TNPSC Thervupettagam

காத்திருக்கிறதா தண்ணீர்ப் பஞ்சம்

September 21 , 2023 478 days 449 0
  • இந்திய வானிலை ஆய்வு மையம் அண்மையில் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் தென்மேற்குப் பருவமழையானது, 42% மாவட்டங்களில் அதன்இயல்பைவிட மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியாவின் மொத்தமழையளவு இயல்பைவிட 32% குறைவு எனவும், தென் மாநிலங்களில் இம்மழையளவு இயல்பைவிட 62% குறைவு எனவும் தெரிய வந்திருக்கிறது.
  • கடந்த 122 ஆண்டுகளில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா பெற்றுள்ள மழை, மிகவும் குறைவானது. தென்மேற்குப் பருவமழை முடிவதற்கு ஏறக்குறைய ஒரு மாத காலம் மட்டுமே உள்ளதால், இம்மழைக் குறைவு விவசாயத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், பெரியளவில் தண்ணீா்ப் பஞ்சத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

நீர்ப் பஞ்சம்

  • இந்தியா நீர் வளம் அதிகம் உள்ளநாடாக இருந்தபோதிலும், விவசாய - தொழில் வளா்ச்சியில் சமீப காலத்தில் ஏற்பட்ட அதிவேக மாற்றங்களால் நீரின் தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஓா் ஆண்டில் நம் நாட்டில் பயன்படுத்தப்படக்கூடிய நிகர நீரின் அளவு 1,121 பிசிஎம் (billion cubic meter). ஆனால், மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நமது நாட்டின் நீா்த் தேவை, 2025இல் 1,093 பிசிஎம் ஆகவும், 2050இல் 1,447 பிசிஎம் ஆகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இதன்படி, இன்னும் 10 ஆண்டுக்குள் இந்தியாவில் பெரும் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படலாம். தனிநபா் பயன்பாட்டுக்கான தண்ணீரின் அளவு ஓர் ஆண்டில் எங்கெல்லாம் 1,700 கன மீட்டருக்குக் (cubic meter) கீழே உள்ளதோ அங்கே தண்ணீா்ப் பஞ்சம் உள்ளதாக உலக அளவிலான தண்ணீா் மதிப்பீடு பற்றிய குறியீடுகள் கூறுகின்றன. இதன்படி பார்த்தால், இந்தியாவில் ஏறக்குறைய 76% மக்கள் தற்போதும் தண்ணீா்ப் பஞ்சத்துடன் வாழ்கிறார்கள்.
  • தமிழ்நாட்டில் 1990-91க்கு முன்னதாகவே, தண்ணீா்த் தேவையானது அது கிடைப்பதைவிடக் குறைவு. உதாரணமாக, 2004இல் மொத்த நீா்த் தேவையானது 31,458 மில்லியன் கன மீட்டர். ஆனால், கிடைத்ததோ வெறும் 28,643 மில்லியன் கன மீட்டர் மட்டுமே. அதாவது, ஏறக்குறைய கடந்த 30 ஆண்டுகளாகவே நீா்ப் பற்றாக்குறையைச் சந்தித்துவருகிறது தமிழ்நாடு.

காரணங்கள்

  • மழைக் குறைவு மட்டும் நீா்ப் பஞ்சத்துக்குக் காரணமாக இருக்க முடியாது. 1990-91க்குப் பிறகு நீரின் தேவையானது பல்வேறு காரணங்களால் அதிகரித்துவருவதாகத் தரவுகள் கூறுகின்றன. ஆனால், புதிய நீராதாரங்களை உருவாக்குவதற்கும், பயன்பாட்டிலுள்ள நீராதாரங்களைச் செம்மைப்படுத்துவதற்கும் பெரிய திட்டங்கள் வகுக்கப்படவில்லை. அன்றாட நீா்த் தேவைகளை ஆறுகளும் குளங்களும் வீட்டுக் கிணறுகளும் பல ஆண்டுகளாகப் பூா்த்திசெய்தன. குளங்களைத் துார்வாரி பராமரிக்காத காரணத்தால், நன்கு மழை பெய்யும் ஆண்டுகளில்கூட நீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • மழை குறைவால் பல ஆண்டுகள் இந்தியாவில் வறட்சி ஏற்பட்டிருக்கிறது எனத் தரவுகள் தெரிவிக் கின்றன. ஆனால் சமீப காலத்தில், காலநிலையில் ஏற்பட்டுள்ள வேகமான மாற்றங்களால், மழை பொழியும் நாள்கள் குறைந்துகொண்டே வருகின்றன. காலநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழு (IPCC), காலநிலை வேகமாக மாறிவருவதாகவும், அதனால் மழை பொழியும் நாள்களும், மழையின் அளவும் குறையக்கூடும் எனவும் எச்சரித்துள்ளது.
  • மழை குறைவால் தண்ணீா்ப் பஞ்சம் ஏற்படும், இது மக்களின் வாழ்க்கையைப் பாதிப்பதோடு, கால்நடைகள், காட்டுயிர்கள், பறவைகளைக் கடுமையாகப் பாதிக்கும். தண்ணீர்ப் பஞ்சமானது சுற்றுச்சூழலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதோடு, பொருளாதாரச் சிக்கல்களையும் ஏற்படுத்தக்கூடும். நீா்ப் பற்றாக்குறை உள்ள நாடுகள், 2050இல் பொருளாதார வளா்ச்சியில் பெரும் பின்னடைவைச் சந்திக்கலாம் என்கிறது உலக வங்கி 2016இல் வெளியிட்ட காலநிலை மாற்றம் - நீா் தொடா்புடைய அறிக்கை.

