TNPSC Thervupettagam

காட்டின் மொழி

June 10 , 2023 581 days 415 0
  • காட்டின் மொழி என்பது வரி வடிவமில்லாத ஓர் ஒலிக்குறிப்பு. இவற்றை ஆதிகாலம் தொட்டு, இன்று வரை கடைப்பிடித்து வருபவர்கள் காடுகளில் பரம்பரை பரம்பரையாக வசித்துவரும் பழங்குடிகளே. தென்னிந்தியக் காடுகளில் பல்வேறு பிரிவுகளாகப் பழங்குடிகள் வாழ்ந்து வந்தாலும், காடுகளிலேயே பிறந்து, அங்கேயே வளர்ந்து, அங்கேயே வாழ்ந்து, அங்கேயே மறைந்தும்போகும் அவர்கள் ‘காட்டின் மைந்தர்கள்’. இந்தப் பழங்குடியினரில் முக்கியமானவர்கள் பூசாரிகள், இருளர்கள், காட்டுநாயக்கர்கள், குரும்பர்கள், சோளகர்கள், செஞ்சுகள்.
  • அதாவது காடுகள், காட்டுயிர்கள் ஆகியவற்றின் குணங்களை, பண்புகளைப் பரம்பரை பரம்பரையாக இயல்பூக்கத்தினால் அறிந்து, காட்டைத் தன் வாழ்வாதாரமாகக் கொண்டு, வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தும் பழங்குடியினரைத் தவிர வேறு யாரால் காட்டின் மொழியைச் சிறப்பாக அறிந்திருக்க முடியும்?

அரிய பண்புகள்:

  • இவர்கள் எளிமையானவர்கள், சாதுவானவர்கள், குறைவாக உடையணியும் வழக்கமுடையவர்கள். அவர்கள் உண்ணும் உணவுகூட எளிமையானதாகவே இருக்கும். ஆனால், கடினமாக உழைக்கக் கூடிய, சவால்களைச் சந்திக்கும், காடுகள் சார்ந்த எந்தப் பணியையும் சுணங்காமல் செய்யக்கூடியவர்கள். அவர்களின் உடல் அமைப்பைப் பார்த்துக் குறைத்து மதிப்பிட்டால், ஏமாந்து விடுவோம்.
  • அந்நியர்களிடம் சட்டெனப் பழகிவிட மாட்டார்கள். ஆனால், பழகி நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால், சவாலான நேரத்தில் தங்கள் உயிரைக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு பழங்குடி தன் உயிரைப் பணயம் வைத்து தன்னுடன் வந்த ஒரு வேட்டைக்காரரைக் காப்பாற்றிய வரலாற்றை நான் அறிவேன்.
  • நாம் கற்பனைகூட செய்ய இயலாத அளவுக்கு அவர்கள் காடுகளையும் காட்டுயிர்களையும், மலை, குகை, பள்ளத்தாக்கு, ஆறுகள், ஓடைகள் ஆகியவற்றையும் பற்றிய மிகச் சிறந்த அறிவைப் பெற்றுள்ளனர். இதற்குக் காரணம் பிறப்பு, வளர்ப்பு, குடும்பம், இறப்பு எனக் குழந்தைப் பருவத்திலிருந்தே தன் ஆயுள் காலம் முழுவதும் அவர்கள் காடுகளிலேயே கழிப்பதால்தான்.
  • பழங்குடியினருடைய வாழ்க்கை முறை, பண்பாடு, சடங்கு-சம்பிரதாயங்கள் ஆகியவை, மற்றப் பிரிவினர்களிடமிருந்து மாறுபடலாம். ஆனால், தலைமுறை தலைமுறையாக வாழ்க்கைப் போராட்டத்தால் அவர்கள் பெற்ற காட்டு அறிவு, எல்லாப் பழங்குடிகளிடமும் ஒத்துப்போவதில் வியப்பேதுமில்லை.

பழங்குடிகளின் காட்டு அறிவு:

  • ‘பொதுவாகக் காட்டு விலங்குகள் மூர்க்கமானவை அல்ல. விதி விலக்கின்றி அவை எல்லாமே மனிதர்களைக் கண்டு அஞ்சுகின்றன. அவை மனிதர்களைச் சந்திப்பதைத் தவிர்க்கின்றன’ என்கிறார்கள் பழங்குடிகள். ‘காட்டு விலங்கு களிலேயே தவிர்க்க வேண்டியவை, யானைகள் -குறிப்பாகக் குட்டியுடன் இருக்கும் பெண் யானை, கரடிகள்தாம்’ என்று அவர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள்.
  • முன்பு வேட்டையாடவோ (தற்போது வேட்டை முற்றிலும்தடை செய்யப்பட்டுவிட்டது), காடுகளைச் சுற்றிக்காட்டவோ நம்மை அழைத்துச் சென்றால், பழங்குடிகள் கூறும் முதல் விதி,நாம் எந்தவிதமான சப்தத்தையும் எழுப்பக் கூடாது என்பதுதான். அதே நேரம் காட்டில் ஒரு சிறு குச்சி உடையும் சத்தம் கேட்டாலும், நின்று கவனித்து, ஒலி எழுந்ததற்கான காரணம் என்ன என்பது தெரிந்த பின்தான் முன்னேற வேண்டும் என்பார்கள்.
  • காட்டில் சிறிது தூரத்தில் ஒரு வேங்கைப் புலியையோ, சிறுத்தை யையோ பார்த்தால், அசையாமல் நின்று அதைச் சாதாரணமாகச் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால்,தூரத்தில் ஒரு கிளை உடைக்கப்படும் சத்தம் கேட்டால், நின்று ‘யானை’ என்று நம் காது அருகில் கிசுகிசுத்து விட்டு, அந்த சப்தம் வந்த திசைக்கு அருகில்கூட செல்லாத வகையில் சிறிது தூரம் சென்று, சுற்றி வளைத்துக் கொண்டுதான் மேலே அழைத்துச் செல்வார்கள்.
  • பொதுவாகக் காட்டு யானைகள் தீங்கு செய்யாத விலங்குகள்தாம். ஆனால், அடிக்கடி மனம் மாறக் கூடியவை. கோபம், பயம், ஆத்திரம் ஆகியவற்றிற்கு அடிக்கடி ஆள்படும். ஆகவே அவை எப்படி எதிர்வினையாற்றும் என்பது தெரியாது. மேலும் ஒரு யானையைப் போல மற்றொரு யானை நடந்து கொள்ளாது. ஆகவே தவிர்த்துவிட வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. அதுவும் இல்லாமல் யானைகளுக்கு வெண்மையான நிறம் வெறுப்பை ஏற்படுத்தக் கூடியது. ஆகவே காட்டினுள் செல்லும்போது காக்கி அல்லது அடர் பச்சை நிற உடை அணிந்து வர வற்புறுத்துவார்கள்.

பூசாரிகளின் தனித்திறன்:

  • பூசாரி இனப் பழங்குடிகள் மோப்ப சக்தியால் விலங்குகளை அடையாளம் காணக் கூடியவர்கள். உண்மையான காட்டின் மைந்தர்கள். புலி அல்லது சிறுத்தை காட்டிலுள்ள மலைக்குகைகளில் பதுங்கி இருந்தால், அந்தப் பகுதிக்குச் சென்று மோப்பத்தினால், எந்தக் குகையில் அந்த விலங்கு பதுங்கி உள்ளது என்பதைக் கூறிவிடக்கூடியவர்கள். நாகரிகமானவர்கள் என்று பெருமையடித்துக்கொள்ளும் நமக்கு எப்படி முகர்ந்து பார்த்தாலும் அந்தக் குகையில் ஒரு புலியோ சிறுத்தையோ இருக்கக்கூடும் என்று அறியக்கூடிய எந்த நாற்றமும் தெரியாது.
  • மேலும் மரத்தின் மீது அல்லது தரையிலுள்ள புதர்களில் பரண் அமைப்பதில் கை தேர்ந்தவர்கள். வெளியிலிருந்து வருபவர்கள், அந்தப் பரண்களில் பதுங்கி இருந்துதான் அந்த வழியே செல்லும் விலங்குகளை வேட்டையாடவோ, ஒளிப்படம் எடுக்கவோ முயல்வார்கள். அந்த மாதிரி இடங்களில் ஒரு பரண் அமைத்து ஆள் பதுங்கி இருப்பார்கள் என்கிற சந்தேகமே எழாதவாறு அவர்களுடைய வேலைப்பாடு அமைந்திருக்கும்.

அரிய கொடை:

  • செஞ்சுகள் வில் அம்பை எப்போதும் தாங்கியிருப்பார்கள். குறிபார்த்து அம்பு எய்து சிறு விலங்குகளை வேட்டை யாடுவதில் மிக்க திறமை வாய்ந்தவர்கள். உயரமான மலையிடுக் குகளின் உள்ளே உருவாக்கப் பட்டிருக்கும் தேனடைகளை மிகச் சாமர்த்தியமாக உயிரைப் பணயம் வைத்து எடுத்து வருவார்கள்.
  • காட்டின் எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தையும், இரவு நேரத்தில் எந்த விளக்கு வெளிச்ச உதவியும் இல்லாமலேயே, துல்லியமாகக் கண்டுபிடிப்பதில் வல்லவர்கள். காட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில், குறிப்பிட்ட விலங்கை இந்த நேரத்தில் காணலாம் என்று அழைத்துச் சென்று காட்டுவார்கள்.
  • எல்லாப் பழங்குடி மக்களும், காடுகளில் ஒலிக்கும் விலங்குகள், பறவைகள் ஆகியவற்றின் சப்தத்திற்கு நிச்சயம் ஒரு பொருள் உண்டு என உறுதியாகக் கூறுகிறார்கள். அவை தங்களுக்கு ஏற்படும் மகிழ்ச்சி, வருத்தம், பயம், எச்சரிக்கை, கோபம், அன்பைப் பகிர்தல், துணையை அழைத்தல், வேதனையை வெளிப்படுத்துதல், தன் குட்டிகள், குஞ்சுகளைப் பாசத்தோடு அழைத்தல் ஆகிய ஒவ்வொன்றுக்கும் ஒரு வகையான சப்தத்தை எழுப்புகின்றன என்று கூறியதோடு, அதை நிரூபித்தும் காட்டியிருக்கிறார்கள்.
  • வருங்கால சந்ததியினர், எந்தச் செல்வத்தைக் கொடுத்தும் விலைகொடுத்து வாங்க முடியாத, எந்தப் புத்தகத்திலும் படித்துத் தெரிந்துகொள்ள இயலாத, காடுகளை, காட்டுயிர் பற்றிய அறிவுச் செல்வங்களை வழங்கும் இம்மக்களின் பணி, நாகரிகம் என்கிற பெயரில், இயற்கையை நேசிக்கத் தெரியாத அல்லது நேசிக்க இயலாத நமக்கு நிச்சயமாக ஒரு பெரும் கொடை என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

நன்றி: தி இந்து (10 – 06 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories