத் திட்டம்’, ‘TB-Mukt Punchayat initiative’ ஆகிய திட்டங்களைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.
இந்தியாவின் இலக்கு
- உலகில் உள்ள காசநோயாளிகளில் 28% பேர் இந்தியாவில் இருக்கின்றனர் என்கிறது, உலகக் காசநோய் அறிக்கை (2022). 2020 - 2021ஆம் ஆண்டுகளில் கரோனா பெருந்தொற்றுகாரணமாக நாட்டில் புதிய காசநோயாளிகளைக் கண்டறிவதில் மோசமான தேக்கம் ஏற்பட்டது.
- 2020இல்18.05 லட்சம் புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டார்கள். 2021இல் இந்த எண்ணிக்கை 21.3 லட்சம்; 2022இல்24.2 லட்சம். 2017இல் வரையறுக்கப்பட்ட தேசியக் காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் இலக்கு என்னவென்றால், நாட்டில் 2025ஆம் ஆண்டுக்குள் ஒரு லட்சம் பேரில் மொத்தம் 65 பேருக்கு மேல் காசநோயாளிகள் இருக்கக் கூடாது; அல்லது 44 பேருக்கு மேல் புதிதாகக் காசநோயாளிகளாக ஆகியிருக்கக் கூடாது என்பதுதான். மேலும், 3 பேருக்கு மேல் காசநோயால் இறந்திருக்கக் கூடாது.
- ஆனால், 2021ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஒரு லட்சம் பேரில் 210 பேருக்குக் காசநோய் இருக்கிறது. 2020ஆம் ஆண்டின் புள்ளிவிவரப்படி, ஒரு லட்சம் பேரில் 37 பேர் காசநோயால் இறந்திருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேலாக, காசநோயாளிகள் ஒரு பைசாகூட சொந்தக் காசைச் சிகிச்சைக்குச் செலவழிக்கக் கூடாது என்பதே அரசின் இலக்கு. ஆனால், 32% காசநோயாளிகள் தங்கள் சொந்தக் காசில்தான் சிகிச்சை பெறுகின்றனர்.
புதிய முன்னெடுப்புகள்
- காசநோயாளிகளை ஆரம்பகட்டத்திலேயே கண்டறிந்து, முறையான சிகிச்சை அளித்து, கடைசிவரை அவர்களைக் கண்காணித்து, இந்த நோய் அடுத்தவருக்குப் பரவாமல் தடுக்கும் புதிய உத்திகளைக் கையாள மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. அதன்படி, புதிய காசநோயாளிகளைக் கண்டறிந்து, சிகிச்சைகள் குறித்த பின்னூட்டம் தருவதற்குச் சிறப்புச் சுகாதார மையங்கள், JEET தனியார் அமைப்புகள், இணையதளம், செயலி (Ni-kshay portal) ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.
- காசநோய் ஒருவருக்கு உண்டாகியிருந்தால், அது குறித்து சுகாதாரத் துறைக்கு முழுமையான தகவல் கிடைப்பதில்லை. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்கள் அது பற்றிய தகவலை உடனடியாகச் சுகாதாரத் துறைக்குத் தெரிவிப்பதில்லை. இது காசநோயை ஒழிப்பதற்குப் பெரும் தடையாக இருந்தது. எனவே, இந்தியாவில் காசநோய் ஒழிப்புத் திட்டத்தில், காசநோய் உடனே தெரிவிக்கப்பட வேண்டிய ஒரு நோயாக 2012இல் பிரகடனப்படுத்தப்பட்டது.
- மேலும், தனியார் மருத்துவர்கள் கண்டறிந்து தெரிவிக்கும் ஒவ்வொரு புதிய காசநோயாளிக்குச் சிகிச்சை முடிந்த பிறகு மருத்துவருக்கு ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தது. அதன் பிறகு, இந்தக் குறை சீராகி வருகிறது. 2022இல் மட்டும் 7.3 லட்சம் பேருக்குப் புதிதாகக் காசநோய் வந்திருப்பதாகத் தனியார் மருத்துவர்கள் தெரிவித்துள்ள ஒரு புள்ளிவிவரம் இதை உறுதிசெய்கிறது.
- காசநோய் ஒழிப்பில் பொதுச் சமூகத்தினரின் பங்கும் இருக்க வேண்டும் என்பதற்காக, தனியார் சேவைக் கழகங்களையும் ஈடுபடுத்திவருகிறது மத்திய சுகாதாரத் துறை. இதுவரை 71,460 கழகங்கள் (Ni-kshay Mitras) சுமார் 10 லட்சம் காசநோயாளிகளைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளைக் கொடுத்துஉதவுகின்றன. அரசும் ஒவ்வொரு காசநோயாளிக்கும் உணவுக்காக மாதம் ரூ.500 மானியம் வழங்குகிறது.
சிகிச்சையில் சிக்கல்கள்
- காசநோய்க்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்ட இரண்டு மாதங்களில் நோயின் அறிகுறிகள் மறைந்துவிடுவதால், நோய் குணமாகிவிட்டது எனக் கருதிப் பெரும்பாலான நோயாளிகள் மருந்துகளைப் பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.
- இந்த நோய் இந்தியாவில் அதிகம் பரவுவதற்கு இந்தப் பொறுப்பின்மையும் அறியாமையும் முக்கியக் காரணங்கள். மேலும், இந்த நோய் வந்தவர்கள் பெரும்பாலும் ஏழைகளாகவும், படிப்பறிவு இல்லாதவர்களாகவும் இருப்பதால், இதற்கு முழுமையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற அவசியத்தைஅவர்கள் புரிந்துகொள்வதில்லை; தொடர் சிகிச்சைஎடுத்துக்கொள்ள அவர்களின் வறுமை அனுமதிப்பதில்லை.
- இப்படிப் பாதியில் சிகிச்சையை நிறுத்திவிடும்போது, காசநோய்க் கிருமிகள் அதற்கான முதல்நிலை மருந்துகள் பலன் தராத வகையில் எதிர்ப்புச் சக்தியைப் பெற்றுவிடுகின்றன. இதன் விளைவாக, மருந்துக்குக் கட்டுப்படாத காசநோயாக (Multi Drug Resistance TB) அது உருமாறுகிறது. இதற்கு இரண்டு ஆண்டுகள் சிகிச்சை எடுக்க வேண்டும். 2022 ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் இந்த நிலைமையில் 63,801 பேர் இருக்கிறார்கள்.
- இந்த நிலைமையைத் தடுக்க, காசநோயை ஆரம்பத்திலேயே துல்லியமாகக் கண்டறிந்து, முதல்நிலை மருந்துகளுக்குக் கட்டுப்படும் நோயா, கட்டுப்படாத நோயா என்பதைத் தெரிவிக்கும் CBNATT பரிசோதனைக் கருவியை எல்லா மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் அரசு அமைத்துள்ளது. இந்திய அளவில் மொத்தம் 4,760 கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
- அதிகச் செலவு பிடிக்கும் இந்த வசதியைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காசநோயாளிகளும் இலவசமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். அத்துடன், காசநோய்க்கான முதல்நிலை மருந்துகளைத் தனியார் மருத்துவமனைகளில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளவும் அரசு வழிசெய்துள்ளது.
- முதல்நிலை மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதற்கென உள்ள விலை கூடிய ‘பிடாகுயிலின்’ (Bedaquiline), ‘டிலமாநிட்’ (Delamanid) மருந்துகளும் அரசு மருத்துவமனைகளில் மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாகக் கிடைக்க அரசுஏற்பாடு செய்துள்ளது. இவ்வளவு முன்னெடுப்புகளுக்குப் பிறகும் காசநோயை ஒழிப்பது என்பது அரசு இயந்திரத்துக்குப் பெரிய சவாலாகவே உள்ளது.
சவாலை எதிர்கொள்ளல்
- இந்தியாவில் 68% பேர் காசநோய் அறிகுறிகளை அலட்சியப்படுத்துகிறார்கள்; 18% பேர் நோயைக் கணிக்கத் தவறுகிறார்கள்; 12% பேர் சுயமருத்துவம் செய்துகொள்கிறார்கள் என்கிறது தேசிய காசநோய் அறிக்கை (2022). பொதுவாக, இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் சளி, இருமல், இரவு நேரக் காய்ச்சல் ஆகிய அறிகுறிகளை அலட்சியம் செய்யக் கூடாது.
- இவற்றுக்குச் சுயமருத்துவம் செய்துகொள்ளக் கூடாது. மாறாக, அரசு அல்லது தனியார் மருத்துவரிடம் முறையாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். காசநோய் உறுதியானால், ஆறு மாதங்களுக்கு இடைவிடாமல் மருந்து சாப்பிட வேண்டும். இது 100% குணமாகும் நோய் எனும் புரிதல் வேண்டும்.
- காசநோயாளிகளிடமிருந்து உறவினர்கள் ஒதுங்கிப் போகாமல், அவர் முழுமையாகச் சிகிச்சை பெற ஒத்துழைப்பு தர வேண்டும். காசநோயாளியின் வீட்டில் உள்ளவர்களும் நெருக்கமானவர்களும் காசநோய்க்கான பரிசோதனைகளை ஆரம்பத்திலேயே மேற்கொண்டுவிட வேண்டும். முதியோர், ஊட்டச்சத்துக் குறைந்தவர்கள், புகைபிடிப்போர், மது அருந்துவோர், நீரிழிவு உள்ளவர்கள், ஹெச்.ஐ.வி. தொற்றாளர்கள் ஆகியோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
- காசநோயை ஒழிக்க அரசு எடுக்கும் அவ்வளவு முன்னெடுப்புகளுக்கும் நாம் ஒவ்வொருவரும் கைகொடுக்க வேண்டும். அப்போதுதான், ‘காசநோய் இல்லாத இந்தியா’வை விரைவில் உருவாக்க முடியும்.
நன்றி: தி இந்து (03 – 04 – 2023)