TNPSC Thervupettagam

காண முடியாததைத் தேடுங்கள்!

July 21 , 2024 175 days 130 0
  • பொருளாதாரம் மேம்பட வேண்டுமே என்று கவலைப்படும் பிற நலம் விரும்பிகளைப் போலவே நானும் ஒவ்வொரு ஆண்டும் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்படும் நாளில் அதைக் கவனமாக படிக்கிறேன், அது பற்றியே சிந்திக்கிறேன், அதைப் பற்றி எழுதுகிறேன் – அதேசமயம் நாடாளுமன்ற கட்டிடத்தைவிட்டு ஏமாற்றத்தோடு வெளியேறுகிறேன்.
  • பிறகு மக்களிடம் சென்று வாழ்வின் வெவ்வேறு நிலைகளில், வெவ்வேறு துறைகளில் வாழ்வோரிடம் அது குறித்துப் பேசுகிறேன்; சட்டமன்ற உறுப்பினர்கள், பொருளாதார அறிஞர்கள், தொழிலதிபர்கள், விவசாயிகள், மகளிர், இளைஞர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக - கட்சித் தொண்டர்கள் ஆகியோரின் கருத்துகளையும் கேட்கிறேன்.
  • நிதிநிலை அறிக்கை குறித்து மக்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் – குறிப்பாக கடைவீதிகளில் பேசப்படுவது என்ன – என்று கள நிலவரத்தைத் தெரிவிக்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். கடந்த பத்தாண்டுகளாகவே நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் ஒவ்வொரு ஆண்டும், 48 மணி நேரத்துக்கெல்லாம் – அதாவது இரண்டு நாள்களுக்குள் - அதைப் பற்றிய உரையாடல்கள் சுவடே இல்லாமல் ஓய்ந்துவிடுகின்றன.

கடினமான சவால்கள்

  • நிதிநிலை அறிக்கை குறித்து மக்களிடையே இப்படி ஆர்வம் கரைவதற்கு முக்கிய காரணம், அதைத் தயாரிப்பவர்களுக்கு சாமானிய மக்களுடன் தொடர்புகள் இல்லை, உண்மையான பொருளாதார நிலைமை குறித்து தகுந்த புரிதல்களும் இல்லை, சார்புகள் இல்லாத நடுநிலையான அணுகுமுறையும் இல்லை என்பதுதான்.
  • இதோ, 2024 - 2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் இந்த மாதம் 23ஆம் நாள் நாடாளுமன்றத்தில் படிக்கப்படப்போகிறது. பொருளாதார நிலைமையை நடுநிலையோடு ஆய்வுசெய்தால் பின்வரும் உண்மைகள் தெரியவரும்:

வேலைவாய்ப்பின்மை:

  • படித்த இளைஞர்களுக்கு வேலை கிடைக்காதது குடும்பங்களுக்கும் சமூக அமைதிக்கும் பெரிய பிரச்சினையாகிவருகிறது. மிகச் சில வேலைவாய்ப்புகளுக்கு ஆயிரக்கணக்கானவர்கள் போட்டி போடுகின்றனர்; நிரந்தரமான நல்ல வேலை என்றால் லட்சக்கணக்கானவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர், நேர்காணலுக்குக் குவிகின்றனர். அத்தகைய தேர்வுகளுக்கான வினாத்தாள்கள், தேர்வுக்கு முன்னதாகவே கசிகின்றன. லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அவை கள்ளத்தனமாக வாங்கப்படுகின்றன. இது தெரியவருவதால் கடைசி நிமிஷத்தில் தேர்வுகள் அல்லது நேர்காணல்கள் ரத்துசெய்யப்படுகின்றன. இது லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு மிகப் பெரிய துயரத்தையும் மன உளைச்சலையும் ஏற்படுத்துகிறது. இவையெல்லாம் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொதிநிலை விளைவாகவே ஏற்படுகின்றன.
  • சிஎம்ஐஇ தகவல்படி, அனைத்திந்திய அளவில் வேலையில்லாத் திண்டாட்டம் 9.2%. வேளாண் துறை, கட்டிட கட்டுமானத் துறை, நிரந்தர வேலையில்லாத – தாற்காலிக அடிப்படையிலான சேவைத் துறை (கிக்) ஆகியவற்றில்தான் வேலைகள் அதிகம் கிடைக்கின்றன. (வேளாண் துறையில் கிடைப்பது வேலைவாய்ப்பல்ல, படித்த படிப்புக்குச் சிறிதும் தொடர்பில்லாத, கல்வித் தகுதிக்குச் சிறிதும் பொருத்தமில்லாமல் குறைந்த ஊதியம் தரும் சாதாரண வேலைகளாகும். கட்டிட கட்டுமானத் துறையில் வேலைகள் ஆண்டு முழுவதும் இருக்காது. சேவைத் துறையில் வேலை நிரந்தரமில்லாதது, பணிப்பாதுகாப்பும் அற்றது).
  • இளைஞர்கள் முறையான, உத்தரவாதமுள்ள, ஓரளவுக்கு நியாயமான ஊதியம் தரும் கண்ணியமான வேலைகளைத்தான் விரும்புகிறார்கள். அந்த வேலையும், அரசுத்துறைகளிலோ அரசால் நிர்வகிக்கப்படும் பொதுத் துறைகளிலோ கிடைப்பதைப் பெரிதும் விரும்புகிறார்கள். 2024ஆம் ஆண்டு தொடக்கத்தில் அரசு – அரசுத் துறைகளில் மட்டும் 10 லட்சம் காலியிடங்கள் இருப்பது தெரிகிறது, ஆனால் அவற்றையெல்லாம் நிரப்பிவிட வேண்டும் என்ற ஆர்வம் ஒன்றிய அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை.
  • இதேபோன்ற வேலைவாய்ப்புகளை உற்பத்தித் துறைகளிலும் (மேனுஃபாக்சரிங்), உயர் மதிப்பு பணப் பரிமாற்றங்கள் நிகழும் நிதி சேவைத் துறையிலும், தகவல் தொழில்நுட்பத் துறையிலும், கப்பல் போக்குவரத்திலும், விமானப் போக்குவரத்திலும், விருந்தோம்பல் துறையிலும், மருத்துவம் – உடல் நலப் பராமரிப்பு, கல்வி, அறிவியல் – தொழில்நுட்ப ஆராய்ச்சி வளர்ச்சி ஆகிய துறைகளிலும் ஏற்படுத்த முடியும்.
  • உற்பத்தித் துறையில், நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் 15% அளவுக்கே, உற்பத்தி மதிப்பானது தேக்க நிலையில் இருக்கிறது, காரணம் தொழில்முனைவோர்கள் மேற்கொண்டு முதலீடு செய்யத் தயங்குகிறார்கள். உற்பத்தித் துறையிலும், உயர் பணமதிப்புள்ள சேவைத் துறைகளிலும் விரைவான வளர்ச்சி ஏற்பட வேண்டும் என்றால் அரசு இப்போது கடைப்பிடிக்கும் பொருளாதாரக் கொள்கைகளைப் புரட்சிகரமாக திருத்திக்கொள்ள வேண்டும், அன்னிய முதலீட்டையும் அன்னிய வர்த்தகத்தையும் பல மடங்கு பெருக்கவல்ல கொள்கை முடிவுகளைத் துணிச்சலாக எடுக்க வேண்டும்.

விலைவாசி உயர்வு என்கிற பணவீக்கம்:

  • விலை உயர்வும் பணத்தின் மதிப்பு சரிவதும் மிகப் பெரிய சவால்கள். அரசே கணக்கிடும் மொத்த விலை குறியீட்டெண் 3.4%, நுகர்வோர் விலை குறியீட்டெண் 5.1%, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை குறியீட்டெண் 9.4%. இந்தியா முழுவதும் சந்தை ஒற்றையாகவோ நன்கு இணைக்கப்பட்டதாகவோ இல்லாததால், விலைவாசியும் பொருள்கள் கிடைப்பதும் மாநிலங்களுக்கு மாநிலமும் - மாநிலங்களுக்குள்ளேயே வெவ்வேறு பகுதிக்குள்ளும் மாறுபடுகின்றன.
  • அதிக ஊதியமும் வருமானமும் பெறும் மேல்தட்டு சமுதாயத்தின் 20% முதல் 30% வரையுள்ள மேட்டுக்குடிகளைத் தவிர மற்றவர்கள் அனைவருமே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அது குறித்து எரிச்சலடைந்து குற்றஞ்சாட்டுகின்றனர், பெரும்பாலானவர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.
  • இவ்விரு முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக நிதிநிலை அறிக்கையில் அமைச்சர் என்ன சொல்கிறார், எத்தனை கோடிகளை இவற்றுக்காக ஒதுக்குகிறார் என்பதைப் பாருங்கள். அவற்றில் உங்களுக்குத் திருப்தி ஏற்பட்டால் அதிகபட்சம் 50 மதிப்பெண்கள் வரைகூட அளியுங்கள்.

வேறு இரு சவால்கள்

  • எஞ்சிய 50 மதிப்பெண்களைக் கல்வி, சுகாதாரம் (மருத்துவம் - உடல் நலம் பேணல்), மக்களுடைய இதர முன்னுரிமைகள் ஆகியவற்றுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது, அதற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதைப் பார்த்து அளியுங்கள். உலக தரத்துக்குக் குறைந்ததாக நம்முடைய கல்வியும், சுகாதார கட்டமைப்பும் இருக்கிறவரை நம்மால் வளர்ச்சிபெற்ற நாடாக உயரவே முடியாது.

கல்வி:

  • குறிப்பாக பள்ளிக்கூடக் கல்வி - சந்தேகத்துக்கு இடமில்லாமல் வெகுவாக விரிவடைந்திருந்தாலும் மிகவும் மோசமான தரத்தில்தான் இருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சராசரியாக 7 அல்லது 8 ஆண்டுகளைப் பள்ளியில்தான் செலவிடுகின்றன. பள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகளில் பாதிப்பேரால் சாதாரண உரைநடைகளைக்கூட (அவரவர் தாய் மொழிகளில்) சரளமாகப் படிக்க முடிவதில்லை, சாதாரண கூட்டல் – கழித்தல் – பெருக்கல் - வகுத்தல் கணக்குகளைக்கூடப் போட முடியவில்லை.
  • இந்தக் குழந்தைகள் படிப்பை முடிக்கும்போது எந்தவிதமான வேலைகளையும் செய்யும் திறனோடு வருவதில்லை. நாடு முழுக்க, ஓராசிரியர் பள்ளிக்கூடங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கின்றன. அரசுப் பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகள், கழிப்பறைகள், மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதற்கான காட்சி விளக்கக் கருவிகள் ஆகியவற்றில் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது; நூலகங்கள் – அறிவியல் ஆய்வுக்கூடங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
  • ஒன்றிய அரசு இந்த அடிப்படை பிரச்சினைகளைத் தீர்க்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்த வேண்டும், அத்துடன் வேண்டிய வகையில் அவற்றுக்கு உதவிகளையும் அளிக்க வேண்டும், தேசிய கல்விக் கொள்கை, தேசிய பொதுத் தேர்வு முகமை, நீட் தேர்வு போன்ற ஊழல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக் கூடாது.

சுகாதார வசதிகள்:

  • மருத்துவ – சுகாதார வசதிகள் கடந்த காலங்களைவிடப் பரவாயில்லை என்றாலும் போதுமான அளவில் இல்லை. பொது சுகாதார வசதிகள் எண்ணிக்கை அளவில் உயர்கின்றன, தரம் போதவில்லை. பொது சுகாதாரத்துக்காக மக்கள் சொந்தப் பணத்தைச் செலவிடுவது இன்றும் 47% ஆக இருக்கிறது. (குடும்பநலம் - சுகாதார அமைச்சக அறிக்கை).
  • தனியார் துறையில் மருத்துவ – சுகாதார வசதிகள் தரத்திலும் எண்ணிக்கையிலும் பெருகுகின்றன. ஆனால், பெரும்பாலான மக்களால் அவற்றுக்காகும் செலவை சந்திக்கும் அளவில் இல்லை. ஒட்டுமொத்தமாகவே மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத் தொழில்நுட்பர்கள், நோயறிய உதவும் ஆய்வுக்கருவிகள், இயந்திரங்கள் ஆகியவற்றுக்குப் பெரும் பற்றாக்குறை நிலவுகிறது. சுகாதாரத் துறையில் அரசு செய்யும் செலவு ஜிடிபியில் கணக்கிடும்போது 0.28% முன்பைவிடக் குறைந்துவிட்டது, ஒட்டுமொத்த அரசு செலவில் 1.9% சரிந்துவிட்டது.
  • பொது சுகாதாரம் தொடர்பாக பொதுமக்களுடைய திருப்தியும் மிகவும் குறைவாகத்தான் இருக்கிறது.

வலுவான, அதிக வலுவான அறை

  • மக்களுடைய இதர முன்னுரிமைகளும் அரசால் புறக்கணிக்கப்படுவதால் மக்கள் வலுவான அறைகள், அதிக வலுவான அறைகளைத் தொடர்ந்து ஆளுங்கட்சிக்கு அளித்துவருகின்றனர். மக்களுடைய ஊதியங்கள் உயராமல் பல ஆண்டுகளாக தேக்க நிலையிலேயே இருக்கின்றன. குடும்பங்களின் கடன் சுமை பல மடங்காக உயர்ந்துகொண்டேவருகிறது. அவசியப் பண்டங்களைக்கூட வாங்கி நுகர்வது குறைந்துகொண்டேவருகிறது.
  • விவசாய விலை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைக்கு அரசு சட்டப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை புறக்கணிக்கப்படுகிறது. குழந்தைகளின் உயர்கல்விக்காக பெற்றோர் வாங்கும் கடன்களை அடைக்க முடியாமல் கடன் சுமை மென்னியைப் பிடிக்கிறது. ராணுவத்தில் நீண்ட கால – நிரந்தர வேலைவாய்ப்பைப் போக்கும் ‘அக்னிபத்’ தேர்வுமுறை ரத்துசெய்யப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகூட நிராகரிக்கப்படுகிறது.
  • மக்களுடைய பிரச்சினைகளையும் கோரிக்கைகளையும் புறக்கணிப்பது – அது மட்டுமல்லாமல் அவற்றை ஏளனம் செய்வது ஆகியவற்றால்தான் மக்களவை பொதுத் தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மையை இழக்கும் அளவுக்குத் தோல்வி ஏற்பட்டு, தொகுதிகளைக் கணிசமாக இழக்க நேர்ந்தது. ஆனால், அது குறித்து பாஜக வருந்தவில்லை. அரசும் அமைச்சர்களும் பொதுவெளியில் பேசுவதைக் கவனித்தால், தங்களுடைய ஆட்சி முறையில் உள்ள குறைகளை மறுபரிசீலனை செய்யும் எண்ணமும் அவர்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.
  • ஒரு சில பெருமுதலாளிகளுக்கு ஆதரவான தொழில் கொள்கை, பொருளாதாரத்தில் தானாக கசிந்து ஏற்படும் குறைந்த அளவு வளர்ச்சி, மூலதனத்தை அதிகம் நம்பியிருக்கும் பெருந்திட்ட முதலீடுகள், உள்நாட்டுத் தொழில் நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டிய அவசியமின்றிப் பாதுகாக்கும் காப்புவரிக் கொள்கை ஆகிய நிதி நிர்வாக நடைமுறைகளே தொடரும் என்று தெரிகிறது.
  • மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு, 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு வெவ்வேறு மாநிலங்களில் இந்த மாதம் நடந்த இடைத் தேர்தல்களிலும் மக்கள் மேலும் பலத்த அறையைக் கொடுத்திருக்கிறார்கள். ‘இந்தியா’ கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் 13இல் 10 இடங்களை வென்றதுடன் வாக்குச் சதவீதத்தையும் அதிகப்படுத்திக்கொண்டுள்ளன. சுவரில் எழுதப்பட்டுள்ள இந்த எச்சரிக்கைகளுக்கு ஏற்ப அரசின் நிதிநிலை அறிக்கை இருக்குமா?
  • கைகளைப் பிசைந்துகொண்டு காத்திருங்கள்!

நன்றி: அருஞ்சொல் (21 – 07 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories