- வருங்காலம் எப்படி இருக்கும் என்பதைப் பார்த்துக்கொண்டிருக்க நான் விரும்பவில்லை. இக்காலத்தில் நடப்பதைக் கவனிப்பதே என் வேலை. வரப்போவதைக் கட்டுப்படுத்திவிட கடவுள் எனக்கு அதிகாரத்தைக் கொடுத்துவிடவுமில்லை.
- கிறுக்கன், விசித்திரப் போக்குடையவன், பைத்தியக்காரன் என்றெல்லாம் என்னைச் சொல்லுகிறார்கள். இந்தப் புகழுக்கு நான் உரியவனே என்பதும் தெளிவாகிறது. நான் எங்கே போனாலும், கிறுக்கர்களையும் விசித்திரப் போக்குள்ளவர்களையும் பைத்தியக்காரர்களையும் என்னிடம் கிரகித்துக்கொண்டுவிடுகிறேன்.
- நான் தீர்க்கதரிசி என்பதை மறுக்கிறேன். நான் தெய்வீகத் தன்மை வாய்ந்தவன் என்று சொல்லப்படுவதையும் ஒப்புக்கொள்ளவில்லை. நான் மண்ணாலானவன், மண்ணாக இருக்கிறேன்... உங்களுக்கு எத்தனை பலவீனங்கள் இருக்குமோ அவ்வளவையும் அடைந்துவிடக்கூடியவனே நான். ஆனால், நான் உலகத்தைப் பார்த்திருக்கிறேன். கண்களை நன்றாகத் திறந்துகொண்டு இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கிறேன். மனிதனுக்கு ஏற்படும் எல்லாக் கடுமையான கஷ்டங்களையும் நான் அனுபவித்திருக்கிறேன். இந்தக் கட்டுத்திட்டங்களில் நான் வந்திருக்கிறேன்.
- மிக மோசமான எதிரியுடனும்கூட கொஞ்சம் சாக்குக் கிடைத்தாலும் ஒத்துழைக்க வேண்டும் என்ற மிகுந்த ஆவல் என்னுடைய ஒத்துழையாமையில் எப்போதும் இருந்துவருகிறது. குறைபாடுகளே உடைய மனிதனாகவும், என்றும் கடவுளின் கருணை தேவைப்படுபவனாகவும் இருக்கும் எனக்கு யாருமே திருத்திவிட முடியாதவர்களாகத் தோன்றவில்லை.
விவாதம்
- நான் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்புகிறேனோ அவ்வாறே நான் இருந்துவிட்டால், அப்போது யாருடனும் நான் விவாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. என் சொல் நேராக அவர்கள் உள்ளத்தில் பதிந்துவிடும். உண்மையில், நான் ஒரு சொல்லையும் சொல்ல வேண்டியதுகூட இல்லை. விரும்பும் பலனை அடைவதற்கு என்னளவில் உறுதி இருந்தால் மாத்திரமே போதும். ஆனால், எனக்குள்ள குறைபாடுகளை வேதனையுடன் நான் உணர்ந்தே இருக்கிறேன்.
- மற்றவர்கள் நினைப்பது தவறானது, நம்முடையது ஒன்றே சரியானது, நம் கருத்துக்கு மாறுபட்ட கருத்துள்ளவர்கள் நாட்டின் விரோதிகள் என்று சொல்லுவது கெட்ட பழக்கம்.
- நமக்கு எவ்வளவு யோக்கியப் பொறுப்பும் தேசாபிமான நோக்கமும் இருக்கின்றன என்று சொல்லிக்கொள்ளுகிறோமோ அவ்வளவு நம் எதிராளிகளுக்கும் இருக்கின்றன என்று கருதி அவர்களையும் கெளரவிப்போமாக.
நன்றி இந்து தமிழ் திசை(21-08-2019)