TNPSC Thervupettagam

காத்திருக்கும் அழகிய இந்திய விடியல்!

September 16 , 2019 1952 days 1598 0
  • சுற்றுலா என்பது இன்றைய மனிதர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்றாய் மாறிப்போய் உள்ளது. காரணம், பலரும் இன்றைய தினசரி வாழ்க்கையில் இருந்து சில நாள் விடுபட்டு ஒரு புதிய அத்தியாயத்தை அடைய முற்படுகின்றனர். அப்படி இல்லையென்றால் எப்படி உலகளவில் சுற்றுலாத் துறையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி  2.75 ட்ரில்லியன் டாலர் அளவை (உலகளவில் 10. 4 சதவீதம்) எட்டும்? அதிலும் ஐந்தில் ஒருவர் சுற்றுலா மூலமே வேலைவாய்ப்பைப் பெறுகின்றனர் என்பதும் நம் இந்திய அளவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி என்பது நாளும் வளர்ந்து 4.2 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகிறது.

சுற்றுலா

  • இதனிடையேதான் சுற்றுலாவானது பல நிலைகளிலும் அவதாரங்கள் எடுத்து தற்போது வேளாண்மையிலும் வேளாண் சுற்றுலாவாக வளர்ந்து வருகிறது. "வேளாண் பண்ணையில் சுற்றுலாவாசிகளைத் தங்க வைத்து அவர்களுக்கு உணவளித்து வேளாண் பணிகளில் ஈடுபட வைத்து மேன்மை அடையச் செய்வதே' என்று வேளாண் சுற்றுலாவை உலகச் சுற்றுலா நிறுவனம் விளக்கியுள்ளது. 
  • இதைத் தவிர, வேளாண் சுற்றுலா என்பது பலவற்றையும் உள்ளடக்கிய ஒன்றாகும். ஆம். வேளாண் அறுவடையைக் கொண்டாடுவது, தோட்டத்தில் விளைந்த பழங்கள், காய்கறிகளை தேவையான அளவில் சுற்றுலாவாசிகளே அறுவடை செய்வது, பண்ணைக் குட்டைகளில் மீன் பிடிப்பது, ஊரக வேளாண் சந்தையைப் பார்வையிடுவது, கிராமப்புற கைவினைக் கலைஞர்களிடம் பொருள்கள் வாங்குவது,மாட்டு வண்டியில் சவாரி செய்வது, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேளாண் சார்ந்த வகுப்புகளை நடத்தி கற்றுக் கொடுக்க வைப்பது எனப் பலவற்றையும் கொண்டுள்ளது.
  • எனினும், வெளிநாடுகளில் பிரபலம் அடைந்த அளவுக்கு நம் இந்தியாவில் வேளாண்மைச் சுற்றுலா வளராமல் போனது பிழையே ஆகும். அதனை நிவர்த்தி செய்யும் வகையில்தான் தற்போது விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பாக்குவோம் என்று மத்திய அரசு சூளுரைத்துள்ளது. அதில் வேளாண் சுற்றுலாவும் முக்கியக் காரணியாய் அமைந்துள்ளது.
  • இதற்கிடையில் வேளாண் சுற்றுலாவின் வரலாற்றை சற்றே ஆராய்வோம். 1985-ஆம் ஆண்டில் இத்தாலிய தேசிய சட்ட கட்டமைப்பு வேளாண் சுற்றுலாவைக் கட்டமைத்தது. இயற்றப்பட்ட இந்தச் சட்டத்தின் மூலம் சுற்றுலாவாசிகளை பண்ணைகளில் தங்கவைத்துக் கொள்ளலாம்.

வேளாண்மை

  • இதனால், இயற்கையை நேசித்து வேளாண்மையை விரும்பி வரும் சுற்றுலாவாசிகளின் வருகை அதிகரித்து இத்தாலிய விவசாயிகளின் வருமானமும் பெருக ஆரம்பித்தது. அதன் பலனாய் விவசாயிகளும் விவசாயத்தை ஆர்வத்துடன் மேற்கொண்டு பல புதுமைகளையும் புகுத்தினர். இதனால் நாளடைவில்  வேளாண் சுற்றுலாவிற்கு பெயர்போன ஒன்றாக இத்தாலியில் உள்ள டஸ்கனி விளங்குகிறது.
  • இந்தியாவின் முதுகெலும்பான வேளாண்மையைச் செறிவூட்டி வளர்க்க வேளாண் சுற்றுலாவை நாமும் செயல்படுத்த வேண்டும். இந்தியாவில் நிகர விதைக்கப்பட்ட பகுதியாக  14.1 கோடி ஹெக்டேர் பரப்பளவில்  வெவ்வேறு கால நிலைகளுடன் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. மேலும், பயிர் சாகுபடி செய்யப்படும் ஒவ்வொரு நிலமும் அழகியதொரு சோலைவனமாக வெவ்வேறு வளங்களை தன்னகத்தே அடக்கியுள்ளது.
  • இதனை மனதில் வைத்துத்தான் மகாராஷ்டிர மாநிலத்தில் வேளாண் சுற்றுலா வளர்ச்சிக் கழகம் என்ற பெயரில் வேளாண் சுற்றுலா  2004-இல் பாண்டுரங் தவாரே  தொடங்கினார். முதலில் முன்னோடித் திட்டமாக மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாரமதி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. பின் தொடர்ந்து 500 விவசாயிகளுக்கு பயிற்சியும், 152 இடங்களும் தேர்வு செய்யப்பட்டன. இதனால் தொடக்கம் முதலே அங்குள்ள விவசாயிகள் தங்களின் வருமானத்தில் 25 சதவீதம் கூடுதல் வருவாயைப் பெற்றனர்.

உதாரணம்

  • உதாரணத்துக்கு மகாராஷ்டிரத்தில் உள்ள ஒரு வேளாண்மைச் சுற்றுலா பண்ணையின் செலவினங்கள் மற்றும் வருமானத்தைக் கணக்கில் கொண்டால், செலவினத்துக்கு ரூ.12 முதல் 15 லட்சங்கள் (கட்டடம் மற்றும் உள்கட்டமைப்பு நிலையான செலவு -ரூ.12-13.50 லட்சம் மற்றும் பராமரிப்பு மற்றும் வேலையாட்கள் கூலி ஆண்டு ஒன்றுக்கு-ரூ.1.50-2 லட்சம் வரை) தேவைப்படுகிறது. அதுவே வருமானம் ஆண்டுக்கு 5 லட்சம் (உச்சகட்ட காலநிலை பருவதிற்கான வருமானம்-ரூ.3 லட்சம் மற்றும் சராசரி பருவகாலத்தில் -ரூ.2 லட்சம் ) வரும்போது செலவினத்தை மூன்று ஆண்டுகளில் சமன் செய்து விடலாம்.
  • மேலும் நபர் ஒருவருக்கு பகல் மற்றும் இரவில் தங்குவதற்கு ரூ.600-1,000 வரையிலும், கோடைகாலத்தில் மூன்று நாள்களுக்கு ரூ.2,500-4,000 வரையிலும், அதுவே உழவர்க்கு பயிற்சி அளிப்பதென்றால் ஏழு நாள்களுக்கு ரூ.10,000 கட்டணமாகப் பெறப்படுகிறது.
  • இவை இன்றி பஞ்சாப், கர்நாடகம் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களிலும் சில தனியார் அமைப்புகள் வேளாண் சுற்றுலாவை  செயல்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும்படி வேளாண்மைச் சுற்றுலா இல்லை என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.   கலாசாராத்துக்கும், உழைப்புக்கும், வேளாண்மைக்கும் தமிழ்நாடு பெயர்போன ஒன்றாகும்.  இல்லையென்றால், இந்திய அளவில் (2017-ஆம் ஆண்டு) உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் முதலிடமும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இரண்டாமிடமும் தமிழகம் வகிக்க முடியுமா என்பதை இங்கு  கவனத்தில் கொள்ளவேண்டும்.

வேளாண் சுற்றுலா

  • எனவே, வேளாண் சுற்றுலாவை முதலில் அரசுப் பண்ணைகளில் முன்மாதிரியாக தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.
  • அவை மட்டுமின்றி தற்போது வளர்ந்து வரும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துடன் (1,000 விவசாயிகளை உள்ளடக்கியது) வேளாண் சுற்றுலாவை இணைத்து தொழிலாக மேற்கொள்ளும்போது நல்ல லாபத்தைப் பெறலாம்.
  • எனவே, தற்போதைய காலகட்டத்தில் பலரும் இயற்கையை விட்டு நம் பாரம்பரியத் தொழிலை விட்டு விலகியிருக்கும் சூழ்நிலையில் வேளாண் சுற்றுலா என்பது, "இந்தியா அதன் கிராமங்களில்தான் வாழ்கிறது' என்ற மகாத்மா காந்தியின் கூற்றை மெய்பித்துக் காட்டும்.

நன்றி: தினமணி (16-09-2019)

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories