TNPSC Thervupettagam

காந்தி என்கிற அடையாளம்!

October 2 , 2024 93 days 97 0

காந்தி என்கிற அடையாளம்!

  • புதுதில்லி மந்திர் மார்கிலுள்ள வால்மீகி கோயிலின் சுவர்களில் சில ஓவியர்கள் அண்ணல் காந்தியடிகளை நினைவுகூரும் அடையாளங்களை வரைந்திருக்கிறார்கள். 1946 ஏப்ரல் 1 முதல், ஜூன் 10-ஆம் தேதி வரையில் "வால்மீகி மந்திர்' என்று அழைக்கப்படும் அந்த இடத்தில்தான் மகாத்மா காந்தி 214 நாள்கள் தங்கி இருந்தார். அந்த ஓவியர்கள் வரைந்திருக்கும் ராட்டை, காந்திஜியின் இடுப்பில் தொங்கும் கைக்கடிகாரம், தண்டியில் அவர் உப்பை அள்ளும் காட்சி என ஒவ்வொன்றும் காந்திஜியின் அடையாளங்களாக அறியப்படுகின்றன.
  • இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற மகாத்மா காந்திக்கு நிகரான ஒரு மக்கள் தலைவரை சந்தித்ததில்லை என்பதுதான் உண்மை. காந்தியடிகளுடன் ஒப்பிடப்படுகிறவர்களும், அவரை விமர்சிப்பவர்களும் அவரைப்போல மக்கள் மனதில் எழுச்சியை ஏற்படுத்தவும் முடியவில்லை; அவருக்கு நிகராக உயர்ந்து நிற்கவும் முடியவில்லை.
  • அவருடைய கொள்கைத் தெளிவு, எளிமை, எந்தவொரு பிரச்னையிலும் மனசாட்சிக்கு விரோதமில்லாத நேர்மையான பார்வை ஆகியவைதான் மற்றவர்களில் இருந்து அவரைத் தனித்துவமாக உயர்த்தி நிறுத்துகின்றன. எந்தவித அடுக்குமொழிகளோ, தன்னுடைய அறிவுஜீவித்தனத்தை வெளிப்படுத்தும் சொற்சிலம்பமோ இல்லாமல் சாமானியர்களுக்கும் புரியும் மொழியில் சொல்ல வந்த கருத்தைக் கேட்பவர்களின் மனதில் பதிய வைப்பது காந்திஜியின் அணுகுமுறை.
  • தொலைக்காட்சிகளும், இணையமும், சமூக ஊடகங்களும், ஏன் சுதந்திரமாகப் பேசவோ விளம்பரப்படுத்தவோ உரிமைகூட இல்லாத காலகட்டம் மகாத்மா காந்தி விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய காலம். ரயிலில் காந்திஜி செல்கிறார் என்றால், ரயில் தண்டவாளத்தின் இருபுறமும் நூற்றுக்கணக்கான மக்கள் அணிவகுத்து அவரை தரிசிக்கக் காத்திருப்பார்கள் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அதுபோன்ற செல்வாக்கு, மக்களின் அபரிமிதமான நம்பிக்கை பெற்ற அரசியல் தலைவர், ஆளுமை இன்றுவரையில் உண்டா?
  • காந்திஜியின் ஒவ்வொரு செயலுக்கும் ஓர் அர்த்தம் இருந்தது. தில்லி வால்மீகி மந்திரில் வரையப்பட்டிருக்கும் படங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் அவர் இந்தியாவிற்கும், மனித இனத்துக்கும் விடுத்த செய்தி இருக்கிறது. அவை வெறும் அடையாளங்கள். அதன் வழியே மிகப் பெரிய செய்தியை அவர் சொன்னார். அடையாளங்கள் மூலம் சட்டென்று புலப்படாத உணர்வுகளையும், ஆழமான கருத்துக்களையும் மக்கள் மனதில் பதிய வைக்க முடியும் என்று தெரிந்து வைத்திருந்தார் அவர்.
  • கைராட்டை சிலருக்கு ஏளனப் பொருளாகத் தோன்றலாம். நூறு ஆண்டுகளுக்கு முன்னால், இன்று விளம்பரப்படுத்தப்படும் "இந்தியாவில் தயாரிப்போம்', "தற்சார்பு இந்தியா' போன்ற கருத்துக்களின் முன்னோடியே அந்த ராட்டைதான்.
  • ராட்டையில் தினந்தோறும் நூல்நூற்பதன் மூலம் பொருளாதாரத்தை கட்டமைக்க முடியுமா என்கிற குதர்க்கம் அறிவின்மையின் வெளிப்பாடு. இந்தியா, அந்நிய இயந்திரத் தயாரிப்புகளுக்கு அடிமையாகாமல், தற்சார்புடன் திகழ வேண்டும் என்பதன் அடையாளம்தான் "ராட்டை' என்பது தெரிந்தவர்களுக்குத் தெரியும்.
  • தினமும் குறிப்பிட்ட சில மணி நேரம் ராட்டையில் நூல் நூற்பது என்பது, நுகர்வுக் கலாசாரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் உலகத்துக்கு அவர் வழங்கிய உளவியல் தீர்வு. அமைதியாக ராட்டை நூற்பதன் மூலம் உள்ளத்தின் விகாரங்களை, ஆத்திர, குரோத உணர்வுகளை அடக்கி ஆளும் உபாயம் என்று உணர்த்தப்பட்டது. கிராமப் பொருளாதாரம், தற்சார்பு, தியானம் உள்ளிட்ட பல செய்திகளை அந்த ராட்டை உள்ளடக்கி இருக்கிறது.
  • தண்டி யாத்திரையை மேற்கொண்டு உப்பு அள்ளுவது என்பதும்கூட, காந்தியாரின் அடையாள செயல்பாடுதான். "நாங்கள் உப்பிட்டு உண்ணும் சொரணையுள்ள இந்தியர்கள்' என்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு அவர் விடுத்த செய்தி அது. பொதுவான கடலிலிருந்து நாம் தயாரிக்கும் உப்பை எடுக்கக்கூட உரிமையற்றவர்களாக இருக்கிறோம் என்பது கடைக்கோடி இந்தியர்களுக்கு அவர் விடுத்த செய்தி.
  • கழிப்பறைகளைக் கழுவினார்; தனது துணிமணிகளை தானே துவைத்தார். எந்தவொரு செயலும் இழிவானதோ, குறைவானதோ அல்ல என்பதை உணர்த்துவது மட்டுமே அதன் நோக்கமல்ல. சுகாதாரம், தூய்மை மட்டுமே அவரது குறிக்கோள் அல்ல. சமூகத்தைப் பீடித்திருக்கும் தீண்டாமை நோயைத் தீர்ப்பதற்கு அவர் கண்ட மருந்து அந்தச் செய்கைகள்.
  • ஆடம்பரத் துணிகளை உடுத்தாமல் அரை நிர்வாணமாக அவர் இருந்ததை பிரிட்டிஷ் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலால் புரிந்துகொள்ள முடியாததில் வியப்பில்லை. சாமானிய விவசாயிக்கு, அடித்தட்டு இந்தியருக்கு "நான் உங்களில் ஒருவன்' என்று உணர்த்தும் அடையாளம் அது. அதுமட்டுமல்ல, பின்னாளில் வரவிருக்கும் நுகர்வுக் கலாசாரத்துக்கு எளிமையும், அடக்கமும்தான் சரியான பாதை என்பதை நினைவுபடுத்தும் அடையாளமாகவும் அதைக் கொள்ளலாம்.
  • காந்தி என்பது ஒரு காந்த சக்தி. அதனால்தான் உலகின் உன்னத தலைவர்கள் எல்லோரும் அவரை "மகாத்மா' என்று ஏற்றுக்கொண்டு அண்ணாந்து பார்க்கிறார்கள்.
  • அவரை எதிர்ப்பவர்கள், விமர்சிப்பவர்கள் அவர் வாழ்ந்தபோதும் இருந்தார்கள்; இப்போதும் இருக்கிறார்கள்; எப்போதும் இருப்பார்கள். அவரை விமர்சிப்பதன் மூலம் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்பவர்களில் ஒருவர்கூட, காந்திஜியின் உயரத்தை எட்ட முடிந்ததில்லை. உலகளாவிய அளவில் அழியாப் புகழ் அடைந்ததில்லை.
  • காந்தி தனிமனிதரல்ல - அவர் இந்தியாவின் அடையாளம்; இந்தியத்துவத்தின் அடையாளம்!

நன்றி: தினமணி (02 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Categories