செய்ய வேண்டியவை

  • புவி வெப்பமாதலால் எல் நினோ ஏற்பட்டு, மழையளவில் மாற்றம் என்பது புதிய இயல்பாக மாறிவருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு, நீர்ப் பஞ்சத்தைத் தவிர்க்க, நீர் சார்ந்த கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. நீரின் மகத்துவம் பற்றிய புரிதல் அரசு - பொதுமக்களிடம் குறைவாக உள்ளதால், நீா்ப் பஞ்சம் அடிக்கடி ஏற்படுகிறது. நீா்ப் பஞ்சத்தால் ஏற்பட்ட துயரங்களையும் வலிகளையும் மழைக் காலத்தில் மறந்து விடுகிறோம். இந்தச் சிந்தனை முதலில் மாற வேண்டும்.
  • காலநிலை மாற்றத்தால் மழையின் அளவும் பொழியும் நாள்களும் குறைந்துவருவதால், வரும் காலத்தில் மழைநீரைச் சேமிக்கப் பெரும் முயற்சி எடுக்க வேண்டும். தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குளங்களை மறந்துவிட்டு, நீா்ப் பஞ்சத்தைத் தீா்க்க முடியாது. இந்தியாவில் மொத்தம் 6.42 லட்சம் குளங்கள், ஏரிகள், குட்டைகள் உள்ளதாக மத்திய நீர்வள அமைச்சகம் வெளியிட்ட சிறு-குறு நீர்ப் பாசனக் கணக்கெடுப்பு சொல்கிறது.
  • தமிழ்நாட்டில் 41,127-க்கும் அதிகமான குளங்கள் - ஏரிகள் உள்ளன. ஆனால், பெரும்பாலான குளங்கள் இன்று அரசு - தனியார் அமைப்புகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற நீா்வள நிலைக்குழு தனது 16ஆவது அறிக்கையில் கூறியுள்ளது. 2023இல் மத்திய நீர்வள அமைச்சகம் முதன்முதலாக வெளியிட்டுள்ள நீா்நிலைகள் பற்றிய மொத்தக் கணக்கெடுப்பு, இந்தியாவில் 38,486 நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறிந்துள்ளது.
  • மொத்தமாகப் பயன்படுத்தப்படும் நீரில் ஏறக்குறைய 85% தற்போது வேளாண் துறை பயன்படுத்தி வருகிறது. பயிர் சாகுபடி முறையில் மாற்றம் செய்வதன் மூலம் இதைக் குறைக்க முடியும். அதிகமாக நீரைக் குடிக்கும் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களின் பரப்பளவைக் குறைத்து, குறைவாக நீரைக் குடிக்கும் பருப்பு, எண்ணெய் வித்துப் பயிர்களின் பரப்பளவை அதிகரிக்க, பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
  • செயல்பட வேண்டிய நேரம்
  • நுண் (drip and sprinkler) நீா்ப் பாசனம் மூலம் பயிர் சாகுபடியில் ஏறக்குறைய 50% நீரைச் சேமிப்பதோடு 40-60% பயிர்களின் மகசூலை அதிகரிக்க முடியும் எனப் பேராசிரியர் எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்ட நுண் நீர் பற்றிய குழுவின் அறிக்கை கூறுகிறது. மொத்தமாக 70 மில்லியன் ஹெக்டோ் இப்புதிய நீா்ப் பாசன முறைக்கு உகந்தது எனக் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த நுண் நீர்ப்பாசன முறைகளைப் பெரும் தண்ணீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலும், அதிக நீா் தேவைப்படும் பயிர்களுக்கும் பயன்படுத்த கட்டாயப் படுத்த வேண்டும்.
  • நீா் சாதாரணப் பொருளல்ல, அது ஒரு விலையுயர்ந்த பொருளாக மாறிவருகிறது என்பது பற்றிய நீா் சார்ந்த அறிவை மக்களிடம் கொண்டுசெல்ல வேண்டும். பருவமழை குறைவால், வருங்காலத்தில் மோசமான நீா்ப்பஞ்சம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. நீா்ப்பஞ்சத்தால் 2018இல் தென் ஆப்ரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் தண்ணீா் ரேஷன் முறைப்படி கொடுக்கப்பட்ட கொடுமை நமக்கும் நேரிடலாம்.
  • நீர்ப் பஞ்சம் மூலம் உணவுப் பஞ்சம் ஏற்படும். எனவே, குறைவான மழை பொழியும் காலத்தில் முடிந்த அளவுக்கு நீரைச் சேமித்து, அதன் பயன்பாட்டுத் திறனை அதிகரிக்க வேண்டும். இல்லையென்றால், தண்ணீர்ப் பஞ்சம் தவிர்க்க முடியாததாகிவிடும்!

நன்றி: இந்து தமிழ் திசை (21 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories