- மீனா, பாத்திமா, கீதா, ஷாஜிதா, ஷெரின், பிரீத்தி, ஜென்ஸி… எந்தப் பெயர் வேண்டுமோ அதை வைத்துக்கொள்வோம். இவர்கள் இந்தியாவின் ஏதோவொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அல்லது உலகின் ஏதோவொரு நாட்டைச் சேர்ந்தவர்கள். அனைவருமே 9 முதல் 16 வயதுக்கு உள்பட்ட சிறுமியர்.
- மீனாவுக்கு 14 வயது. வளர்ப்புத் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் வீட்டை விட்டு வெளியேறினாள். ரயில் நிலையத்தில் மீனாவிடம் பேசிய பெண், மீனாவைப் பாலியல் விடுதி ஒன்றில் விட்டுவிட்டு மாயமாகிவிட்டார். அங்கே நாள் முழுக்க வீட்டு வேலைகளைச் செய்யும்படி வற்புறுத்தப்பட்ட மீனா, பாலியல் வன்முறைக்கும் ஆளாக்கப் பட்டாள். “இதைப் பற்றி அந்த விடுதி வார்டன்கிட்ட சொல்லியும் எந்தப் பலனும் இல்லை. விட்டமின் மாத்திரைன்னு சொல்லி எதையோ கொடுப்பாங்க. எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருக்கும். அதுக்கு அப்புறம் எதுவுமே பேச முடியாம சோர்ந்து போயிடுவேன்” என்று சொல்லும் மீனா, பாலியல் விடுதியில் தன் மீது நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தாள முடியாமல் தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். சிறு குழந்தைதானே. அப்படியாவது துயரிலிருந்து விடுபட மாட்டோமா என நினைத்தாள்.
- கொடுமைகளின் குரூரம் எல்லை மீறிய நாளொன்றில் உயிரைக் கையில் பிடித்தபடி அங்கிருந்து எப்படியோ தப்பித்து வீட்டுக்குத் திரும்பியவளை வீடு வெளியேற்றியது. “நான் ‘அந்த’ மாதிரி ஏரியாவில் இருந்து திரும்பியதால் வீட்டு கௌரவம் பாழாகிவிடும்னு என் அப்பா என்னை வீட்டுக்குள் விடவில்லை” என்று சொல்லும் மீனா, தனக்குப் பாதுகாப்பு தருவதாகச் சொன்ன பெண் ஒருவரை நம்பிச் சென்றாள். அந்தப் பெண் மீண்டும் மீனாவை வேறொரு பகுதியில் செயல் படும் பாலியல் விடுதிக்கு விற்றுவிட்டார்.
மீட்சியில்லாச் சிறை
- அங்கிருந்து மீனா தப்பிக்கக் கூடாது என்பதற்காக விடுதியின் உரிமையாளர் மீனாவைத் தவறான முறையில் வீடியோ எடுத்து மிரட்ட, நரக வேதனையை அனுபவித்தாள். பள்ளிக்குச் சென்று நண்பர்களோடு ஓடியாடி விளையாட வேண்டிய வயதில் ‘பாலியல் வர்த்தகம்’ என்னும் பேரலை மீனாவைச் சுழற்றி யடித்தது. தனியார் தொண்டு நிறுவன உதவியோடு அங்கிருந்து மீண்டு வர ஓராண்டு ஆனது. தற்போது மீனா வுக்கு 20 வயது. மீனாவை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இன்றுவரை எடுக்கப்படவில்லை.
- 11 வயது பிரீத்தி, பணத்துக்காக அம்மாவால் விற்கப்பட்டவள். ஷாஜிதா, காதலனை நம்பி மும்பைக்கு வந்தவள். பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் ஷெரின் கடத்தப்பட்டாள். பாலியல் விடுதிக்கு இவர்கள் வந்த விதம் வெவ்வேறாக இருந்தாலும், ஒரே மாதிரியான சித்ரவதைக்குத் தான் இவர்கள் ஆளாக்கப்பட்டார்கள். இவர்களில் மிகச் சிலரே மீட்கப்பட்டுக் குடும்பங் களோடு சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். பலரது வாழ்க்கையும் முடிவே இல்லாத கொடுஞ்சிறைக்குள் அடைபட்டிருப்பது தான் நிதர்சனம். உலகம் முழுவதும் கோடிக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் இப்படி வாழ்விழந்து போக யார் காரணம்?
- ஆண் மையச் சமூகத்தின் பார்வையில் பெண் என்பவள் ஒரு பொருள் அல்லது உடல். பிறந்தது முதலே பெரும்பாலான சமூகங்களில் பெண் குழந்தைகள் அப்படித்தான் வளர்த்தெடுக்கப்படுகிறார்கள். திருமணச் சந்தையில் விலைபோகக் கூடிய தகுதி படைத்தவளாகத் தங்கள் மகளை மாற்றுவதே பெரும்பாலான பெற்றோரின் இலக்காக இருப்பதை மறுப்பதற்கில்லை. குடும்பப் பொறுப்பு, கடமை போன்றவற்றின் பெயரால் பெண்கள் இப்படி நடத்தப்படுவது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் பெண்களே விற்பனைப் பண்டமாக்கப் படும் கொடுமையும் நிகழ்கிறது. அந்தக் கொடுமைக்குத்தான் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பெண்களையும் குழந்தைகளையும் பலிகொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
உலகளாவிய ‘வர்த்தகம்’
- மதம், மொழி, கலாச்சாரம் எனப் பல்வேறு காரணிகளால் நாடுகள் வேறுபட்டிருந்தாலும் பெண்களைப் பண்டங்களாக விற்பனை செய்வதில் உலகம் முழுவதும் ஒற்றுமை நிலவுவது கசப்பான உண்மை. உலகம் முழுவதும் நடைபெறும் ஆள்கடத்தலில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் என ஐ.நா. அறிவித்துள்ளது. இவர்கள்தாம் கடத்தல்காரர்கள் அணுக முடிகிற எளிய இலக்காக இருக்கிறார்கள். இந்தியாவில் 2021இல் 77,535 குழந்தைகள் காணாமல் போனதாகப் பதிவாகியிருப்பதாகத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத் தகவல் தெரிவிக்கிறது.
- 2021இல் எந்தவொரு நாளை எடுத்துக் கொண்டாலும் உலகம் முழுவதும் ஐந்து கோடிப் பேர் கடத்தப்பட்டிருக்கலாம் என உலகத் தொழிலாளர் அமைப்பின் ஆய்வு தெரிவிக்கிறது. இவர்களில் 79 சதவீதத்தினர் பெண்களும் குழந்தை களும் என்பது மனம் பதைக்கச் செய்கிறது. நாம் இதை வாசித்துக் கொண்டிருக்கும் இந்த நொடியில்கூட உலகின் ஏதோவொரு மூலையில் ஒரு பெண்ணோ சிறுமியோ குழந்தையோ கடத்தப்பட்டுக்கொண்டிருக்கலாம். மீண்டு வரவே முடியாத புதைகுழிக்குள் தாங்கள் தள்ளப்படவிருக்கிறோம் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது. பெண்களும் குழந்தைகளும் இப்படிக் கடத்தப்பட்டுக் கொண்டிருப்பதை ஏன் உலக நாடுகள் கண்டுகொள்வதில்லை? அடுத்த வாரம் பார்க்கலாம்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 02 – 2024)